என் மலர்
நீங்கள் தேடியது "Joint Family"
- கிராமங்களில் கூட கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது அரிதாகி விட்டது.
- ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
புவனேசுவர்:
இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் கூட கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது அரிதாகி விட்டது. அனைவரும் மனைவி, குழந்தைகள் மட்டும் போதும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால் தனி குடித்தனம் அதிகரித்து விட்டது.
ஆனாலும் இன்னும் பழமைமாறாமல் ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள கோர்தா மாவட்டம் கயாபந்த் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னகர் ஸ்ரீசந்தன் (வயது 85) குடும்பத்தில் மூத்தவரான இவரது குடும்பத்தில் மொத்தம் 125 உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த 4 தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக ஒன்றாக இருந்து வரும் இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். சொந்த கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள விவசாய தோட்டத்தில் நெல், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முந்திரி, மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம் போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர். இதன் மூலம் இந்த குடும்பத்தினருக்கு கணிச மான வருமானம் கிடைத்து வருகிறது.
ஆனாலும் இந்த குடும்பத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடி நகரங்களுக்கு சென்று விட்டனர். இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் விவசாயத்தை கவனித்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் வீடு அந்த கிராமத்திலேயே மிகப்பெரியது. இந்த வீட்டில் 36 படுக்கை அறைகள் உள்ளன. தினமும் விழாவுக்கு சமையல் செய்வது போல 16 கிலோ அரிசி மற்றும் 4 கிலோ பருப்பு வகைகளுடன் ஒன்றாக உணவு தயார் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
கூட்டு குடும்பம் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்தை சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்தாலும் ஆண்டுக்கு இரு முறை எல்லோரும் சொந்த கிராமத்தில் ஒன்று கூடுகின்றனர்.
மார்ச் மாதம் ஹோலி பண்டிகை மற்றும், அக்டோபர் மாதம் தசரா பண்டிகையை ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த சமயங்களில் திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைவரும் ஒன்றாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். முன்னதாக அனைவரும் ஒன்று கூடி பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஓட்டு போட்டு வருகின்றனர்.
2014-ம் ஆண்டு வரை இவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த திலீப் ஸ்ரீசந்தன் கோர்தா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1995 முதல் 2000-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார்.
இருந்தபோதிலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார். மரம் நடுவதில் அதிக ஆர்வம் கொண்ட திலீப் அதில் தீவிர கவனமும் செலுத்தில் வருகிறார்.
இருந்தபோதிலும் கயாபந்த் கிராமம் பல்வேறு பிரச்சினைகைள சந்தித்து வருவதாக இந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். வேலை வாய்ப்பு இன்மை, குடிநீர் பிரச்சினை, யானைகள் அச்சுறுத்தல் போன்றவற்றால் சிக்கி தவிக்கிறது. கோர்தா மாவட்டத்தில் அணை நீர் திட்டம் இன்னும் முழுமையாக முடியாததால் கோடை காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்த கால கட்டங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீசந்தன் குடும்பத்தை சேர்ந்த கோபால் என்பவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு இருக்கும் மற்றொரு ஆசை தங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்பது தான். எங்கள் குடும்ப உறுப்பினர்களை கணக்கில் கொண்டாவது சொந்த கிராமத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குடும்பத்தை சேர்ந்த மது சூதன் என்பவர் கூறும் போது நீங்கள் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்திருந்தால் அதில் இருந்து வெளியே செல்ல விரும்ப மாட்டீர்கள், குடும்பம் ஒரு பெரிய ஆதரவான அமைப்பு. அன்பு, பாசம், ஒத்துழைப்பு,அனுசரித்து செல்லுதல் ஆகியவை நம்மை ஒற்றுமையாக வைத்து இருக்கின்றன.
குடும்பத்தினரிடையே நிச்சயம் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இருந்த போதிலும் அவற்றை எளிதாக சமாளித்து விடலாம் என்று தெரிவித்தார்.
- தினமும் 10 லிட்டர் பால் தேவைப்படுகிறது.
- தினசரி சமையலுக்கு ரூ.1,200 மதிப்புள்ள காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருக்கிறது. தனி குடும்ப வாழ்வின் மீதுதான் பலருக்கும் நாட்டம் இருக்கிறது. விதிவிலக்காக, கூட்டுக் குடும்ப வாழ்வியலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தில் 72 உறுப்பினர்கள் ஒன்றுபட்டு வாழும் நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.
ஒன்றல்ல.. இரண்டல்ல.. நான்கு தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'டோய்ஜோட்' எனப்படும் அந்த குடும்பத்தினர் அங்குள்ள சோலாப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அங்கிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக சோலாப்பூருக்கு குடியேறி இருக்கிறார்கள். தரை விரிப்புகள், திரை சீலைகள் சார்ந்த அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்கள். 72 பேர் குடும்பத்தின் அங்கமாக இருப்பதால் தினமும் 10 லிட்டர் பால் தேவைப்படுகிறது. அதுபோல் தினசரி சமையலுக்கு ரூ.1,200 மதிப்புள்ள காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறது.
அந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்தாலும், புதிதாக திருமணமாகி வந்தவர்கள் ஆரம்பத்தில் தடுமாறி இருக்கிறார்கள். திருமணமான புதிதில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து முதலில் கவலைப்பட்டதாகவும், அனைவரும் நன்றாக பழகுவதையும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதையும் பார்த்து தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அந்த குடும்பத்தின் பெண்கள் கூறுகிறார்கள்.
குடும்பத்தின் மருமகள்களுள் ஒருவரான நைனா டோய்ஜோட் கூறுகையில், ''ஒரு வருடத்துக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்புகளை மொத்தமாக வாங்குகிறோம். அதனால் சுமார் 40 முதல் 50 பைகள் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அப்படி மொத்தமாக வாங்குவதால் மலிவு விலையில் எங்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும் அசைவ உணவு சமைப்பதாக இருந்தால் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம் செலவாகும். ஆரம்பத்தில் குடும்பத்தினரின் எண்ணிக்கையை கண்டு பயந்தேன். ஆனால் எல்லோரும் எனக்கு உதவினார்கள். என் மாமியார் உள்பட அனைவரும் நன்றாக பழகினார்கள்'' என்கிறார்.
குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளேயே நிறைய உறவினர்கள் இருப்பதால் அவர்களுடனேயே சேர்ந்து விளையாடி பொழுதை போக்குகிறார்கள்.
இதுபற்றி குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான அதிதி டோய்ஜோட் கூறுகையில், "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, விளையாடுவதற்கு வெளியே சென்றதில்லை. எங்கள் வீட்டிலேயே நிறைய பேர் உள்ளனர். அவர்களின் அன்பும், அறிவுரையும் வெளி நபர்களை தைரியமாக அணுகுவதற்கு எங்களை பக்குவப்படுத்தியுள்ளது. நாங்கள் ஒரே குடும்பமாக வசிப்பதை பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்'' என்கிறார்.
இந்த கூட்டுக் குடும்பத்தினரின் செயல்பாடுகள் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்கு இது அழகான எடுத்துக்காட்டு என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.