என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanyakumari"

    • திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
    • சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
    • விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது

    நாகர்கோவில்:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.

    காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
    • பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர்அலங்காரம், வான வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் சேவியர்அருள்நாதன், மேக்சன், ஜாண்போஸ்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவ ருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய இரண்டு தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில்இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டு விடப்பட்டது.

    • கன்னியாகுமரியில் கடல் “திடீர்” என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.
    • கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் பவுர்ணமி தினமான நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்கக்கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.

    அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • திருவள்ளுவர் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
    • திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

    அதன்படி தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன்மாதம் முதல் 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், மத்திய மின் வேதியியல் ஆய்வக தலைமை விஞ்ஞானி டாக்டர் சரஸ்வதி, விஞ்ஞானி டாக்டர் அருண் சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி (பொறுப்பு) சதீஷ்குமார், ஒப்பந்தக்காரர் ராஜன் உள்பட தொல்லியல் துறை வல்லுனர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த கெமிக்கல் நிறுவன வல்லுநர்கள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு சோதனை முறையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    பின்னர் வல்லுனர் குழுவினர் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்னும் 15 நாட்களில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேவாலயத்தின் பங்கு தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்.
    • மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10ம் திருவிழாவையொட்டி தங்கத் தேர் பவனியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். 


    தொடர்ந்து புனித அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் பங்கு தந்தை அருட் பணி ஆன்றணி அல்காதர் அவர்களை சந்தித்த அவர் ஆசி பெற்றார். 


    நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், மாநில பொது குழு உறுப்பினர்கள், வட்டார, மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
    • திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில் பொதிகை படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் கரை ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் தற்போது குகன், விவேகானந்தா ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று காலை நீர்மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இதனால் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தற்காலிகமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடலின் தன்மை சகஜ நிலைமைக்கு திரும்பியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு பிறகு 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை யொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்த புரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், பாரத மாதா கோவில், கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது.
    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப்பட்டது. அங்கு பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலப்பணி தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (24-ந்தேதி) நடக்கிறது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் எ.வ. வேலு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.
    • உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவா வில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்து வந்தன. அதன் பயனாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் நேற்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதற்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குளுகுளு வசதி கொண்ட படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை நேற்று ஒரே நாளில் 4 முறை நடந்த உல்லாச படகு சவாரியில் 450 சுற்றுலா பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.

    • தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இதனை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த அதிநவீன படகுகளை கடலில் உல்லாச சுற்றுப்பயணம் செய்ய இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் யாரும் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து படகில் பயணம் செய்வதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    ×