search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodanad"

    • மான நஷ்ட ஈடாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    கொடநாடு கொலை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசக்கூடாது என உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால், ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரின் சகோதரர் தனபால் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேட்டி அளித்து வந்தார்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான மனுவில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதுவரை அவதூறாக பேசி வந்த தனபால் ரூ. 1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    • கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர்.
    • அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார் டிரைவர் கனகராஜ். இவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்த நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார். இந்த கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர். இவர் கனகராஜின் சிம்கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகு துரையின் சட்டையை பிடித்து தள்ளியதாக போலீசார் தனபாலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . அவரை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
    • கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.


    இந்த மேல் முறையீட்டு மனு நீதிபரிகள் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு கொள்ளை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #Kodanadissue #Sayan #Manoj

    ஊட்டி:

    கொடநாடு பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி புகுந்த கொள்ளை கும்பல் காவலாளியை கொலை செய்து விட்டு, பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூசாமுவேல் முன்னிலையில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் பற்றி அவதூறு பரப்பியாக சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து விட்டார்.

    இந்நிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டியை சேர்ந்த அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2-ந் தேதி நடந்தது.

    அப்போது அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டு தலைமை அரசு வக்கீல் நடராஜ் ஆஜரானார். சயான் மற்றும் வாளையார் மனோஜ் சார்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜரானார். சுமார் 5 மணி நேரம் இரு தரப்பினரும் நீதிபதி முன் காரசாரமாக வாதாடினர். அதன்பின் 8-ந் தேதி இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு வெளியிடப்படும் என நீதிபதி வடமலை தெரிவித்தார்.

    நேற்று சயான், வாளையார் மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மனோஜ்சாமி, ஜித்தின் ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி ஆகிய 6 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதாகவும், கோர்ட்டில் ஆஜராகாத பிஜின், திபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி கூறினார். மேலும் சயான், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். #kodanad #Kanimozhi #DMK
    கோவில்பட்டி :

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இடஒதுக்கீடே வீணாகக்கூடிய நிலை உள்ளது.

    தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்பதற்காக கலைஞர் கருணாநிதி மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கினார். ஆனால் மருத்துவ கல்வி பயில நீட் தேர்வை கட்டாயமாக்கியதால், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நமது மாணவர்கள் பயில்வதற்கு பதிலாக, வெளிமாநில மாணவர்கள் பயிலும் அவலநிலை உள்ளது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முற்றிலும் மத்திய அரசு சிதைத்து விட்டது.



    ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

    இது மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு இப்போது இருந்தே பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kodanad #Kanimozhi #DMK
    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #mkstalin #edappadipalanisamy #KodanadVideo
    சென்னை:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. 

    இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்கள்.

    மேலும் கொடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில்,  கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவருடன் டி.ஆர். பாலு,  கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் உடன் சென்றனர்.

    கொடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் நேரில் முறையிட்டார்.  கொடநாடு  கொலை கொள்ளை வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக்கோரி மனு அளித்து உள்ளார்.

    கவர்னருடனான சந்திப்புக்கு பின் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமியை உடனடியாக பதவி விலக்க வேண்டும் என கூறினார். #mkstalin #edappadipalanisamy #KodanadVideo
    கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KodanadEstate #KodanadVideo

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

    10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.

    ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொடநாடு சம்பவம் தொடர்பாக ‌சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.

    இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

    அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்.


    அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த ‌சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் ‌சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

    விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், இப்போது புதிதாக குற்றச்சாட்டை கூறி இருப்பது ஏன்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு 2 பேரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தெகல்கா முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல் உங்களை தொடர்பு கொண்டது எப்படி? கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இப்போது முதல்வர் மீது புகார் கூறுவது ஏன்? என்பது போன்ற கேள்விகளையும் போலீசார் முன் வைத்துள்ளனர்.

    இதற்கு ‌சயன், மனோஜ் ஆகியோரும் விரிவாக பதில் அளித்துள்ளனர். ‌ஷயான் கூறும்போது, எனது மனைவியும், மகளையும் விபத்தில் பலி கொடுத்துவிட்டேன். இனி இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று பேட்டியில் கூறிய கருத்துக்களையே போலீசாரிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.

    இவர்கள் அளித்த தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.

    சயன், மனோஜ் இருவரையும் எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்பில் நீதிபதி முன்பு இன்று போலீசார் ஆஜர் படுத்துகின்றனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    சயன், மனோஜ் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வரும் எழும்பூர் பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரும் அனு மதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரை தவிர வெளியாட்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #KodanadEstate #KodanadVideo

    கொடநாடு சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

    பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #KodanadEstate #KodanadVideo
    கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MinisterJayakumar #jayalalithaa #EdappadiPalanisamy
    நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கெடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது.

    இவ்விவகாரத்தில் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் பரிதாபமாக இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பின்னார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்,  இவ்விவகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



    இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள்நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கொடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே.  கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன?  காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சிக்கு யாரும் துணை போகக்கூடாது என கூறினார். #MinisterJayakumar #jayalalithaa #EdappadiPalanisamy
    ×