என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government of Tamil Nadu"
- பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
- விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை (தானியங்கி பட்டா) நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்து உள்ளது.
அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது.
உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளத்தை மேம்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ளது. இது தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல்கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிடலாம்.
இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போதே இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இன்று (நேற்று) முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் தடங்கலின்றி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் கவனத்திற்கு...
தமிழக அரசின் இந்த திட்டத்தை பொதுமக்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே பத்திரப்பதிவு செய்யும் போதே, அதன் உரிமையாளர் பெயரில் பட்டா இருக்கிறதா என்பதனை மக்கள் முதலில் சரிபார்க்க வேண்டும்.
அப்படி அவர்களது பெயரில் பட்டா இல்லாவிட்டால், முதலில் அவர்களை பட்டா மாற்றி வாருங்கள் என்று கூறவேண்டும்.
அதன்மூலம் அவர்களது பெயரில் பட்டா வந்து விட்டால், நாம் கிரையம் செய்யும்போது நமது பெயருக்கு பட்டா எளிதாக மாறி விடும். ஒருவேளை அதனை நாம் கவனிக்காவிட்டால், அதன் பிறகு பட்டா மாற்றும் பணியினை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
- லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடுகிறது.
சென்னை:
தமிழக அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக வராமல், இணையதளம் மூலமே பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடிகிறது. அதனால் லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடுகிறது.
ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் அரசு வழங்கும் சில சேவைகளை பணம் கொடுத்து பெறுகின்றனர்.
உதாரணத்திற்கு பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம். ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல், 3-ம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து பெறுகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள்-அதிகாரிகள் இடையே மூன்றாம் நபர் தலையீடு இருக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளார். அந்த அடிப்படையில்தான் தற்போது திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது.
சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டமும் அதன் ஒரு பகுதிதான். இந்தநிலையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்க ஒருங்கிணைந்த நில சேவை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் அனைத்தும் தனித்தனி இணையதளங்களில் சென்று பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக பத்திரப்பதிவு விவரங்களை பத்திரப்பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.
அதேபோல் பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதள பக்கமாக சென்று பார்க்க வேண்டும்.
எனவே தமிழக அரசு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது.
இந்த இணையதளத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா-சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திரப்பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட்டு மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து-குடிநீர் வரி விவரங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து மிக எளிதாக பார்க்கலாம்.
முற்றிலும் தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் பொதுமக்களும் பலன் அடையலாம்.
இந்த இணையதளம் இன்னும் முழுஅளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதில் உள்ள பத்திரப்பதிவு உள்பட சில சேவைகள் செயல்படவில்லை.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பொதுமக்கள் அதில் முழு அளவிலான சேவைகளை பெற முடியும் என்றும், அதில் சேவைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
- அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது
- கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும்
சமீபத்தில் பாஜகவில் இணைந்த சரத்குமார் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி அத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு 2749 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் போது, 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படைப் பணிகளை தாமதம் செய்துவிட்டு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் போக்கை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது.
மேலும், நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் நலன் கருதி, நமது உரிமையை பெற வேண்டும் என்றால், கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.
- தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றன.
மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாயக்கர் மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவராக திருமலை நாயக்கர் கி.பி.1623- 1659 வரை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்க மன்னர் கி.பி.1636 ஆம் ஆண்டில் மதுரையில் அரண்மனை ஒன்றினைக் கட்டினார். இந்த அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்கிறது.
திருமலை நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த அரண்மனை அரியணை மண்டபம், அந்தப்புரம், நாடகசாலை, பள்ளியறை, பூசை அறை, படைக்கலன், வசந்தவாவி, மலர்வனம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
திருமலை மன்னரின் பேரன் சொக்கநாத நாயக்க மன்னர் தனது தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். எனவே இந்த அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து திருச்சிராப்பள்ளியில் புதிய அரண்மனையை உருவாக்கினார். தற்போது அரண்மனையின் நான்கு ஒரு பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.
திருமலை நாயக்கர் அரண்மனை இந்தோ-சாரசனிக் கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டதாகும். இந்துக்கோயில்களின் கட்டக்கலையும் முகமதியக் கட்டக்கலையும் இணைந்து கட்டப்பட்டும் கலையை இந்தோசாரசனிக் கட்டக்கலை என்றழைப்பர்.
இவ்வரண்மனையில் சென்னை மாகாண ஆளுநர் 1879-ஆம் ஆண்டு ரூ 5 இலட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன.
திருமலை நாயக்கர் அரண்மனையினை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மதுரைக்கு வட இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரண்மனையைக் கண்டுகளிக்கின்றனர்.
பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
திருமலை நாயக்கர் அரண்மனையினை உலகத்தரம் வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருங்கால தலைமுறையினருக்கு இத்தகைய மரபுச் சின்னங்களைத் தொன்மை மாறாமலும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் பாதுகாத்து எடுத்துச் செல்வது நமது தலையாய கடமையாகும் என்ற உன்னத நோக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
"மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை" என்ற உயரிய நோக்கோடு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை
— Thangam Thenarasu (@TThenarasu) July 25, 2024
மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றன.
மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க… pic.twitter.com/Vx0VDeWu1V
- தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
- மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.
- பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவனது நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.
இதையடுத்து நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
• காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநல பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
• ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
• அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
• பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
• பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத்துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.
• நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெள்ள நிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
• காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
• கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழுந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
• அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.
போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- 'புதுமை பெண்' என்னும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர்.
புதுமை பெண் திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு கூறியிருப்பதாவது,
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து பெண் சமூகம் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக 'புதுமை பெண்' என்னும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக புதுமை பெண்' திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, வரும் 2024-25ம் கல்வியாண்டு முதல் 'புதுமை பெண்' திட்டத்தின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் 'புதுமை பெண்' திட்டத்தில் பயன்பெற அந்தந்த கல்லூரியின் சிறப்பு அலுவலர் (நோடல் அலுவலர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதே அளவில் நீர் வரத்து நீடித்தால் தினமும் 2 டி.எம்.சி என்ற அளவில் நீர் இருப்பு அதிகரிக்கும்.
- காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களில் 30 டி.எம்.சி அதிகரித்திருக்கிறது. மழை தொடர்வதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கான தண்ணீரைப் பெற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 67.20 டி.எம்.சியாக உள்ளது. இது அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 59% ஆகும். நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 23,528 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 24-ஆம் நாள் நிலவரப்படி 4 அணைகளிலும் சேர்த்து 37.96 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருந்தது. கடந்த 15 நாட்களில் 30 டி.எம்.சி அளவுக்கு நீர் இருப்பு அதிகரித்திருக்கிறது. இதே அளவில் நீர் வரத்து நீடித்தால் தினமும் 2 டி.எம்.சி என்ற அளவில் நீர் இருப்பு அதிகரிக்கும்.
கர்நாடக அணைகளின் நீர்மட்டம் இந்த அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். இன்று வரை 20 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. அதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டி.எம்.சி தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படவில்லை. அதனால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. இதுவரை நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தேவை. ஆனால், இதை அறியாமலேயே காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் துரோகங்களுக்கு திமுக அரசு துணை போய்க் கொண்டிருக்கிறது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
எனவே, தமிழக அரசு அதன் பொறுப்பை உணர்ந்து மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
- சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஜி.கே வாசன் வெளியிடுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பொது மக்களைப் பாதுகாக்க, அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டது.
எனவே தமிழக அரசே, காவல் துறையே சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் துறையின் மூலம் முறையான, சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பணத்தையும் இழந்து விட்ட நிலையில் தான் கடுமையான மன உளைச்சல் காரணமாக அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- 8 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் சின்னமணலியைச் சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அங்கமுத்துவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விசைத்தறி உரிமையாளர் அங்கமுத்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். விசைத்தறி மூலம் கிடைத்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆன்லைன் சூதாட்டம் ஆடிய அங்கமுத்து, அதிலிருந்து மீளமுடியாமல் அடிமையாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்டம் விளையாட பணம் இல்லாத நிலையில், மனைவியின் தாலியை விற்று, அந்த பணத்தில் சூதாடியுள்ளார். அந்தப் பணத்தையும் இழந்து விட்ட நிலையில் தான் கடுமையான மன உளைச்சல் காரணமாக அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் அந்தத் தடையை நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 8 மாதங்களில் மொத்தம் 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 7 பேர் கடந்த இரு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 8 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? என்ற கவலையும், அச்சமும் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல், உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், தலைமை நீதிபதியை அணுகி ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
- இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அம்மாவின் ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.
- குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு எதிராக கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
2007-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் ஒருசில குடும்ப காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனமானது, முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் எவ்வித செயல்பாடும் இன்றி கிடப்பில் இருந்தது.
அதன் பின்பு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு அதற்கான வாரியத் தலைவர், நிர்வாக இயக்குநர், பொது மேலாளர், அலுவலர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றது. நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலமாக, 40 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிறுவனமானது, அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து டிஜிட்டல் லைசென்ஸ் பெறப்பட்டது.
அதன் பின்பு, அம்மா அரசில் இந்நிறுவனம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு சுமார் 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு
வந்தது.
இந்நிலையில், தற்போதைய விடியா திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும், அம்மாவின் ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம் (CAS) நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய AMC தொகையை முறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தினால் கடந்த 15.6.2024 அன்று காலை முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 10 லட்சத்திற்கும் அதிகமான அரசு கேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது.
இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி-ஐ முடக்க நினைக்கும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்