என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Engineer death"
பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தை சேர்ந்தவர் ஹசன்கான் மகன் ஷாஜகான் (வயது 21). அதே ஊரை சேர்ந்தவர் நசீர் மகன் ஷாஜித்கான் (21).
இவர்கள் இருவரும் தங்களது நண்பரான மண்ணச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த கப்பல் துறையில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த முகுந்தன் (37) என்பவருடன் துறையூர் அருகே உள்ள வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட கோரையாறு பகுதிக்கு நேற்று மாலை சென்று அங்குள்ள அருவியில் குளித்துள்ளனர்.
அப்பொழுது அந்தப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், கோரையாற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஆற்றை விட்டு வெளியேற முடியாத மூன்று பேரும் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். பாறைகளை பிடித்து வெளியே வர முயன்றும் முடியவில்லை.
கரை புரண்ட வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக ஷாஜகான் மற்றும் ஷாஜித்கான் இருவரும் வெள்ளப்போக்கின் வழியிலேயே தடுப்புகளை பிடித்துக்கொண்டு கரை சேர்ந்தனர். ஆனால் முகுந்தன் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து முகுந்தனின் நண்பர்கள் இருவரும், அப்பகுதி பொதுமக்களும் துறையூர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியால் முகுந்தனின் உடலை நள்ளிரவு 12 மணிக்கு மீட்டனர்.
பாறை இடுக்கில் சிக்கியிருந்த முகுந்தனின் உடல் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த என்ஜினீயர் முகுந்தனுக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரமக்குடி ஆரியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் இருளன்சேதுபதி (வயது 19). இவர் திருக்குவளையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து இருளன்சேதுபதி மற்றும் அவரது நண்பர்களான நவீன்வரதன், கவுசிக்ராஜன், நிஷாந்த், கோகுல்ராஜன், கோகுல் ஆகியோருடன் திருக்குவளையில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு உள்ள குளத்தில் நவீன்வரதன், கவுசிக்ராஜன், இருளன்சேதுபதி ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது திடீரென இருளன்சேதுபதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி இருளன் சேதுபதியின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை, கே.கே.நகர், ராமசாமி சாலையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது34). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் இளங்கோவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்லப்பாண்டி (வயது 23). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி வேப்பூர் சென்றுவிட்டு புதுவேட்டக்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அதே ஊரைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (35). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று தனது மனைவி வெண்ணிலா மற்றும் 1 வயது குழந்தையான அஸ்வின் கார்த்திக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புது வேட்டக்குடியில் இருந்து வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கருங்குட்டை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த செல்லப்பாண்டியன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் திருச்சி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நேற்று இரவு செல்லப்பாண்டியனும், இன்று காலை ரமேசும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் செல்லப்பாண்டியன் மது போதையில் இருந்ததால் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. பொங்கல் பண்டிகை தினத்தன்று 2 பேர் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் அருகே உள்ள செந்துறை கக்கன் காலனியை சேர்ந்தவர் முத்து பழனி. அவரது மகன் மணிகண்டன். (வயது 22). சென்னையில் என்ஜினீயராக உள்ளார்.
இவர் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கு வந்து உள்ளார். இவரது பாட்டி வீடு மோர்பட்டியில் உள்ளது. எனவே பாட்டியின் நினைவு நாளை கடைபிடிப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் மோர்பட்டிக்கு சென்றார்.
பின்னர் இரவு நேரத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். செந்துறை அருகே அய்யனார் அருவி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் புளியமரத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை இரவு நேரத்தில் யாரும் பார்க்கவில்லை. எனவே பரிதாபமாக மணிகண்டன் இறந்தார்.
இரவு முழுவதும் மணிகண்டன வீடு திரும்பவில்லை என்று அறிந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் சாலை ஓரத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள்.
பாலவாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 23) என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் நோக்கி திரும்பி வந்தார்.
அப்போது கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள கொம்பாடிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மின்என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரும் நண்பர்கள்.
இவர்கள் 2 பேரும் விருத்தாசலத்தில் இருந்து கொம்பாடிகுப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார். அந்த மோட்டார் சைக்கிள் நெய்வேலி அடுத்த சாத்தமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மகேஷ் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பலத்த காயம் அடைந்த மகேசை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் பொன்குமார் (வயது 25). என்ஜினியர்.
இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொன்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பொன்குமாரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அவரை அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு இன்று காலை பொன்குமார் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் ராஜபாளையம் கொண்டு வரப்பட்டது. சுகாதார துறையினரும், வருவாய் துறையினரும் விரைந்து வந்து மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர். #DengueFever
மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 38). இவர் சிவகங்கையில் உள்ள கட்டிட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். செய்களத்தூர் விலக்கில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முகமது இஸ்மாயில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மடுகரை வீதியை சேர்ந்தவர் வீரய்யன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யசோதை. இவர்களது ஒரே மகன் விவேக் அசோக் பிரசாத் (வயது 27). இவர், எம்டெக் (என்ஜினீயரிங்) படித்து முடித்து வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் விவேக் அசோக்பிரசாத் நேற்று மோட்டார் சைக்கிளில் புதுவை வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
புதுவை சுப்பையா சாலை ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் விவேக் அசோக் பிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இதில், நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த விவேக் அசோக் பிரசாத் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவேக் அசோக் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சஜீத் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.