என் மலர்
நீங்கள் தேடியது "elaneer"
- கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகி வருகிறார்கள். இந்த வாரம் நல்ல, தரமான குட்டை, நெட்டை வீரிய ஓட்டுரக மரங்களின் இளநீர்விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருடன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர்வரத்து மிக மிக குறைவாக இருப்பதால் பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இயற்கையின் அற்புதங்களுள் ஒன்று இளநீர்.
- நீரிழப்பு, வெப்ப பக்கவாதத்தில் இருந்து காக்கும்.
இளநீர் இயற்கையின் அற்புதங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. வேரில் இருந்து உறிஞ்சப்படும் நீரை தென்னை மரம் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உச்சி பகுதியில் காய்க்கும் தேங்காயில் சேமித்து வைத்து ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. அதில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன.

குறைந்த கலோரியும், கொழுப்பு இல்லா தன்மையும் இளநீரை அனைவருக்கும் ஏற்ற பானமாக மாற்றுகிறது. இளநீரில் இருக்கும் ஒவ்வொரு துளியும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கு ஊட்டச்சத்தையும் அளிக்கும். நீரிழப்பு, வெப்ப பக்கவாதத்தில் இருந்து காக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மையில் இருந்து உடலை பாதுகாக்கும்.
காலையில் நடைப்பயிற்சி செய்து முடித்ததும் பலர் இளநீர் அருந்தும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி பருகுவது உடலை வெப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும். உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
இளநீர் எந்த நேரத்தில் பருகுவது சரியானது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் இளநீர் பருகுவதற்கு சரியான நேரம் ஏதும் இல்லை. காலையில் வெறும் வயிற்றிலும், மதிய உணவுக்கு பிறகும், இரவில் சாப்பிட்ட பிறகும் பருகலாம். மற்ற நேரங்களிலும் கூட பருகலாம். அதேவேளையில் பருகும் நேரத்திற்கு ஏற்ப அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அமையும்.
நடைப்பயிற்சி அல்லது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் காலை வேளையில் பயிற்சியை முடித்ததும் இளநீர் பருகுவது உடல் சோர்வை போக்கும். உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். உடற்பயிற்சி செய்தபோது ஏற்பட்ட நீர் இழப்பை ஈடு செய்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
மதியம் சாப்பிட்ட பிறகு இளநீர் பருகுவதன் மூலம் செரிமான செயல்பாடுகள் மேம்படும். இரவு உணவு உட்கொண்ட பிறகு இளநீர் பருகுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

சிறுநீரக பிரச்சினைகள் அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இளநீர் பருகக்கூடாது.
100 மி.லி. இளநீரில் 18 கலோரிகளே உள்ளன. 0.2 கிராம் புரதமும், 4.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், 4.1 கிராம் சர்க்கரையும், 165 மில்லி கிராம் பொட்டாசியமும் உள்ளடங்கி இருக்கின்றன.
- 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இளநீர் தினமும் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், உத்திரபிரதேசம், அசாம், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இதன்காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4 லட்சம் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 3 லட்சம் இளநீர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விவசாயிகள் கூறியதாவது:-
தென்னை விவசாயத்தில் தற்போது நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளநீர் காய்களின் மேற்பகுதி சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவோ, தரமோ குறைவதில்லை. இருந்தபோதிலும் இளநீர் காயின் தோற்றத்தை வைத்து வியாபாரிகள் விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வெளிச்சந்தையில் இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் அங்கு தற்போது இளநீரின் தேவை குறைந்து உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இளநீருக்கு தேவை இருப்பதால் அவற்றின் விலையில் மாற்றம் இல்லை. இதன்காரணமாக நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை ரூ.22 ஆகவும், ஒரு டன் ரூ.8250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.