search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudalur"

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

    இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×