என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HC Madurai Bench"

    • புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
    • வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.

    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.

    விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை சவுந்தரராஜன், தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

    மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து இருந்தார் அதன் பெயரில் அவரும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதாடினார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்.

    மதுரை:

    மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.

    இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி, 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? மாநாட்டில் எவ்வித வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதால்  மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
    • முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

    கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

    இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
    • காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, எம்.வேப்பங்குளம் கிராமத்தில் ஊர் பொது சாவடியின் முன்பாக இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு உள்ள மந்தைக்கு செல்லும் தெருவின் இரு புறங்களிலும் பல வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலமானது பொது பாதையாகவும், அறுவடை காலங்களில் பயிர்களை தூற்றும் களமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிலர் கோவில் கமிட்டி என்கிற பெயரில் தன்னிச்சையாக செயல்பட்டு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி ஏதும் பெறாமலும், திட்ட அங்கீகாரம் ஏதுமின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கனவே ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கோவில் கட்டுமான பணி நடைபெறாது என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் புதிய கோவில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே கோவில் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கட்டுமான பணிகள் நடைபெறாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எப்படி மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கியது? இதற்கு யார் அனுமதி வழங்கியது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் விசாரணையின் முடிவில், கோவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், யாரிடம் அனுமதி பெற்று கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் கோர்ட்டை நாடலாம்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டில் போலி டாக்டர் ராஜலட்சுமி என்பவருக்கு உதவியதாக என் மீது தொண்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் என் மீது பழி வாங்கும் நோக்கத்தில், டி.எஸ்.பி. தூண்டுதலின்படி போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    எனவே டி.எஸ்.பி. புகழேந்தி, தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி திருவாடானை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு எனது புகாரினை விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    ஆனால் அந்த உத்தரவை தொண்டி போலீசார் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே திருவாடானை கோர்ட்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரரின் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கீழ் கோர்ட் பிறப்பித்த உத்தரவை போலீசார் பின்பற்றவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபடும் போலீசார் மீதான புகார்கள் குறித்து மாவட்ட நீதிபதியே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் மனித உரிமை விதிகளும் தெரிவிக்கின்றன.

    சிறை குறிப்பை பார்க்கும் போது காவல்துறைக்கு எதிராக குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் மனுதாரர் புகாரை விசாரித்ததில் உண்மை தன்மை இல்லை என கூறி முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் இந்த கோர்ட்டை நாடலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    • கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    மதுரை:

    பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    • அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது.
    • தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஏற்கனவே தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

    இதற்கிடையே புதிதாக நியமனம் என்பது தேவையற்றது. மேலும் அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும். மேலும் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு கோவில் நிதியிலிருந்து ரூ.8 ஆயிரம் மாத ஊதியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு அரசின் அரசாணை சட்டவிரோதமானது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதி மொழிக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் முன்பாக விசாரணை நடைபெறும் காலங்களில் இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

    பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகநாதன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த அர்ச்சகர் பயிற்சி என்பது பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு அனுபவ பயிற்சிதான். இது தொடர்பான விரிவான விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர்.

    அரசு தரப்பு வாதத்திற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஆட்சேபம் தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் இந்த அரசாணை அமல்படுத்தும் வேலையை அரசு நிறைவேற்றி விடும் என்பதால் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்கக்கூடாது என தெரிவித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

    • அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
    • நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவில் கூறியிருந்ததாவது:-

    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருத்துவ செலவு சுமார் ரூ.9 லட்சத்தை காப்பீட்டுத் தொகையில் தனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழங்க வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகையை எனக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால் இதுவரை எனக்கு வர வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறன் நேரில் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    அப்பொழுது நீதிபதி அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போல் ஒரு நடத்துனர் தனது பயண டிக்கெட் பண்டலை தொலைத்து விட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் மருத்துவத்துறையில் ஒரு உயர் அதிகாரி ஆவணங்களை தொலைத்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளை ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது.

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சொன்னால் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறுகின்றனர்.

    எனவே ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

    • போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
    • சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது அங்கு கூடிய கூட்டத்தினர், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அவர்களுக்கு ஜாமின் அளித்தும், சிலருக்கு முன்ஜாமின் அளித்தும் கரூர் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஜாமின், முன்ஜாமினை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து, அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆஜரானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    தற்போது அவர்களில் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் கோர்ட்டு மீண்டும் ஜாமின் அளித்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அந்த ஜாமினை ரத்து செய்யக்கோரியும் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.
    • வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஆதீனங்களில் மிகவும் பிரபலமான பிரசித்தி பெற்ற ஆதீன மடமாக மதுரை ஆதீனமடம் இருந்து வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் தரை வாடகைக்கு பயன்படுத்தும் விதமாக 10 வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. இதற்கு மாத வாடகையாக ரூ.2 ஆயிரத்து 500 என்றும், அதில் கட்டிடங்கள் கட்டினால் 10 வருட பயன்பாட்டிற்கு பின் அது ஆதீனத்திற்கு சொந்தமானது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி 2013-ம் ஆண்டு மதுரை ஆதீனம் மற்றும் மாநகராட்சி உரிய அனுமதி இல்லாமல் பகவர்லால் பெரிய கட்டிடம் கட்டியது மட்டுமில்லாமல் வாடகையும் செலுத்துவதில்லை.

    எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு எதிராக தமிழ்நாடு புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் பகவர்லால் மனு தாக்கல் செய்து உள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டம் (2017) பொருந்தாது. எனவே வருவாய் கோட்டாட்சியரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, ஆதீன மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78-ன்படி கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகை செலுத்தாதவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்தோம். அதை விசாரணை செய்த இணை இயக்குனர் ஆக்கிரமிப்பாளரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பகவர்லால் ஆணையரிடம் முறையீடு செய்தார். அது நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸ் சட்ட விரோதமானது. கோவில் மற்றும் மடங்களுக்கு இது பொருந்தாது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும். மேலும் வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம். அதேபோல தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கோவில் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.
    • மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    மதுரை:

    வருகிற 23-ந்தேதி அன்று ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை உள்ளிட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

    இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து பங்கேற்கவும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள வழித்தடத்தில் பேரணியாக செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    • கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:-

    நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். மீனவ மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன்.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. சுமார் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    இதனால் மீனவ குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பலன் அடைவார்கள்.

    எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, கடந்த மாதம் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார்.

    அரசு வக்கீலின் தகவலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    ×