என் மலர்
நீங்கள் தேடியது "Kejriwal"
- இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
- கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, 'நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்' என்றார்.
இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.
இதுபற்றி அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, கொல்கத்தா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என கூறினார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
- மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, அந்த மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு முறையே மார்ச் 5, 13ம் தேதிகளில் கெஜ்ரிவால் செல்ல விருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்துக்கு அவர் 14ம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த 3 மாநிலங்களிலும் நடப்பாண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018ல் நடைபெற்ற இந்த மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும், அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 28ல் ஆம் ஆத்மி களமிறங்கி இருந்தது. சத்தீஸ்கரில் 90ல் 85 இடங்களிலும், ராஜஸ்தானில் 200-ல் 142 தொகுதிகளிலும் மத்திய பிரதேசத்தில் 230-ல் 208 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்டிருந்தது.
அண்மைக் காலங்களில் கிடைக்கப் பெற்ற தேர்தல் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ள ஆம் ஆத்மி, மேற்கண்ட 4 மாநில தேர்தல்களிலும் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைத்தன.
குஜராத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், 5 தொகுதிகளைக் கைப்பற்றி, 13 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. இந்த வெற்றிகள், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படுத்தின.
- மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.
போபால்:
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) ஆட்சி செய்தனர். அவர்களுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆம் ஆத்மியைப் பார்த்து மோடிஜி (பிரதமர்) அச்சமடைந்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.
டெல்லியில் கல்வி பிரிவில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்துள்ளது. எந்தவொரு கட்சியும், உங்களது குழந்தைகளுக்கு கல்வி வாக்குறுதி அளித்து வாக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை.
டெல்லி, பஞ்சாப் போன்று மத்திய பிரதேசத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும். எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கூறியவற்றை செய்யவில்லை எனில், அடுத்து வாக்கு கேட்டு உங்களிடம் நான் வரமாட்டேன்.
ஒருவர் அரசியல் பேரம் பேசி எம்.எல்.ஏ.வை வாங்குகிறார்கள் என கூறுவார்கள். மற்றொருவர் எம்.எல்.ஏ.வை வாங்க தயாராவார்கள். மொத்த தேர்தல் நடைமுறையையே அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். அரசியலமைப்பையே சந்தைகடையாக ஆக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
- ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளிக்க வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
கொரோனா பரவலை தொடர்ந்து ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. சலுகையை மீண்டும் அளிக்குமாறு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தபோதிலும், ரெயில்வே இன்னும் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ரூ.45 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது. மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளித்தால் ரூ.1,600 கோடி மட்டுமே செலவாகும். இது, ஒரு பெரிய கடலில் சிறிய துளி போன்றது.
இத்தொகையை செலவழிப்பதால், அரசு ஒன்றும் ஏழை ஆகிவிடாது. கட்டண சலுகையை நிறுத்தியதால், மூத்த குடிமக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற பிம்பம்தான் உருவாகும். மூத்த குடிமக்களின் ஆசி இல்லாமல், எந்த நாடும், தனிமனிதரும் முன்னேற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது.
- ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும்.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு உள்ளார்.
அதோடு இந்த முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவாலிடமும் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தி இருந்தது. டெல்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பாகவும் இரு கட்சிகள் இடையே கடுமையான மோதல் நிலவியது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த பங்களாவை புதுப்பிப்பதற்காக ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. 2020-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2022 ஜூன் வரை 6 கட்டங்களாக இந்த தொகை செலவிடப்பட்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள் கட்டமைப்புக்கு ரூ.11.30 கோடி, கல் மற்றும் பளிங்கு தரைக்கு ரூ.6.02 கோடி, உள் கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக்கு ரூ.1 கோடி, மின்சாதனங்கள் மற்றும் இதர உபகரணங்களுக்கு ரூ.2.58 கோடி, அவசரகால தீயணைக்கும் அமைப்புக்கு ரூ.2.85 கோடி, அலமாரி மற்றும் பிற கட்டமைப்புக்கு ரூ.1.41 கோடி, சமையலறை உபகரணங்களுக்கு ரூ.1.1 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட ரூ.9.99 கோடியில் தனித்தொகையான ரூ.8.11 கோடி முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள முகாம் அலுலகத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ளது.
மறு சீரமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.43.70 கோடிக்கு பதிலாக மொத்தம் ரூ.44.78 கோடி செலவிடப்பட்டதாக ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு டெல்லி அரசிடம் இருந்தோ அல்லது ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்தோ எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொதுப் பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் இல்லம் புணரமைக்கப்படவில்லை. பழைய கட்டிடம் இடத்தில் ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது முகாம் அலுவலகமும் இந்த இடத்தில் உள்ளது. சுமார் ரூ.44 கோடியில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது. மேலும் பழைய கட்டிடங்கள் புதிய கட்டிடம் மூலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா, செய்தி தொடர்பாளர் சமீத்பத்ரா ஆகியோர் கூறியதாவது:-
டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது. அவரை மகாராஜ் என்று சொல்லும் அளவுக்கு ஆடம்பரமாக பங்களாவை அமைத்துள்ளார். 8 புதிய திரைச்சீலையில் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.7.94 லட்சமாகும்.
ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும். அவர் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. ஆடம்பர வீடு (ஷூஷ் மகால்) நிறுவப்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டு முன்பு பா.ஜனதாவினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டதாக கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது காலணிகளை தூக்கி அவரது வீட்டு முன்பு எறிந்தனர். கெஜ்ரிவாலை திருடன் என்று கூறி கோஷமிட்டனர். அவர்கள் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
பெருமளவில் பா.ஜனதா தொண்டர்கள் அங்கு குவிந்தனர். போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் தடுப்புகளை அமைத்து இருந்தனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு பா.ஜனதா தொண்டர்கள் முன்னேறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலை காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.
அஜய் மக்கான் இதுகுறித்து கூறும்போது, 'முதல்-மந்திரியின் இல்லத்தை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது ஊழியராக நீடிக்க கெஜ்ரிவாலுக்கு தகுதியில்லை. கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடிக்கொண்டு இருந்தபோது கெஜ்ரிவால் பங்களாவில் செல்வத்தை செலவிட்டுள்ளார்' என்றார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லல்லு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.
இந்நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி ஜூன் 12-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்வார்கள்.
என்றாலும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களையும் நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.
என்றாலும் ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 38 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.
மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். குறிப்பாக மொத்தம் உள்ள 543 எம்.பி. தொகுதிகளில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளிலாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
450 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக பாரதிய ஜனதாவை தனி பெரும்பான்மை பெறவிடாமல் செய்ய முடியும் என்று நிதிஷ்குமார் மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் மாநில கட்சி தலைவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிராக இருப்பதால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? என்று சந்தேகம் நீடிக்கிறது.
- ஆம் ஆத்மி போட்டியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு
- டெல்லி மாநில அரசு அதிகாரம் விவகாரத்தில் காங்கிரஸ் உதவி தேவைப்படுகிறது
காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பா.ஜனதாவுக்கு உதவி செய்வதற்காகவே எங்களை எதிர்த்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர் சந்திப்பை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய் மக்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அஜய் மக்கான் கூறுகையில் ''நீங்கள் மிகப்பெரிய ஊழல் செய்து, அதன்மூலம் பெறப்பட்ட பணத்தை, காங்கிரசுக்கு எதிராக கோவா, குஜராத், பஞ்சாப், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அசாமில் சதிவேலையில் ஈடுபடுத்தியுள்ளீர்கள். உங்களுடைய செயல்கள் கவனிக்கப்படாமல் இல்லை என்பது உறுதி. இதெல்லாம் பா.ஜனதாவுக்கு உதவுவதற்காகத்தான்.
ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்கிறார் கெஜ்ரிவால். எனினும் மற்றொரு பக்கம் ராஜஸ்தானில் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் போன்ற தலைவர்களுக்கு எதிராக பேசி வருகிறார். எங்களுடன் கைக்கோர்க்க விரும்கிறாரா? அல்லது விலகி நிற்க விரும்புகிறாரா?
தற்போது கெஜ்ரிவால் தெரிவித்து வருவது ஒன்றும் புதிதல்ல. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட எங்களுக்கு எதிரான அறிக்கையை கொடுத்தார்கள்.
விசயம் என்னவென்றால், கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டிருந்த போதிலும், ஜெயிலுக்கு செல்ல விரும்பவில்லை. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர் கட்சியின் இரண்டு பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் இருப்பது ஒற்றுமைக்காக அல்ல, ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக. ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் அங்கு சென்றார்'' என்றார்.
- யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
- தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
புதுடெல்லி:
பருவமழை காரணமாக வட மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கு பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வரலாறு காணாத மழை கொட்டியது. யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
டெல்லியின் ஐ.டி. 3 மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் படை வரவழைக்கப்பட்டது. ஹனுமான் மந்தர், யமுனா பஜார், சீதா காலனி, சிவில் லைன்ஸ்களுக்கு வெளியே உள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் யமுனா ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-
யமுனை நதிநீர் மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது. கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும். வஜிராபாத் மற்றும் சந்திரவால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
யமுனை நதியில் இன்னும் 205.33 மீட்டர் அபாய அளவை விட 2 மீட்டருக்கு மேல் செல்கிறது. வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 208.66 ஆக இருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர் மட்டம் 207.62 ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையே டெல்லியில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது.
- மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது.
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், பிரதமரின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டு சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது.
நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் ஏன் கண்மூடி தனமாக அமர்ந்திருக்கிறார்கள்? இது போன்ற படங்களும், வன்முறை சம்பவங்களும் அவர்களை தொந்தரவு செய்யவில்லையா? என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது. கண்டனத் துக்குரியது. இதுபோன்ற கொடூரமான செயலை இந்திய சமூகத்தில் பொறுத்து கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
- நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
- கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.
டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சங்கம் விஹாரின் தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று பி.ஆர். அம்பேத்கர் எப்போதும் கூறிவந்தார். அவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் வெளிநாட்டில் இருந்து சிறந்த கல்வியைப் பெற்றவர்.
டெல்லியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், பல ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகள் இப்போது அங்கு படிக்கிறார்கள்.
கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பயங்கரவாதிகளுடனான மோதலில் நாட்டைக் காத்த நமது துணிச்சலான வீரர்களின் அழியா தியாகத்திற்கு எனது அஞ்சலிகள். நமது வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கிறார்கள். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது" என்றார்.
- எனக்கு தலைமை பற்றித்தெரியாது, ஆனால் எப்படி வேலைப்பார்க்க வேண்டும் எனத் தெரியும்
- சாலைப் பணிகளை முடித்த பின்னர்தான், மக்களிடம் வாக்குகள் கேட்க செல்வேன்
டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.
அங்கீகாரமற்ற காலனிகளுக்கு சாலை போடும் திட்டத்தை டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அடுத்த வருடம் டிசம்பருக்குள் அங்கீகரிக்கப்படாத அனைத்து காலனிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். ஆம் ஆத்மி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் 850 காலனிகளில் சாலை வசதி அமைத்து கொடுத்துள்ளது. டெல்லியில் கடந்த 65 ஆண்டுகளில் 1700 காலனிகளில் 250-ல் மட்டுமே சாலை வசதி இருந்த நிலையில், நாங்கள் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
எனக்கு தலைமை பற்றித்தெரியாது, ஆனால் எப்படி வேலைப்பார்க்க வேண்டும் எனத் தெரியும். இலவச மின்சாரம், சுகாதாரம், தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை உறுதியாக உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
எல்லா சாலைப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அதன்பின்புதான் மக்களிடம் சென்று வாக்குகள் கேட்பேன் என்றார்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.