search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EPS"

    • சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
    • புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல்தான் இருந்துள்ளது.

    சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குச் சென்னை திரும்பியுள்ளது.

    இதற்கு முதலமைச்சரின் போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

    சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் 5 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாகத்தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் இன்று உயிர்ச்சேதங்கள் இல்லை

    தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு உயிர்கள்

    எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரு நாட்களில் சரிசெய்யப்படும்.

    திருவண்ணாமலையில் வழக்கம்போல் கார்த்திகை மகா தீபத்திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
    • வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

    விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

    மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
    • மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் என்ற அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கு மணிப்பூரில் வாழும் பாரம்பரிய குகி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு இன மக்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

    இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. அன்று இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து குகி பழங்குடியின மக்கள் ஆத்திரம் அடைந்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இனக் கலவரம் அதிகரித்து பொது சொத்துக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்கு தீ வைப்பது, இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த நேற்று (18.11.2024) மத்திய அரசு கூடுதலாக 50 கம்பெனிகள் மத்திய படையை அனுப்பியுள்ளது.

    புதிய அரசு பதவியேற்றப் பிறகும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினருக்கு இடையே தொடர்ந்து கலவரம் நடப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

    2008-2009ம் ஆண்டுகளில் இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது. அதுபோல் இல்லாமல், தற்போது மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் எடுத்து மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தளவாய்சுந்தரம் வருத்தம்.

    தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கியது அ.தி.மு.க. தலைமை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அ.தி.மு.க. கட்சியில் இருந்து தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டு இருந்தார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவும் அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுருந்தது.

    இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தளவாய்சுந்தரம் வருத்தம் தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இதுதவிர இன்று முதல் அவர் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும், கோரிக்கையை நிறைவேற்றுவதும் திமுகதான் என்பதை அவர்களே அறிவார்கள்.
    • மொட்டை காகித அறிக்கை என்றால் அது அதிமுகதான் என்பது உலக வரலாறு

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என்று நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை 'மொட்டை'த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. 'சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்' என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி 'கபட வேடதாரி' என்றெல்லாம் பேசலாமா?

    அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை 'மொட்டைக் காகித அறிக்கை' எனச் சொல்லியிருக்கிறார் திரு. பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா?

    'மொட்டைக் காகித அறிக்கை' என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து 'மொட்டையாக' வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்' என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை' என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!

    அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.

    2001-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 24-7- 2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும்போது ''அரசின் வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது" என்று சொல்லி அரசு ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டினார். அதோடு அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார்.

    அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் 2003 ஜூலை 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை 04-07-2003-இல் பிறப்பித்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை எல்லாம் நள்ளிரவில் வீடு தேடிப் போய்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தனர். 'ஸ்டிரைக் செய்ய மாட்டோம்' என்ற உறுதிமொழியுடன் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிப் பலரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தார்கள். ''கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம் அரசு ஊழியர்களுக்கு மறுவாழ்வு தாருங்கள்'' என முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் விடுத்த கோரிக்கையை எல்லாம் ஜெயலலிதா புறந்தள்ளினார்.

    ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ''இவ்வளவு சம்பளமா?'' என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ''அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?'' என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

    பழனிசாமி ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்றைக்கு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கமான கேலி கிண்டல் பத்திரிகையாளர் சந்திப்பைப் போலவே அந்தப் போராட்டத்தையும் டீல் செய்தார். ''கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்'' என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். ''அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்'' எனக் காட்டமாகச் சொன்னார்.

    அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார்? 'தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' என அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பியது எல்லாம் பச்சைப் பொய் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா? இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த விளம்பரத்தை வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்தனர்.

    இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைப் போலவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக அன்றைக்கு 46,54,361 ரூபாய் செலவிட்டனர்.

    பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செப்டம்பர் 7,2017-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, 7-வது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சிறிதும் மதிக்காமல் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த அரசுதான் அ.தி.மு.க. அரசு. இப்போராட்டங்களுக்குப் பிறகுதான் அன்றைய அ.தி.மு.க. அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது. இன்று அதனைத் தனது சாதனையாக குறிப்பிடும் பழனிசாமி அவர்களின் உள்ளத்தில் உண்மை இருந்தால் அதைச் சொல்வதற்குக் கூசியிருக்க வேண்டும்.

    அனைத்திற்கும் மேலாக 2016, 2017, 2019 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17B), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவிய பழனிசாமி "எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும்" எனக் கூறுவது பச்சைப் பொய்யாகும். "கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளைக்கு" என்பார்கள் ஆனால் பழனிசாமி அடித்து விடுகின்ற பொய்கள் எட்டு நிமிடத்திற்குக் கூட தாங்காது.

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். ''பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்' எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது Sadist Government போல ஆட்சி நடத்தி அரசு ஊழியர்களை ஒடுக்கியவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை. 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 13.10.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

    அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகற்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

    தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அதற்குச் சாட்சியமாய் விளங்குவதுதான் தொடர்ந்து தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு அளித்து வரும் வெற்றிகள்.

    'கபட வேடதாரி' பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • வேளாண் நிலங்களின் விபரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்கும் திட்டத்திற்கு மாணவர்களை ஈடுபடுத்துவதா?
    • மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் செலவின்றி செய்ய திமுக அரசு துடிக்கிறது.

    வேளாண் நிலங்களின் விபரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்கும் திட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதில், அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களை டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பில் ஈடுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் வேளாண் நிலம், பரப்பளவு, அதன் தன்மை, சாகுபடி, போன்ற அனைத்து விபரங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும், நிலங்களின் வகைகளை டிஜிட்டல் சர்வே முறையில் தொகுத்து வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதனை, வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    டிஜிட்டல் சர்வே திட்டத்தை சுமார் ரூ. 2,817 கோடியில் மேற்கொள்ளவும்; மத்திய அரசு நிதியாக சுமார் ரூ. 1,940 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாகவும், இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு, ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு ஏதுவாக அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் நில அளவு நில வகைப்பாடு, சாகுபடி பரப்பு மற்றும் சாகுபடி பயிர்கள், பாசன வசதிகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை அளிக்குமாறு 2023-ஆம் ஆண்டே பணித்திருந்தது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்காளா, கர்நாடகா, கேரளா உட்பட பல மாநிலங்கள் 90 சதவீத பணிகளை முடித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

    தமிழகத்தில் உள்ள நிலங்களின் அளவு, வகைப்பாடு வகைகள் பற்றிய முழு விவரமும் வருவாய்த் துறையிடம் உள்ளது. எனவே, மாநில அரசு வருவாய்த் துறை டிஜிட்டல் சர்வேக்கு தேவைப்படும் வகையில் புள்ளி விவரங்களைக் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க முடியும். மேலும், வருவாய்த் துறை ஏற்கெனவே தங்களுக்குள்ள பணிச் சுமையுடன் கூடுதலாக இப்பணியை செய்யும்போது, அதற்கென்று ஒரு மதிப்பூதியத்தை வழங்கலாம். இதன்மூலம் 100 சதவீத புள்ளி விவரங்கள் டிஜிட்டல் சர்வேக்கு வழங்க முடியும்.

    ஆனால், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இதுவரை ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்தப் பணியை மேற்கொள்வதற்கு கூடுதல் சிறப்பூதியம் கேட்டு, பணிகளை துவக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதற்குக் காரணம், இந்தத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது என்பதுதான் என்று செய்திகள் வந்துள்ளன.

    மற்ற மாநிலங்களில் டிஜிட்டல் சர்வே அந்தந்த மாநில வருவாய்த் துறை மற்றும் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் திரு. ஸ்டாலினின் திமுக அரசு மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தப் பணியை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக செலவிட மனமில்லாத இந்த ஏமாற்று மாடல் அரசு, கிராம நிர்வாக அலுவவர்களுக்கு பதில், அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களை டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பில் ஈடுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

    வருவாய்த் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியை, வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை செய்ய ஈடுபடுத்தியதால் மாணவர்களின் படிப்பு பாதிப்படைந்து உள்ளது. டிஜிட்டல் சர்வே பணிகளை மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதன் மூலம் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கழிப்பிட வசதி, முதலுதவி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளதாகவும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.

    சர்வே பணிக்கு செல்லும் கிராமம், மலைப் பகுதி போன்ற பாதுகாப்பற்ற தொலைதூர பகுதிகளில் சர்வே பணிகளில் ஈடுபடும் மாணவ, மாணவியர்களுக்கு சமூக விரோதிகளாலும், பாம்பு மற்றும் தேள் போன்ற விஷப் பூச்சிகளினாலும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் இது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

    தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதன் மூலமாகவும், இப்பணியை தமிழகத்தில் எளிதாக செய்ய முடியும்.

    இதைவிடுத்து, மாணவர்களைப் பயன்படுத்தி செலவின்றி செய்யத் துடிக்கும் இந்த அரசு. அதற்காக மத்திய அரசு ஒலுக்கிய நிதியை என்ன செய்யப் போகிறது. கல்வி பயில வேண்டிய மாணவர்களை இத்தகைய கடினமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், மாணவர்களை உடனடியாக இப்பணிகளில் இருந்து விடுவிக்க வலியுறுத்துகிறேன்.

    மத்திய அரசு, வேளாண் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு நேரங்களில் நேரடியாக நிதி வழங்குவதற்கும் மானியம் வழங்குவதற்கும் இந்த டிஜிட்டல் சர்வேக்களை பயன்படுத்தக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கும் நிலையில், எவ்வித முன்அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100 சதவீதம் சரியாக இருக்குமா? அதில் தவறு ஏதேனும் ஏற்பட்டால் யார் அதற்கு பொறுப்பேற்பார்கள்? வருவாய்த் துறை அலுவலர்களோ, தனியார் நிறுவனமோ இத்தகைய புள்ளி விவரங்களை வழங்கும்போது அதற்கு அவர்கள் முழு பொறுப்பேற்பார்கள்.

    எனவே, இந்த சர்வே பணியில் ஈடுபடும் வருவாய்த் துறையினருக்கு மதிப்பூதியம் வழங்கியோ அல்லது தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தோ, குறித்த காலத்திற்குள் டிஜிட்டல் சர்வே பணிகளை முடிக்குமாறும், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • மான நஷ்ட ஈடாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    கொடநாடு கொலை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசக்கூடாது என உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால், ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரின் சகோதரர் தனபால் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேட்டி அளித்து வந்தார்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான மனுவில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதுவரை அவதூறாக பேசி வந்த தனபால் ரூ. 1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    • அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அடிப்படையில் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. பிரிந்த இயக்கத்தை ஒன்றிணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவை சேரும்.

    துவக்க விழா என்பது சாதாரணம் அல்ல. அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவை அனைத்தையும் வீழ்த்தியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.

    அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது.

    கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக.

    தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கின்றது திமுக. அதிமுக சொந்த காலில் நிற்கிறது. சொந்த காலில் நிற்கின்றவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. திமுகவிற்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியினர் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

    திமுக ஆட்சியில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்முன் நீட் ரத்து என சொன்னார்கள். இதுவரை நீட் ரத்துகான ரகசியத்தை உதயநிதி வெளிவிடவில்லை"

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.

    மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

    சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

    மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

    அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுத் திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்.

    யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மஜக தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல் கூறுகையில்,"சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை தருகிறது. பாசிச சக்திகள் அதிகார மிடுக்குடன் நாட்டை மிரட்டி வரும் காலகட்டத்தில்; அதை எதிர்த்து முன் களத் தலைவராக அவர் நின்றாடிய அரசியல் களம் அனலாக இருந்தது. கம்யூனிச இயக்கம் மேலும் வலுவாக நடைபோட வேண்டிய தருணத்தில், அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும்" என்றார்.

    • மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
    • இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன்.

    மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக தகவல் வெளியாகியது.
    • எந்தவித நிபந்தனையும் இன்றி, 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    சென்னை:

    'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

    இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

    'ஒரே வார்த்தையில் அழைத்தோம் - மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

    'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

    மாடல்ல மற்றை யவை'

    என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக்கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோய் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன.
    • பல கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய சிவராமன் தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    சென்னை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார். சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது.

    இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலும், காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை திரு. அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

    போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

    ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

    பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    ×