என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Koovam river"
- தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
- தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆறு திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வருகிறது.
புதுச்சத்திரம் கிராமத்தில் கூவம் ஆற்றை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக கடந்த 1950-ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் திருநின்றவூர் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமானது ஆகும்.
இந்த தரைப்பாலத்தில் புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார், தொழிற்சாலை பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு ரூ.90 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
ஆனால் பயன்பாட்டிற்கு வந்த 3-வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. கரையின் இருபக்கமும் எந்த வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.
இந்த தரைப்பாலத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக சவுக்கு கம்புகளை தடுப்புகளாக அதிகாரிகள் கட்டி வைத்துள்ளனர். இந்த கம்புகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டவை.
தற்போது கம்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலப்பகுதியில் தெரு மின்விளக்குகள் எதுவும் கிடையாது.
இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடு வதற்காக சாலையோரம் திருப்பும் போது வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
வாகன விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தில் கட்டப்பட்டு உள்ள தடுப்பு கம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது சவாலானது.
கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் சென்றால் கூவம் ஆற்றிற்குள் விழும் அபாயம் உள்ளது. தரைப்பாலத்தில் எந்த தடுப்புகளும் இல்லை.
இதில் விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தின் பக்கவாட்டில் சவுக்கு கம்புகளை கட்டி வைத்தி ருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த கம்புகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் எப்படி தடுக்கும்.
எதன் அடிப்படையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றே தெரிய வில்லை. இது அதிகாரிகளுக்கு தெரியாதா? தரைப்பாலத்தில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
எனவே புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தால் பருவமழையின் போதும் பாதிப்பு ஏற்டாமல் செல்ல முடியும் என்றனர்.
- டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
- மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை (20.6 கி.மீ.) திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு சிக்கல்களால் அந்த பணி முடங்கியது.
இதைத் தொடர்ந்து தற்போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது. இதற்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் 2 அடுக்கு மேம்பால திட்டத்தில் துறைமுகம்- மதுரவாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தூண்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் மொத்தம் 17 தூண்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் முழுவதும் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த தூண்கள் கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டது குறித்து சிக்கல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்படும் சென்னை துறைமுகம்- மதுர வாயல் 2 அடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள் மற்றும் 13 சரிவுப் பாதைகள் வர உள்ளன. மேம்பால பணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் தொடங்கி உள்ளனர்.
சில இடங்களில் மண் பரிசோதனையும் முடிந்து உள்ளது. மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலத் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி உள்ளன. அரும்பாக்கத்தில் 4ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்குகிறது.
துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. நந்தனத்தில் புதிய வீடுகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இதன் பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என்றனர்.
- மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
- தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.
மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.
ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.
அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
- ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.
மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
- மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்.
- இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை.
சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்.
கூவம் நதி சென்னை முழுவதும் ஒடும் நதி. மழை காலத்திற்கு பின்னர், கூவம் நதியை சீர் செய்யும் நடவடிக்கையை அரசு மேற் கொள்ளும். அதன் பிறகு லண்டனில் நாம் பார்ப்பதை போல் இங்கும் காண முடியும். மதுரவாயல்-துறைமுகம் மேம்பால விரைவு சாலையை 2024 ஆம் ஆண்டு திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்