என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HC Madurai Bench"

    • தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    • மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிராமத்தில், கல்குளம், வண்ணான்குளம் என பல்வேறு குளங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்களில் நீரை தேக்கி எங்கள் பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளங்கள் சுற்று வட்டாரத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்நிலையில் தற்போது குளங்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    குளத்தில் இருக்கக்கூடிய தாமரை செடிகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் மற்றும் வண்ணான் குளம் ஆக்கிரமித்துள்ள தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குளங்களில் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ள புகைப்படங்களை சமர்ப்பித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதிகள் தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெறுகிறது.

    மதுரை:

    கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

    நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.

    • மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.
    • முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றப்படுகையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார்.

    ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் லூர்து பிரான்சிஸ்சுக்கு போதிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டனர்.

    இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.

    இந்த சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளிவராது. ஆகவே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதற்காக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில், வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அரசின் அறிக்கையின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே 4 வாரத்தில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் 3 வாரத்தில் மாவட்ட நீதிபதிக்கு வழக்கை மாற்ற வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.
    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி 761 ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    அந்த வகையில் நாங்கள் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகளின்படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின்படியும் இந்த நடைமுறை சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவாகவே போய்விடுகிறது. எனவே சட்டப்படி ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரோடு இன்ஸ்பெக்டர் பணி வழங்கவும், டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    எனவே கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் தான் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன் பட்டியை சேர்ந்த வக்கீல் சண்முக சுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.

    இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது.
    • விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் மீனாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்னுடைய கணவர் பெயரையும் போலீசார் சேர்த்தனர்.

    சமீபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த என் கணவரை, இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 6-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர். இதுவரை அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. எனது கணவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் மீதான வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் அளித்து கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மனுதாரர் கணவரை போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் என வாதாடினார்.

    அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள மனுதாரர் கணவர் விசாரணைக்கு மட்டுமே போலீசார் அழைத்து சென்றுள்ளனர். விரைவில் விடுவிக்கப்படுவார் என்றார்.

    விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தும், அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையானது, கோர்ட்டுக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இதற்கிடையே மனுதாரரின் கணவருக்கு ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
    • ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒருவிதமான பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. தற்போது இந்த ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேசமுடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும். எனவே, சென்னையிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    முடிவில், நிபந்தனை ஜாமினில் உள்ள எஸ்.ஜி.சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி நீதிபதி செய்து உத்தரவிட்டார்.

    • உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
    • வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், வரதராஜன் கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே கடந்த 2013ல் சிவில் பிரச்சினை இருந்தது.

    இந்த விவகாரத்தில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம், காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இதற்கு 4 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அப்போது நடந்த இரட்டை கொலையில் 4 பேரையும் சேர்த்துள்ளார். இதனால் வரதராஜன், கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் 92 நாட்களும், பரமசிவம் 53 நாளும் சிறையில் இருந்துள்ளார். இதற்காக இழப்பீடும், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கையும் கோரி 4 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் இறந்ததால், அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரர்கள் 4 பேரும் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் இறந்ததால் எப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் கேள்வியாக உள்ளது. எனவே, அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரதராஜன் கடலை முத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் நாளொன்றுக்கு ரூ. 7500 வீதம் தலா ரு. 6.90 லட்சமும். பரமசிவம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500ம் இழப்பீடு பெற தகுதி உள்ளது.

    இதை உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் மனுவில் கூறியிருந்தார்.
    • மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.

    எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது.
    • போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தொண்டியில் போலி பெண் டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு நான் உதவியதாக கூறி, அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, என்னை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

    மேலும் அந்த போலி டாக்டரை பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தியதாகவும் பொய் புகார் பெற்று வழக்குபதிவு செய்தார். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரி புகழேந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை, நிரூபிக்கவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் மனுதாரருக்கு எதிராக பதிவான முதல் தகவல் அறிக்கையிலும் வலுவான குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. எனவே மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
    • வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பெரியதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவரும் பல்வேறு பணிகளை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணத்தை முறைகேடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தையும், ஊராட்சி நிதியையும் கையாடல் செய்து தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இருவரையும் தகுதிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

    • புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
    • வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.

    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.

    விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை சவுந்தரராஜன், தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

    மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து இருந்தார் அதன் பெயரில் அவரும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதாடினார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    ×