என் மலர்
நீங்கள் தேடியது "Kerala State"
- சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
- போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்
பல்லடம் :
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல்லடம் பகுதியில் சமூக வலைதளம் மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாடு அரசால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் லாட்டரி சீட்டுகள் படங்கள் வெளியாகியும், உளவுத்துறை போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், அவர்களின் ஆதரவோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாழப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர். இவர் மனித உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்று வெளிநாடுகளில் அதிகவிலைக்கு விற்று வந்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவரது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில் அவர் ஈரான் நாட்டுக்கு சென்றுவிட்டு விமானத்தில் கேரளாவுக்கு திரும்பி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் பயணித்த விமானம் வந்த கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு சபித் நாசரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் அவருடன் உடல் உறுப்பை சட்டவிரோதமாக பெறுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபரும் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது சிறுநீர கத்துக்காக தன்னை ஈரானுக்கு அழைத்துச் சென்றிருந்தாக தெரிவித்தார். இதையடுத்து சபித் நாசரை போலீசார் கைது செய்தனர்.
சபித் நாசர் பணம் தேவைப்படும் கஷ்டப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தால் பணம் கிடைக்கும் என்றுஆசை வார்த்தை கூறுவார். அவ்வாறு கூறும்போது தனது வலையில் விழுபவர்களை ஈரானுக்கு அழைத்துச்சென்று, அறுவை சிகிச்சை செய்து அவரது உடல் உறுப்புகளை பெற்றிருக்கிறார்.
பின்பு அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்குவிற்று சம்பாதித்து வந்திருக்கிறார். அவர் ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சபித் நாசரின் செல்போனை ஆய்வு செய்ததில் உடல் உறுப்புகளுக்காக ஆட்களை கடத்தியது, கடத்தப்பட்ட நபர்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதிக விலைக்கு விற்றது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆதாரங்கள் சிக்கின.
சபித் நாசர் மீது உடல் உறுப்புகளை சட்டவிரோத மாக எடுத்து ஈரானுக்கு கடத்தி கொண்டுசென்றது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், உடல் உறுப்புகள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக அவர் செயல்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன்.
- சமூகத்தை பாதுகாக்க கேரளாவில் உள்ள அமைப்பை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன். அதே சமயத்தில் பொறாமையாகவும் உணர்கிறேன். ஏனென்றால் இங்குள்ள மக்கள் எந்த வகுப்புவாத சக்திகளையும் கேரளாவுக்குள் அனுதிக்க மாட்டார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும் இந்தியாவுக்கே முன்மாதிரியாக கேரளா உள்ளது.
சமூகத்தை பாதுகாக்க கேரளாவில் உள்ள அமைப்பை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். கேரளாவுக்கு ஒவ்வொருமுறை வருகைக்கு பிறகும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதற்கான உத்வேகத்தை நான் மீண்டும் பெறுகிறேன்.
தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட ராகுல் காந்தியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அது பலனளிக்க வில்லை. எனது தலைவர் கேரளாவில் போட்டியிடுவதில் எனக்கு பொறாமையாக இருக்கிறது. கேரளாவை தன் குடும்பம் போன்று உணர்வதால் இங்கு போட்டியிடுவதாக என்னிடம் ராகுல்காந்தி கூறினார்.
பிரதமர் மோடி ஒரு ராஜா போன்று செயல்படுகிறார். மக்கள் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தனர். அதனை அவர் தவறிவிட்டுவிட்டார். அவர் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எனவே இந்த முறை மக்களவை தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிப்பார்கள்.
பிரதமர் மோடி நாட்டை பிளவுபடுத்த பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார். அது சரியல்ல. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி தவறாக பேசுவது பதவிக்கு ஏற்புடையதல்ல. அது நாட்டுக்கும் நல்லதல்ல. பதவிக்கு வருவதற்கு முன்பு அவர் வேறு விதமாக பேசினார். ஆனால் இன்று பதவிக்கு வந்தவுடன் இதுபோன்ற விஷயங்களை சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரானில் உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு விற்பது தவறில்லை என்பதால் அங்கு கொண்டு சென்று உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
- கைது செய்யப்பட்ட பிரசாத், முதலில் சிறுநீரகம் தானம் செய்பவராக தான் வந்துள்ளார்.
திருவனந்தபுரம்:
உடல் உறுப்புகள் தானத்துக்கு நமது நாட்டில் பல்வேறு கடுமையான விதிமுறைகள் உள்ளன. இதனால் சில கும்பல் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை பெற்று, வெளிநாடுகளில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று சம்பாதித்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் இதுபோன்று உடல் உறுப்புகளை பெறுவதற்காக ஈரானுக்கு ஆட்களை கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்த ஷாபித் நாசர் என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர்.
இவர் ஏழ்மையில் உள்ள பலரை, பணத்தாசை காண்பித்து ஈரானுக்கு அழைத்துச் சென்று அவர்களது உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்றிருப்பதும், கடந்த 2019-ம் ஆண்டு 30-க்கும் மேற்பட்டபவர்களை ஈரானுக்கு கடத்திச் சென்று உடல் உறுப்புகளை பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. ஈரானில் உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு விற்பது தவறில்லை என்பதால் அங்கு கொண்டு சென்று உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ஷாபித் நாசருடன் மேலும் பலருக்கு தொடர்ப்பு இருக்கலாம் என்று கருதிய போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, ஷஜித் சியாம் , அவரது உறவினராக கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கேரளாவை சேர்ந்த சில மருத்துவமனை ஊழியர்களும் உடல் உறுப்புகளுக்காக ஆள் கடத்தலுக்கு உதவிய தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடல் உறுப்பு வர்த்தகம் மற்றும் அது தொடர்பான மனித கடத்தல் வழக்கை விசாரிக்கும் எர்ணாகுளம் ஊரக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் ஐதராபாத்தை தளமாகக் கொண்டு உடல் உறுப்பு மோசடி கும்பலின் மன்னன் செயல்படுவது தெரியவந்தது. அவனை ரகசியமாக கண்காணித்த கேரள போலீசார் ஒரு ஓட்டலில் வைத்து கைது செய்தனர். அவன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பிரசாத் (வயது 41) ஆவார். பல்லம்கொண்டா ராம் பிரசாத் என அழைக்கப்படும் அவரை கொச்சிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரசாத், முதலில் சிறுநீரகம் தானம் செய்பவராக தான் வந்துள்ளார். ஆனால் அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு தான் அவர் நன்கொடையாளர்களை கண்டுபிடித்து, ஈரானுக்கு கடத்தி உடல் உறுப்புகளை விற்கும் செயலில் இறங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தொடர்புடைய மது என்பவர், இன்னும் ஈரானில் உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- நாய் அடைக்கும் கூண்டில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சிறிய அறைக்குள்ளேய தங்கியிருந்தது மட்டுமின்றி, உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறவம் என்ற பகுதி இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் உள்ள நாய் கூண்டில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தங்கியிருப்பதை அப்பகுதி பொதுமக்கள் அறிந்தனர்.
அதுகுறித்து அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜாய் என்பவரின் வீட்டில் இருந்த நாய் அடைக்கும் கூண்டில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த தொழிலாளி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர் ஆவார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளியாக கேரள மாநிலத்துக்கு வந்திருக்கிறார். கட்டிட வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்த அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனால் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்திருக்கிறார். வாடகை கொடுக்கக்கூட பணம் இல்லாத காரணத்தால் அடிக்கடி வீட்டை மாற்றியபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் தான், தனது நண்பர் ஒருவரின் மூலம் ஜாய் வீட்டில் உள்ள நாய் கூண்டில் வாடகைக்கு தங்கி வந்திருக்கிறார்.
அந்த இடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் குடியேறியிருக்கிறார். அதற்கு மாத வாடகையாக 500 ரூபாய் கொடுத்துள்ளார். ஒரு நாய் தங்கக்கூடிய வகையில் இருந்த குறுகிய இடத்துக்குள் ஷியாம் சுந்தர் தங்கி வந்திருக்கிறார். அந்த சிறிய அறைக்குள்ளேய தங்கியிருந்தது மட்டுமின்றி, உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.
இதனையறிந்த அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளி ஷியாம் சுந்தர் மற்றும் அவர் தங்கியிருந்த நாய் கூண்டு இருந்த வீட்டின் உரிமையாளர் ஜாய் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மனிதாபிமானமற்ற முறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
நாய் கூண்டில் விரும்பி தங்கியதாக தொழிலாளி ஷியாம் சுந்தர் தெரிவித்திருக்கிறார். இதனால் வீட்டின் உரிமையாளர் ஜாய் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஷியாம் சுந்தரை அவர் தங்கியிருந்த இடத்தில் தொடர்ந்து தங்க அனுமதிக்க வில்லை.
அவரை அவருடைய நண்பரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நாய் கூண்டில் புலம்பெயர் தொழிலாளி வாடகை கொடுத்து தங்கியிருந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மலப்புரம, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிர மடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி இருக்கிறது. இந்நிலையில் வருகிற 30-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுதினம் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மோசமான வானிலை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தி இருக்கிறது.
- அருவி தடாகத்தில் அக்சா ரெஜி, டொனால் ஷாஜி ஆகியோர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் தாளவூரைச் சேர்ந்தவர் அக்சா ரெஜி (வயது 18), இவர் தொடுபுழா முட்டம் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதே பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு கணிணி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் டொனால் ஷாஜி (22). இவர் இடுக்கி முறிக்காச்சேரியை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரையும் நேற்று காணாததால் சக மாணவ-மாணவிகள் தேடினர். அவர்களது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இடுக்கி அருவிக்குத்து அருவி அருகே அவர்களது செல்போன் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அருவி தடாகத்தில் அக்சா ரெஜி, டொனால் ஷாஜி ஆகியோர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.
அவர்கள் அருவி தடாகத்தில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
- யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிக்கோடு அருகே உள் ஊருங்காட்டேரி பகுதியை சேர்ந்த சன்னி என்பவரின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று தவறி விழுந்துவிட்டது.
அந்த கிணறு 25 அடி ஆழம் என்பதால் யானையால் மேலே வரமுடியவில்லை. இதுகுறித்து மலப்புரம் வனத்ததுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதே நேரத்தல் அந்த பகுதி மக்கள் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் யானையை மீட்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை வனத்துறையினர் சமரசம் செய்து அனுப்பி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர்.
யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர். யானையை கிணற்றுக்கு வெளியே கொண்டு வருதற்காக கிணற்றின் அருகில் மிகப் பெரிய குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக யானை வெளியே கொண்டு வரப்பட்டது.
சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து காட்டு யானை மீட்கப்பட்டது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
- சுரேசன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- போலீசார் தாக்கியதன் காரணமாக முன்னாள் விமானப்படை வீரரின் கால் செயலிழந்து அகற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுரேசன்(வயது49). இவர் இந்திய விமானப்படையில் 21 ஆண்டுகள் தரைப் பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
சுரேசன் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பொருட்கள் வாங்குவதற்காக மங்களூரில் உள்ள மிலிட்டரி கேன்டீனுக்கு சென்று வருவார். அதேபோல் கடந்த 1-ந்தேதி நீலேஸ்வரத்தில் இருந்து மலபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மங்களூருக்கு சென்றார்.
மங்களூரு ரெயில் நிலையத்துக்கு சென்றடைந்ததும், சுரேசனுக்கு திடீரன உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரெயிலில் அதிக கூட்டம் இருந்த பொதுப் பெட்டியில் பயணித்து வந்ததன் காரணமாக அவருக்கு குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் படுத்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், ரெயில் நிலையத்தில் படுத்து தூங்க அனுமதியில்லை என்று கூறி சுரேசனை அங்கிருந்து செல்லுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர் தான் முன்னாள் விமானப்படை வீரர் என்றும், மிலிட்டரி கேன்டீனுக்கு வந்த இடத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் படுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அதனை ஏற்றுக் கொள்ளாத அந்த போலீஸ்காரர், சுரேசனில் காலில் லத்தியால் பயங்கரமாக தாக்கினார். படுத்திருந்த நிலையில் எழுந்திருக்க முயன்றபோதும், அந்த போலீஸ்காரர் சுரேசனின் காலில் லத்தியால் தொடர்ந்து அடித்திருக்கிறார்.
இதனால் சுரேசனால் நடக்க முடியவில்லை. காலை முதல் இரவு வரை எழுந்து நடக்க முடியாமல் ரெயில் நிலையத்திலேயே அமர்ந்திருந்த சுரேசன், இரவில் தனது மனைவிக்கு போன் செய்து நடந்ததை கூறினார். மேலும் தான் எழுந்திருக்க முடியாமல் ரெயில் நிலையத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து சுரேசனின் குடும்பத்தினர் மங்களூரு ரெயில் நிலையத்துக்கு சென்று அவரை நீலேஸ்வரத்துக்கு அழைத்துவந்து, அங்குள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுகுமாறு கூறினர்.
இதையடுத்து சுரேசன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இடது கால் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடைந்ததால் சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்கள் சிகிச்சை அளித்த போதிலும் அவரது கால் இயல்பு நிலைக்கு வரவில்லை. அதனை அகற்றாவிட்டால் சுரேசனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அவரது இடது காலை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
ரெயில்வே போலீஸ்காரர் தாக்கியதால் சுரேசனின் கால் செயலிழந்தது குறித்தும், அந்த கால் அகற்றும் நிலை ஏற்பட்டது பற்றியும் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் தாக்கியதன் காரணமாக முன்னாள் விமானப்படை வீரரின் கால் செயலிழந்து அகற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேரள மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
- திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது.
மங்கலம் :
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி அமைப்பான முஸ்லிம் யூத் லீக் அமைப்பின் கேரளா மாநில பொது செயலாளர் பி.கே.பிரோஸ் திருப்பூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்தார்.இந்நிகழ்ச்சியானது மங்கலம் நால்ரோடு அருகே உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் ஒன்றிய தலைவர் ஜக்கரிய்யா சேட் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த புத்தூர் பாபு துவக்கி வைத்தார்.இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் யூத் லீக், மாணவர் பேரவை நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செய்யது முஸ்தபா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளர் சிராஜ்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணை தலைவர் அப்பாஸ், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட செயலாளர் சல்மான்,துணை செயலாளர் முபீஸ்,மங்கலம் யூத் லீக் நகர தலைவர் சாதிக் அலி,பொருளாளர் ரியாஸ்,முஸ்லிம் மாணவர் பேரவை மங்கலம் நகர தலைவர் ஹக்கிம்,யாசர், கே.எம்.சி.சி.மாவட்ட தலைவர் அக்பர் அலி,மாவட்ட பொது செயலாளர் உவைஸ்,மாவட்ட செயலாளர் சாலிமார் அப்பாஸ்என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் முஸ்லிம் யூத் லீக் சார்பாக கேரள மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக ஒன்றிய செயலாளர் சாதிக் அலி நன்றி கூறினார்.