search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanda Sashti Festival"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.

    மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.

    அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.

    இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.

    திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.


    பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.

    சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.

    • கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.
    • உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது.

    எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.


    கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.

    இந்த தெய்வ சிந்தனை வருடத்தில் ஒருமுறை, ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ, இல்லை ஆறு நாளோ இருந்தால், நம் மனதுடன் உடலும் சுத்தமாகிறது.

    சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.

    விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான்.

    கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது. உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும். எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல் தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.

    முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.

    முருகனுக்கு உகந்தமலர்கள்:-

    மல்லிகை, முல்லை, ரோஜா, திருநீற்றுப் பச்சை, சாமந்தி, செவ்வரளி.

    அபிஷேகப் பலன்கள்:-

    மஞ்சள் நீர்- வசீகரம், சந்தனம்- லட்சுமிகடாட்சம், பஞ்சாமிர்தம்- ஜெயம், தயிர்- மக்கட்பேறு, பால்- ஆயுள் விருத்தி, தேன் - இனிய குரல், இளநீர் - யோகம்.

    முருகனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். கார்த்திகை விரதம், செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட செவ்வாய் தோஷங்கள் விலகும்.

    • கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குடிதண்ணீர், சுகாதார வளாக வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கோவில் வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு சென்று அதில் தங்கியுள்ள பக்தர்களிடம் வாடகை குறித்தும், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அந்த விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
    • திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.

    பழனி:

    பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.

    அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

    இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சிறப்பு பணி அலுவலர்கள் பணிக்கு வரும்போது உடன் வாக்கிடாக்கி கொண்டு வர வேண்டும்.

    சென்னை:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்களின் வருகையை சீர்படுத்திடவும், தரிசன முறைகளை நெறிப்படுத்திடவும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிடவும் பணிகளை கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை சிறப்பு பணி அதிகாரிகளாக 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

    இணை ஆணையர்கள் தூத்துக்குடி அன்புமணி, திருநெல்வேலி கவிதா பிரியதர்ஷினி, மதுரை செல்லத்துரை, திருச்சி பிரகாஷ், தஞ்சை ஞானசேகரன், கடலூர் பரணீதரன், மதுரை கிருஷ்ணன், திருவேற்காடு அருணாசலம், ஸ்ரீரங்கம் மாரியப்பன், சுசீந்திரம் ரத்தினவேல் பாண்டியன், ராமேஸ்வரம் சிவராம் குமார், துணை ஆணையர்கள் திருநெல்வேலி ஜான்சிராணி, தூத்துக்குடி வெங்கடேசன் மயிலாடுதுறை ராமு, உதவி ஆணையர்கள் திருச்சி லட்சுமணன், நெல்லை கவிதா, திண்டுக்கல் சுரேஷ், நாகர் கோவில் தங்கம், தூத்துக்குடி சங்கர்.

    சிவகங்கை செல்வராஜ், மதுரை வளர்மதி, தென்காசி கோமதி, குற்றாலம் கண்ணதாசன், மேல்மலையனூர் ஜீவானந்தம், சேலம் சரவணன், தான்தோன்றிமலை நந்தகுமார், தேக்கம்பட்டி கைலாசமூர்த்தி, மலைக்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம், மதுரை நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆய்வர்கள் மற்றும் செயல் அலுவலர்களாக பணிபுரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சிறப்பு பணி அலுவலர்கள் பணிக்கு வரும்போது உடன் வாக்கிடாக்கி கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும்.

    இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 18-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி (சனிக்கிழமை) மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
    • கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி கோவில் நடை சாத்தப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    பின்னர் 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படுகிறார். பின்னர் 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமியும் அம்பாள்களுடன் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாள்களுடன் கிரி வீதியில் வலம் வந்து கோவிலை சேர்கிறார்.

    6-ம் திருநாளான 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாள்களும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரமான பின்பு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள்.

    7-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 5 மணிக்கு தெய்வானை அம்மாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.

    பின்னர் 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று விழாவுக்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    2, 3, 4 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 5-ந் தேதி (சனிக்கிழமை) 12-ம் திருநாளன்று மாலை மஞ்சள் நீராட்டு, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பின்னர் கோவிலை சேர்கின்றனர்.

    விழா நாட்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு போன்றவை கோவில் கலையரங்கில் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×