என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Keezhadi நExcavation"
- ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது.
- பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது.
திருப்புவனம்:
மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து அந்த குழியை மேலும் ஆழமாக தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண் அழகிய பானை முழு வடிவில் வெளிவந்துள்ளது.
பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது. அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
- மற்றொரு குழியில் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
திருப்புவனம்:
மதுரை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெறுகிறது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தோண்டியபோது, ஒரு குழியில் 2 பெரிய பானைகளின் முகப்புகள் தென்பட்டன. அதன் அருகே பழங்கால தமிழர்கள் மூங்கில் கம்பு ஊன்றி கொட்டகை போட்டு வாழ்ந்ததாகவும், அந்த காலத்திலேயே குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
தற்சமயம் மணல் அள்ளி அந்த குழிகளையும் கண்டுபிடித்து உள்ளனர். தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு குழியிலும் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு பானை வடிவம் அரை வட்ட வடிவில் நன்றாகவும், மற்றொரு பானை சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. அதே குழியில் பண்டைய தமிழர்களின் மூங்கில் மரம் ஊன்றி கொட்டகை போட்டு வசித்ததற்கான குழிகள் நிறைய உள்ளன. தற்போது கீழடியில் 3-வது குழியும் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தெரிவித்தனர்.
- உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
- கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
திருப்புவனம்:
மதுரை அருகே உள்ள கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த அகழாய்வில் தந்தத்திலான ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப் பகுதியையும் கொண்டுள்ளது. 1.5 செ.மீ. விட்டம் கொண்ட தலைப்பகுதியையும், 1.3 செ.மீ. விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் மூலம் கீழடியில் மேம்பட்ட நாகரிகம் பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்ததற்கு சான்றாக இந்த ஆட்டக்காயை கருதலாம் என தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள்.
- மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
- மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி கிடைத்து இருக்கிறது.
திருப்புவனம்:
மதுரையை அடுத்த கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் 9 கட்டமாக அகழாய்வு பணிகளை முடித்துள்ளன. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கீழடி, கொந்தகையில் 10-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதில் கீழடியில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே 12 குழிகள் தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழிகளில் ஏற்கனவே பல வண்ண நிறங்களில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. 'தா' என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடும் கண்டெடுக்கப்பட்டது.
குழிகள் மேலும் 3 அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்ட நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. ஒன்று 5 செ.மீ. நீளமும், 4 செ.மீ. அகலமும் மற்றொன்று 4 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் உள்ளது.
இந்த நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் 10-ம் கட்ட அகழாய்வில் தற்போது உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செம்புப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. pic.twitter.com/XPE9lmwnc7
— Thangam Thenarasu (@TThenarasu) July 3, 2024
- கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்
- மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபாகர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.
முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.
கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
- 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
- இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
முதற்கட்டமாக நடந்த அகழாய்வில் தமிழகத்தின் நாகரிகத்தை அறியும் வகையில் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்தது. 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக வைகை கீழடி நாகரிகம் விளங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கீழடி மற்றும் அருகில் உள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கீழடியில் 12 குழிகளும், கொந்தகையில் 2 குழிகளும் தோண்டப்பட்டு தொல்லியல் பணிகள் நடந்தது. அண்மையில் கீழடி அகழாய்வு குறித்து ஆவணம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மாலை பணிகள் முடிந்த பின் தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்புடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
- தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்து இருக்கின்றன.
இதில் மத்திய தொல்லியல் துறை தரப்பில் 3 முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 முறையும் அகழாய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த 8 கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான தொல் பொருட்களை மக்கள் பார்க்கும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூ.18 கோடியே 46 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் தொல்லியல் துறை இணை இயக்குனரும், கீழடி இயக்குனருமான ஆர்.சிவானந்தம், தொல்லியல் அலுவலர் காவியா ஆகியோர் தலைமையில் கொந்தகையில் நடைபெற்று வரும் 4-வது கட்ட அகழாய்வில், 'இசட்.கியூ.3' என்ற அகழாய்வு குழியில் 46 செ.மீ. ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது. இது கருப்பு, சிவப்பு நிற வகையை சார்ந்தது.
அந்த தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்திலும் இருக்கிறது. அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.
வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண்ணாடி மணிகள், பாசி மணிகள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட்கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதில் 9-வது குழியில் சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது பானை ஓடுகள் வெளிவந்தன.
அவற்றை வகைப்படுத்தியபோது, சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. பாம்பின் கண்கள், வாய் போன்ற அமைப்பும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.
இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. இது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ. பருமனும் கொண்டுள்ளது.
இதுதவிர சுடுமண்ணால் செய்த பந்து, வட்டச்சில்லுகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இந்த தகவலை மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.
- கிணறு பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது போன்று காணப்பட்டது.
- மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து கொடுங்கலூர் வந்ததாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொடுங்கலூர், பூவத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் வீட்டின் அருகே குப்பைகளை புதைக்க குழி தோண்டினார். அப்போது தரையில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது, வட்டவடிவில் பழமையான கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கிணறு பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது போன்று காணப்பட்டது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த பார்த்தசாரதி, இதுபற்றி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றை ஆய்வு செய்தனர். இதில் கிணற்றின் மேல்பகுதியில் காணப்பட்ட மண்ணை ஆய்வு செய்தபோது அது சுடுமணலால் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் இந்த கிணறு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்கலாம் என தெரிகிறது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இங்கு கண்டு பிடிக்கப்பட்ட பழமையான கிணறு, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களுடன் தொடர்பு இருப்பதுபோல உள்ளது. எனவே இதுதொடர்பாக கீழடியில் கிடைத்த பொருள்களுடன் இணைத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் ராகவ வாரியார் கூறும்போது, பார்த்தசாரதியின் வீட்டில் பழமையான கிணறு கண்டு பிடிக்கப்பட்ட பகுதிக்கும் தமிழர் கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பகுதியில் மக்கள் வசித்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கலாம். இங்குள்ள கோவில்கள், நீராதாரங்கள் ஆகியவை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.
மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து கொடுங்கலூர் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பகுதிக்கும், மதுரை பகுதிக்கும் தொடர்பு இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகிறார்கள்.
- கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
- அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.
சென்னை:
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பண்டைய கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு உள்ளது. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணிகளும், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் 5 கட்டமாக அகழாய்வு பணிகளும் நடந்துள்ளது. இந்த அகழாய்வுகளின்போது சூது பவளம், உறை கிணறுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு, ஒரு இஞ்ச் பானை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நேரில் வந்து திறந்து வைத்தார். அருங்காட்சியகம் அவரே வியக்கும் வகையில் இருந்தது.
இதனை தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தை தினமும் ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.
ஆனால் கீழடி அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணியில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அஜய், காவ்யா உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
இதனால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது அருங்காட்சியகம் திறக்கப்பட்டு விட்டதால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கீழடியில் 9-ம் கட்டமாக அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
கீழடியில் நடந்த அகழாய்வு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது.
தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா உள்ளிட்டோர் தலைமையிலான பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
- 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்ல உள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் இன்று மாலை, சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து 6-ஆம் தேதி களஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், அன்றைய தினம் மாலை, நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பங்கேற்கிறார். இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், 7-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது கீழடி கிராமம். கடந்த 5 ஆண்டுகள் முன்பு தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. தி.மு.க. ஆட்சியில் இந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவுபடுத்தப்பட்டது.
இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள், இரும்பு துண்டு உள்பட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. அப்போதைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறை கிணறு, சுடுமண், செங்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழடி அருகே உள்ள கொந்தகை, மணலூர் போன்ற வைகை ஆற்று கரை பகுதியிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இதில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், பண்டைய தமிழர்களின் வாழ்வில் முறைகளை தற்போது நம் தலைமுறையினர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கீழடியில் சுமார் ரூ.11 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி வைப்பக கட்டிடம் செட்டிநாடு கட்டிட கலையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தில் உள்ள கோவிலில் உள்ள கல்மண்டபங்கள் போல் இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் எளிதாக பார்வையிடுவதற்கு லிப்ட் வசதி, அழகிய வடிவைப்பில் மரபடிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி கட்டிடங்களில் காட்சிபடுத்தப்படும் பொருட்களான மண்பாண்ட குடுவைகள், முதுமக்கள் தாழி, ஓடுகள், அணிகலன்கள், இதுதவிர சுவரில் வண்ண ஓவியங்கள், தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அறைக்கும் எளிதில் வந்துசெல்லும் வகையில் வழிகள், குளிர்ச்சி தரும் செட்டிநாடு ஆத்தங்குடி தரைகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா, தீ தடுக்கும் சென்சார் கருவி, அலாரம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது கீழடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் நாளை (3-ந்தேதி) நிறைவு பெறுகிறது.
வருகிற 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் பஸ் வசதியே இல்லாமல் இருந்தது. தற்போது கீழடி அகழ்வாராய்ச்சி பணியால் இப்பகுதியில் கிராமங்களில் பஸ் வசதி, சாலை மற்றும் குடிநீர் வசதி, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டைய தமிழர்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்ததை பெருமையாக கருதுகின்றனர். கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்