search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Katchatheevu"

    • இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது.
    • மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன்.

    இலங்கையில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அதிபர் ரனில் விக்கிரமசிங்கே 'தந்தி' டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயாரா?

    பதில்:- கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் எப்படி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடன் பேச மாட்டீர்களோ, அதே மாதிரிதான் நாங்களும்.

    கேள்வி:- கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வாய்ப்பே இல்லையா?

    பதில்:- நாம இரண்டு பேரும் ஒரே கொள்கையை தானே வைத்திருக்கோம். நம்ம நாட்டு எல்லைகளை பற்றி மற்றவர்களோடு பேசுவதில்லை. நீங்க காஷ்மீர் பற்றி பேச மாட்டீர்கள். நான் கச்சத்தீவை பற்றி பேசமாட்டேன்.

    கேள்வி:- இந்திய அரசு, கச்சத்தீவை ஒரு முடிந்து போன பிரச்சனையாக நினைக்கவில்லையே?

    பதில்:- இந்தியா அதை முடிந்து போன பிரச்சனையாகத்தான் பார்க்கிறது. அது எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அது அவங்களுக்கு தெரியும். இந்திரா காந்தியும், பண்டாரநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஊடகங்கள்தான் அப்படி பார்ப்பதில்லை.

    கேள்வி:- சமீபத்தில் இந்தியா இதுபற்றி உங்களிடம் பேசவில்லையா?

    பதில்:- இல்லை. அவர்கள் மீனவர் பிரச்சனை பற்றி மட்டும்தான் பேசினார்கள். நாங்களும் மீனவர் பிரச்சனையை அவர்களிடம் எழுப்பினோம்.

    கேள்வி:- கச்சத்தீவை பற்றி உங்களிடம் பேசவே இல்லையா?

    பதில்:- அது ஒரு பிரச்சனையே இல்லையே...

    கேள்வி:- வரலாற்று குறிப்புகளின்படி, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்றுதான் இந்தியாவில் பலர் நினைக்கிறார்களே...

    பதில்:- வரலாற்று குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது. எங்களுக்கு இந்தியாவுடன் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட பெரும்பாலான மக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் மட்டும்தான் எழுப்புவார்கள். அதுவும் ஒரு அரசியல் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்.

    கேள்வி:- இது வெறும் தமிழ்நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா?

    பதில்:- தமிழ்நாட்டிலும் ஒரு சின்ன பகுதியில்தான் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவையிலோ இந்த பிரச்சனை இல்லையே. நாங்கள் இந்தியா முழுவதும் செல்கிறோம். இது ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு தெரியும்.

    கேள்வி:- இந்திய வெளியுறவு மந்திரி கச்சத்தீவு இந்தியாவுடையது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?

    பதில்:- அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தில்தான் அவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

    இவ்வாறு இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே பதில் அளித்தார்.

    மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

    மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன். முதலில், யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பங்கை வேறு மீனவர்கள் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும். நீங்களும் (தமிழகம்) அதை மனிதாபிமானத்தோடு அணுகுவீர்கள் என்று நினைக்கிறேன். இது இலங்கையின் கடல் பகுதி. உட்கார்ந்து பேசினால் உங்களுக்குள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகரத்தினம், சஞ்சை (வயது 23), பிரகாஸ் (35), சுதந்திர சுந்தர், சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல், நம்பியார்நகரை சேர்ந்த சிவராஜ் (45), வர்சன் (19), சுமன் (25), புதியகல்லாரை சோந்த ராஜேந்திரன் (45) ஆகிய 11 மீனவர்கள் சாந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 41 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் மேற்படி 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

    தொடர்ந்து, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை.
    • இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது, அதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இதன்மூலம் தமிழக மீனவர்களிடையே ஓர் அச்ச உணர்வினை தோற்றுவிக்க இலங்கை கடற்படை முயல்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை அரசுடனான தவறான உடன்படிக்கையின் மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமையை பறிப்பது என்பது நியாயமற்ற செயல். இதற்கு ஒரு நிரந்தர மற்றும் நியாயமான தீர்வினை காணவேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசிற்கு உள்ளது.

    பிரதமர் மோடி இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது.
    • கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், இருவர் மீட்பு என்ற நிகழ்வுகள் மிகவும் கண்டனத்துக்குரிய சம்பவங்களாகும். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் கொடுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதற்கு நிரந்தர தீர்வு காண புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு எங்களது உரிமை என்று குரல் எழுப்பி, கச்சத்தீவை தாரை வார்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் அம்மா, பல்வேறு உச்ச நீதி மன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி அ.தி.மு.க.வை வாதியாக சேர்த்தார். தொடர்ந்து வருவாய்த் துறையையும் இதிலே ஒரு வாதியாக சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் இதை செயல் படுத்தினார்.

    கச்சத்தீவை மீட்டெடுத்தால் தான் நம்முடைய மீனவர்களுடைய வாழ்வாதாரமும், மீனவருடைய எதிர் காலமும் பாதுகாக்கப்படும். அதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை அம்மாவும், அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் நடத்தி வந்தார்கள்.

    கடந்த 2019 ஆண்டில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இலங்கை கடற்படை படகு மோதி இன்றைக்கு மீனவர்கள் உயிரிழக்கிறார்கள் என்று சொன்னால் நம்முடைய உரிமையை மீட்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அன்றாடம் கடலுக்கு சென்றுதம் உயிரை பணயம் வைத்து அவர்கள் பிடித்து வருகிற மீனை இங்கே பல்வேறு தடைகளைத் தாண்டி அதை விற்பனை செய்து அதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிற அந்த மீனவர்களுக்கு இந்த அரசு கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

    மீனவர் உயிர் என்பது நாம் எளிமையாக கடந்து போய்விடக் கூடாது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையிலே இப்படி உயிரைப் பறிக்கிற சம்பவங்கள் கடலுக்குள்ளே நடைபெறுவதை இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது.

    ஒட்டுமொத்த மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. எப்பொழுது எல்லாம் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கிறதோ அப்பொழுதெல் லாம் இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு வீழ்த்தப்படுகிற இந்த துயர சம்பவம் தொடர்ந்து கொண்டே இருப்பதை வரலாறு நமக்கு நினைவூட்டினாலும், இனி வருகிற காலங்கள் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு இதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.
    • கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும்.

    கே.கே. நகர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சி, ஊராட்சி தேர்தல்களில் மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வார்களோ அதேப்போன்று பிரதமர் மோடி பாராளுமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார். தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா? என முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தமிழக மக்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் பா.ஜ.க.வை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான மண் சமூக நீதிக்கான மண். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து ஒரு பார்வை உள்ளது. இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.

    தற்போது கச்சத்தீவு பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் வெஜ் பேங்கை இந்திரா காந்தி இந்தியாவுடன் இணைத்தார். அங்கு அது கனிம வளங்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதுகுறித்து ஏன் மோடி பேசவில்லை? கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும். பிரதமர் மோடி கடந்த பத்தாண்டு காலமாக சர்வாதிகாரி போல தான் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. காங்கிரசின் நடவடிக்கையால் மட்டுமே இந்தியா தலைநிமிர்ந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.

    கொழும்பு:

    இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

    இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.

    கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.

    • இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்துள்ள நலப்பணிகள் ஏராளம்.
    • தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்கள் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் பயணமாக டெல்லி வர உள்ளதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதம் முழுக்க முழுக்க, கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை எல்லாம் வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்ய, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, இங்கே காங்கிரஸ் கூட்டணியில் பசையான மத்திய மந்திரி பதவியை வாங்க டெல்லிக்கு பறந்தவர்கள், ஏதோ கடிதங்கள் எழுதியே பிரச்சினைகளை தீர்த்து விட்டதை போல இன்று பெருமையடித்துக் கொண்டிருப்பது நகைக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சியில், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க. அந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை கூட நீதிமன்றத்தில் வழங்காமல், கச்சத்தீவு, நம் கைவிட்டுச் செல்லக் காரணமாக இருந்தது.

    தி.மு.க. அதன் பின்னர் பல முறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவைத் தாரை வார்த்த தி.மு.க. கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினர் மத்திய மந்திரி பதவி வாங்க, தமிழர்களின் நலனை நீங்கள் அடகு வைத்த அதே காலத்தில், அன்றைய குஜராத் முதல்-மந்திரியாக இருந்த பிரதமர் மோடி, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியவர். உங்களை விட, தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்துள்ள நலப்பணிகள் ஏராளம்.

    இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் மோடி 2 முறை வலியுறுத்தி இருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கடந்த ஜனவரி மாதம் இலங்கைப் பயணத்தின் போதும் 13-ம் சட்டத் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி இருக்கிறார். விரைவில் அது அமலுக்கு வரும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.

    தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்கள் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது. மத்தியில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 85 மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில், மு.க.ஸ்டாலினால் அப்படி ஒரு நிகழ்வைக் குறிப்பிட முடிந்ததா?

    காங்கிரசுடன் மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வாளாவிருந்துவிட்டு, தற்போது பிரதமர் மோடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு கொண்டு வரும்போது, வழக்கம் போல தங்கள் 'ஸ்டிக்கரை' ஒட்ட முயற்சிக்கிறது தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.
    • கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

    இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Katchatheevu #TNFishermen
    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.



    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் சிறைபிடித்து, மீனவர்கள் 13 பேர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Katchatheevu #TNFishermen
    ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தனர்.

    மீனவர்கள் தங்கள் வலைகளை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமாகினர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் படகில் இருந்த மீன்களை அபகரித்து கொண்ட இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடலுக்கு சென்றாலும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் வெறும் கையுடனேயே திரும்புகிறோம். இரு நாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தும் வரை தீர்வு ஏற்படாது. இதேநிலை நீடித்தால் நாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

    இதனிடையே நேற்று கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் சீற்றத்தால் முனியராஜ் படகு தள்ளாடியது.

    இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத்தொடங்கியது. தண்ணீரை வெளியேற்ற முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து மீனவர்கள் படகில் இருந்து குதித்து அருகில் இருந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரத்தில் படகு முற்றிலும் மூழ்கியது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். #Rameswaramfishermen

    கச்சத்தீவு அருகே நாட்டு படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. #FishermenArrested
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல டோக்கன் வழங்கப்படவில்லை. அதே நேரம் நாட்டு படகு மீனவர்களுக்கு டோக்கன் தேவையில்லை என்பதால் அவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர்.

    நேற்று பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் தனது நாட்டுப்படகில் மில்டன், அந்தோணி, ஸ்டீபன்ராஜ் உள்பட 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.

    வழக்கமாக கரையோர பகுதிகளில் மீன்பிடிக்கும் இவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.

    அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #FishermenArrested

    எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். மேலும் படகை மூழ்கடித்து மீனவர்களை விரட்டியடித்தனர். #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    உடனே இங்கிருந்து செல்லுங்கள் என கூறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் வேர்க்கோட்டைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் படகில் வந்த ராமு (வயது45), காட்டு ராஜா (50), தங்கவேல் (42), முருகன் (30) ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர்.

    தொடர்ந்து வேலாயுதம் படகை ரோந்து கப்பலால் மோதச்செய்து சேதப்படுத்தினர். இதில் படகில் தண்ணீர் புகுந்து மூழ்கியது.



    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே தூத்துக்குடியை சேர்ந்த 8 பேரும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் என 16 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RameswaramFishermen

    ×