என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "federal government"
- கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
- தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
சென்னை:
பாராளுமன்றத்தில் பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிச்சாங் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளநீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
எனவே, மத்திய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழக அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
- கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தினால் 13 கோடி சிறிய மற்றும் ஏழை விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இணைய பாதுகாப்பு, தரவுகள் சேமிப்பு வசதிகளுடன் இந்த கணினிமய திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், முற்றிலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை நீக்குவது என பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து உற்பத்தியாளர்களுக்கு சந்தை சுதந்திரத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் அரசுக்கோ, அரசால் நியமிக்கப்படுவோருக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் கச்சா எண்ணெயை உள்நாட்டு சந்தையில் விற்க முடியும் என்றும் மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை அவரி திடலில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் இருக்கக் கூடிய ஆட்சியை காலி செய்ய நேரம் வந்துவிட்டது. மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. தமிழ் நாட்டை மீட்கவும், இந்தியாவை காக்கவும் அனைத்து மக்களும் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
மோடி வித்தைக்கு முடிவு கட்டுவதற்குதான் இந்த தேர்தல் வந்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2017-2018 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ,4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நடக்காது.
வறட்சி உள்ளிட்ட பிரச்சினையால் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு 2015-ம் ஆண்டில் 12,602 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 2016 - ம் ஆண்டு கணக்கெடுப்பில் 16,400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்கள் நடக்காது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும் .
இவ்வாறு அவர் கூறினார். #veeramani #tngovt #federalgovernment
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
காஷ்மீரில் உள்ள புலவாமாவில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடுர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுடன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16-ந் தேதி மோத இருக்கும் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்களில் ஒரு சிலர் வற்புறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி வெளியேற்ற முயற்சிக்க வேண்டும் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டுமா? என்பது குறித்து ஆலோசிக்க கூடிய இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் உரிய நேரத்தில் இந்த விஷயம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியிடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேட்டதற்கு பதில் அளிக்கையில், ‘புலவாமா தாக்குதலில் உயிரை இழந்த துணை ராணுவ படை வீரர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். நடந்த துயர சம்பவத்தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளிதானது. நாடு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறதோ? அது தான் எங்களது அடிப்படை கருத்தாகும். இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம். இந்த விஷயத்தில் இது தான் எங்களது நிலைப்பாடாகும்’ என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கேப்டன்கன் அசாருதீன், கங்குலி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், தெண்டுல்கர் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடி வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
தற்போது நிலவும் சூழ் நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை பற்றி நம்மை போன்ற மக்கள் முடிவு எடுக்க கூடாது. இது மத்திய அரசால் முடிவு எடுக்கப்பட வேண்டியது.
இதனால் நமது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்காமல் இருப்பது நல்லது. எனவே இந்த முடிவை அரசு மற்றும் அது தொடர்புடையவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.
இந்த முடிவு நாட்டின் நலன் கருதி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும். எனவே அதன்படி நாம் செயல்படுவோம்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
அரசு அனுமதிக்கும் வரை இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறாது என்று ஐ.பி.எல். தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்து இருந்தார்.
உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ந்தேதி நடக்கிறது.
கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ல் முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #KapilDev #pulwama #IndiavsPakistan
மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில், முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங்கள் (சீட்டு கம்பெனி), ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது. இவை அனைத்து நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மின்னணு கொள்கை உருவாக்கவும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் 2025-ம் ஆண்டுக்குள் 1 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், ரூ.28 லட்சம் கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொழில்களை உருவாக்குவது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.
மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.
எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.
இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.
தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal
அவனியாபுரம்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது வர வேற்கத்தக்கது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.
சேலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 5-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் விலகி, ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும். திருச்சியில் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும். பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதால் தொழிலாளர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 2 மணி நேரம் பட்டாசு வெடித்தால் காற்று மாசு பாடு ஏற்படாதா? எனவே எந்தெந்த வெடிகளை வெடிக்க வேண்டும் என வரையறை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #neutrinoproject
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் டாட்டா நிறுவனம் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு சமர்ப்பித்தது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு 4-ந்தேதி (நேற்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் எந்த அதிகாரியும் ஆஜராகவில்லை. இதனால் விளக்கம் அளிக்காத மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து டாடா நிறுவனம் தரப்பில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட பிறகே ஆய்வு மையத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டது என வாதிடப்பட்டது.
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வக்கீல் வாதிடுகையில், சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனத்தில் சிறப்பு நிபுணர்கள் கிடையாது. அதனால் அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு கருத்து கேட்கவில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழக அரசு எப்படி வனத்துறை நிலத்தை ஒதுக்கியது?. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை இருக்கும்போது இந்த திட்டம் அதில் கூறப்பட்டு இருப்பதற்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?. அணுவை பல துகள்களாக சிதற அடிக்கும்போது சுற்றுச்சூழலும் பாதிப்பு அடையாதா?. இது தொடர்பாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனமும் 8-ந்தேதிக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். #Neutrino #NGT #NationalGreenTribunal #FederalGovernment
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், சுமார் 2½ கி.மீ பரப்புக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் டாட்டா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில், “ஏற்கனவே மனுதாரர்கள் தரப்பில் சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக தடையில்லா சான்றிதழ் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என அறிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர்” என்று கூறப்பட்டது.
மனுதாரர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், “நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி அளித்ததில் பல விதிமீறல்கள் உள்ளன. அப்பகுதி மக்களிடம் எவ்வித கருத்து கேட்பும் நடத்தவில்லை. இந்த திட்டத்தால் என்னென்ன சுற்றுச்சூழல் மாற்றம் நிகழும் என்பது தொடர்பாக அவர்களது அறிக்கையில் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழக அரசு தரப்பில், “இந்த திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று கூறி மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே கருத்துகேட்பு கூட்டத்தை மாநில அரசு நடத்த முடியாது” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 2017-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு நாளை (இன்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்று (வியாழக் கிழமை) ஒத்திவைத்தனர். #Neutrino #FederalGovernment #NationalGreenTribunal
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு கமிஷன் கலாசாரம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக பல்வேறு திட்டங்களும் தாமதமாகி முடங்கி கிடக்கின்றன. மாநில அரசு ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த அக்கறை காட்டுவதில்லை என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒடிசா அரசு மீது ஊழல் புகார்களை கூறி இருக்கிறார்.
உண்மையிலேயே ஊழல் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அவர் ஆய்வு செய்து பார்க்கட்டும் உச்வாலா திட்டம், ஸ்கில் மிஷன் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நினைத்தால் ஆய்வு மேற்கொள்ளலாம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஸ்மேன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட ஒடிசா அரசு ஏற்கனவே சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள். மத்திய அரசு ரூ.5 லட்சத்துக்கு தான் காப்பீடு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு ரூ.7 லட்சம் காப்பீடு வழங்குகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டத்தை விட மாநில திட்டத்தில் கூடுதலாக 25 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் இதை நாங்கள் பின்பற்றுகிறோம்.
எங்கள் அரசு மீது வேண்டும் என்றே பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
முதலில் மத்திய அரசு அதை முக்கிய பிரச்சினையாக எடுத்து கவனம் செலுத்தட்டும்.
இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #PetrolDieselPriceHike #OdishaCM #NaveenPatnaik #PMModi
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகியப் படிப்புகளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி நர்சிங்) படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மருத்துவப் படிப்புகளைத் தொடர்ந்து செவிலியர் படிப்பையும் நீட் தேர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களிடமிருந்து பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் செவிலியர் பட்டப்படிப்புக்கு தொடக்கம் முதலே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் தான் அடிப்படைத் தகுதியாக இருந்து வருகிறது. நடப்பாண்டும் இந்த அடிப்படையில் தான் செவிலியர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் படிப்பும் நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் தமிழக அரசின் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நீட் தேர்வில் 13 விழுக்காடு மதிப்பெண் எடுத்தவர்கள் கூட மருத்துவக் கல்வியில் சேர தகுதி பெறுகின்றனர். நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவக் கல்வி வணிகமாவதையும் நீட் தேர்வு தடுக்கவில்லை.
மருத்துவப் படிப்பு படிக்கும் அளவுக்கு தகுதியும், திறமையும் இருந்தாலும், அதற்கான வசதியில்லாத கிராமப்புற மாணவச் செல்வங்களின் இலக்கு செவிலியர் படிப்பு தான். செவிலியர் படிப்பை முடித்தால் அரசு மருத்துவமனைகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ கவுரவமான ஊதியத்தில் பணியில் சேரலாம் என்ற நம்பிக்கை தான் ஏராளமான ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு செவிலியர் பட்டப்படிப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சூழலில் செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்வது ஊரக மாணவர்களின் செவிலியர் கல்வி கனவை கருக்கிவிடும்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. அவ்வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிய பிறகும், அதே உச்சநீதிமன்றத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள்ளாகவே இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக செவிலியர் படிப்புக்கும் நீட்டை அறிமுகம் செய்யத் துடிக்கிறது. இனிவரும் காலங்களில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் நிச்சயம் வரும்.
அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு துடிப்பதன் நோக்கம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அல்ல. மாறாக, பயிற்சி வணிகத்தை விரிவுபடுத்துவது தான். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்பதற்காக தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் சுமார் 10 லட்சம் பேர் அவர்களது பள்ளிகளின் மூலமாகவே முன்னணி பயிற்சி நிறுவனங்களிடம் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த வகையில் மட்டும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கணக்கிட்டால் இது லட்சம் கோடியைத் தாண்டிவிடும்.
மருத்துவம் தவிர மற்றப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்தால் இதை மேலும் பல மடங்காக பெருக்க முடியும். இந்த வருவாய் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி வைத்துள்ளன. இவற்றுக்கு தீனி போடுவதற்காகத் தான் நீட் விரிவாக்கத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இது தவறு மட்டுமல்ல... பாவமும் கூட.
தனியார் நிறுவனங்களின் வணிக லாபத்திற்காக ஊரக, ஏழை மாணவர்களின் செவிலியர் கல்வி கனவுகளை சிதைத்து விடக்கூடாது. எனவே, செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #NEET
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்