search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus driver"

    • பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
    • சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    திருச்சூர் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும், சம்பவம் குறித்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பேருந்துக்குள் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் பேருந்து நிற்கும் இடத்திற்கே கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தையும், மருத்துவர்கள், செவிலியர்களின் பணியையும் பாராட்டி வருகின்றனர்.



    • அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட அறை, பணிக்காலங்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். மேலும் குழந்தையை அவரது காலடியில் வைத்து தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    இதனை பார்த்த அதிகாரிகள் குழந்தையை கையில் தூக்கி கொண்டனர். தொடர்ந்து அவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே தேனியில் உள்ள எனது பிள்ளைகளை என்னால் கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.

    பெற்றோர்களுக்கு வயதானதால் அவர்களை இங்கு அழைத்து வந்து குழந்தைகளை பார்த்து கொள்வதிலும் சிரமமாக உள்ளது.

    எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். பலமுறை இது தொடர்பாக பொதுமேலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்த டிரைவர் கண்ணன் கோவையில் இருந்து திண்டுக்கல் மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை அலங்காநல்லூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது42). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கல்லணை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த பால்வண்டியும், அவரது இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் படுகாயமடைந்தார். அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜ்
    • இன்று அதிகாலை அம்பையில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 130-டி என்ற பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜ் (வயது 45).

    தகராறு

    இவர் இன்று அதிகாலை அம்பையில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 130-டி என்ற பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். முக்கூடல் அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த நந்தன்தட்டயை சேர்ந்த குமார் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர், பஸ்சை வழிமறித்து டிரைவர் இசக்கிராஜிடம் தகராறு செய்தார். அப்போது அந்த நின்றிருந்த ஒருவர், குமாருடன் சேர்ந்து பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    கைது

    இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் குமார் மற்றும் மற்றொரு நபர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

    பாப்பாக்குடி பஸ் நிறுத்த பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பால் சாலையும் குறுகலாக உள்ள நிலையில், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகமாக செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலமரத்துப்பட்டி சென்று திரும்பிய அந்த பஸ்சை கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
    • அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்த நான்கு பெண்கள், 3 வயது பெண் குழந்தை ஒருவருடன் அரசு பஸ்சில் ஏறி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சிமங்கலம் கிராமத்தில் செயல்படும் ரேசன் கடைக்கு சென்றனர். பின்னர் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து ஆலமரத்துப்பட்டி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. உடனே 3 பெண்கள் ரேசன் பொருட்களுடன் பஸ்சில் ஏறினர். அப்போது மூன்று வயது சிறுமியின் தாயார் தனது மகளை பஸ்சில் ஏற்றி விட்டு இன்னொரு அரிசி மூட்டையை எடுக்க சென்றார். அதற்குள் கண்டக்டர் விசில் அடித்துள்ளார். உடனே டிரைவரும் பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதற்கிடையே 3 வயது சிறுமி தாயை காணாமல் அழத்தொடங்கினாள். பின்னர் பஸ்சில் ஏறிய பெண்கள் மற்றும் அந்த குழந்தையை கோடாங்கிபட்டியில் இறக்கிவிட்டனர். பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து ஆலமரத்துப்பட்டி சென்று திரும்பிய அந்த பஸ்சை கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்தில் பயணம் செய்யும் பெண்களை இந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஓசி பயணம் என்றும், தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து பெண்களை ஏற்றிச் செல்ல மறுத்த டிரைவர் பன்னீர்செல்வம் மற்றும் கண்டக்டர் மகேந்திரன் ஆகியோரை கரூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்டு காலத்திற்கு பின்னர் டிரைவரை காரைக்குடிக்கும், கண்டக்டரை தேவகோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பேராவூரணியில் அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பேராவூரணி:

    பேராவூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்ற போது அவரை மீண்டும் பணி செய்யும்படி மேல் அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தனது வீடு புயலால் சேதம் அடைந்துள்ளதால் இது தொடர்பாக அதிகாரிகளை பார்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள் மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை கண்டக்டர் கோவிந்தன் தடுத்து காப்பாற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் பேராவூரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோட்டில் இன்று விடுமுறை கேட்டு ஆம்புலன்சில் அரசு பஸ் டிரைவர் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது35). இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பாபு தமிழக போக்குவரத்து கழகத்தில் கடந்த 5 வருடமாக பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பாபுக்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    பாபு மனைவி மலர்கொடி சென்னிமலை ரோடு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கிளை மேலாளரிடம் நடந்த விவரங்களை கூறி கணவருக்கு விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுமுறை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று பாபு தனது மனைவியுடன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாபு தனது மனைவியுடன் துணை மேலாளர் அறைக்கு சென்று துணை மேலாளரை சந்தித்து விடுமுறை கடிதத்தை கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திரும்பி சென்றார். 

    செங்கோட்டை அருகே ஆட்டோவில் ஏற வந்த பயணிகள் பஸ்சில் ஏறிய தகராறில் பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (வயது 46) ஓட்டினார். அந்த பஸ் அச்சன்புதூர் அருகே உள்ள பொய்கை ஊரணி அருகே வந்த போது, ஆட்டோவில் ஏற முயன்ற பயணிகள் பஸ்சில் ஏறிவிட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வடகரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதர் (30), அரசு பஸ் டிரைவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் சாமிநாதன், அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரசு பஸ் டிரைவர் அவரை குத்திக்கொன்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன் (வயது34). அரசு பஸ் டிவைராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் ராஜா மகள் கல்யாணிபிரியா(24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு தர்‌ஷணாஸ்ரீ, பிரியதர்சினி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கல்யாணி பிரியாவின் நடத்தையில் சிவமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. உறவினர்கள் சமரசம் செய்து வைத்த போதும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே வந்தது.

    நேற்றிரவும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவமுருகன் தனது மனைவி என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த கல்யாணிபிரியா சம்பவஇடத்திலேயே இறந்தார்.

    பின்னர் சிவமுருகன் தனது 2 பெண்குழந்தைகளையும் தூக்கிகொண்டு ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் சிவமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×