என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabishekam"
- 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்த கோவிலில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது.
புகழ்பெற்ற சுசீந்திரம் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 18 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசும், அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து சுசீந்திரம் தெற்கு மண்மடத்தைச் சேர்ந்தவரும், சுசீந்திரம் கோவில் நித்திய யோகஸ்தானியருமான திலீப் நம்பூதிரி (வயது 53) கூறியதாவது:-
நாங்கள்தான் கோவில் திருவிழாக்களின்போது கொடியேற்றுவோம். யாருடைய அனுமதியும் இன்றி நாங்கள் கோவிலுக்குள் சென்றுவர எங்களுக்கு உரிமை உண்டு. கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஊர்மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இதனால் உருவாகும் தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். களபபூஜை நடத்துவது ஊர் மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறோம். அதேபோல்தான் கும்பாபிஷேகத்தையும் நடத்த வேண்டும். எனவே அரசு எவ்வளவு சீக்கிரமாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமோ? அவ்வளவு சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
சுசீந்திரம் கோவில் வட்டப்பள்ளி ஸ்தானிகரும், ஆயுர்வேத டாக்டருமான சிவபிரசாத் (45) கூறியதாவது:-
கோவில்களை பொறுத்தவரையில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சாதாரணமாக கும்பாபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும்போது மொத்தத்தில் கோவில் புதுப்பிக்கப்படுகிறது.
கோவிலில் உள்ள இடர்பாடுகள், பழுதுபார்க்கும் பணிகள், சுத்தப்படுத்த வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும். இந்த பணி என்பது நமது வீட்டை எவ்வாறு பராமரிப்பு செய்வோமோ அதுபோன்றதுதான் கோவில் கும்பாபிஷேகப்பணியும். 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளை கடந்து அதிகமாக 6 ஆண்டுகளும் ஆகிவிட்டது.
கடந்த திருவிழாவின்போதே அதிகாரிகள் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்கள். கோவில்கள் ஒவ்வொரு ஊருக்கும் பலன் தரக்கூடியதாகும். கும்பாபிஷேகம் செய்யும்போது ஊருக்கும், மக்களுக்கும் புண்ணியங்களும், நன்மைகளும் கிடைக்கும். எனவே எவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசீந்திரம் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் ஆகிய கோவில்கள் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களாகும். இதற்காக திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும்.
சுசீந்திரம்தாணுமாலயன்சாமி கோவில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக மாடர்ன் டைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைக்கும் பணி ரூ.76 லட்சத்திலும், உபசன்னதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் பணி ரூ.21 லட்சத்திலும், மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல் பணி ரூ.62 லட்சத்திலும், கருங்கல்லால் ஆன கட்டமைப்புகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, வரிவாளம் அமைக்கும் பணி ரூ.39 லட்சத்திலும், விமானங்களில் வர்ணம் பூசுதல் பணி ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், ராஜகோபுரத்தில் திருப்பணி ரூ.30 லட்சத்திலும், மின் இணைப்பு பணி ரூ.25 லட்சத்திலும் என மொத்தம் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியம் நன்றாக உள்ளது. சுசீந்திரம் உள்ளிட்ட 3 கோவில்களில் கும்பாபிஷேகப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டு வரும் அய்யப்ப சாமி கோவிலின் எழில் மிகு தோற்றம்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினரால் புதிதாக அய்யப்ப சாமிக்கு கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், துறவிக்காடு சாலையின் வடபுரத்தில் அய்யப்ப சாமிக்கு கோவில் கட்டும் பணி தொடங்கியது.
அய்யப்ப சுவாமி கோவிலின் திருப்பணி வேலைகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெறும் நிலையை எட்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அய்யப்ப சுவாமிக்கும் அதன் பரிவார தெய்வங்களான கன்னி மூல கணபதி, நாகராஜா சாமி, மஞ்சமாதா, கடுத்தசாமி, கருப்பர் சாமி ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குருசாமி ராமநாதன் தலைமையில் திருச்சிற்றம்பலம் துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்து வருகிறார்கள்.
- கும்பாபிஷேக விழா நாளை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
- 11-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.
குறிஞ்சிப்பாடி அருகே திருத்தினை நகரில் பிரசித்தி பெற்ற சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹீதி ஆகியவை நடைபெறுகிறது.
பின்னர் மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல் காலயாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, சூர்ய பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஆஸ்த்ர ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது.
பின்னர் 9 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர், காத்தவராயன், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
- மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 1919-ம் ஆண்டிற்கு முன்பு நூற்றாண்டு காலம் சிறிய சிவாலயமாக இருந்து பின்னர் பரம்பரை அறங்காவலர்களால் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் கோவிலின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கோவையின் ராமேஸ்வரம் என இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
இந்த கோவிலில் புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு சுமார் 3000 சதுரடியில் கோவிலுக்கு என்று நிரந்தர மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி 27 குண்டங்கள் அடங்கிய யாகசாலையும், ஆகம விதிகளின்படி மந்திரங்கள் ஓதப்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 9-ந் தேதி காலை முதல் கால யாக வேள்வி பூஜை, தீபாராதனையும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்நது 10-ந் தேதி (இன்று) விசேஷ சாந்தி, பூத சுத்தி, 108 த்ரவ்யாஹூதி, கோபுர விமான கலச பிரதிஷ்டையும், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எந்திர ஸ்தாபனமும், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட உள்ளது. மாலை விநாயகர் பூஜை, மண்டப பூஜை, யாக குண்ட பூஜை உடன் சிவபெருமானுக்கு எந்திர ஸ்தாபனமும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை 11-ந் தேதி காலை நான்காம் கால வேள்வி பூஜை மகா சங்கல்பம், கும்ப கலச புறப்பாட்டு உடன் காலை 9.15 - 10.15 மணியளவில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 9 மணி முதல் மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையையொட்டி மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- இன்று நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் மேட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.
திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கோவிலில் குடமுழுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.25-க்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது.
10 மணி அளவில் விமான கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. 10.15 மணி அளவில் மூலஸ்தான மகா குடமுழுக்கு நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
- ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவுற்று 12 ஆண்டுகள் ஆகி விட்டதால், கடந்த 2019-ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பணிகள் தொடங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை தொடங்க உத்தரவிட்டனர்.
அதன்படி கும்பாபிஷேகம் நடந்த நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு இறை அனுமதி பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா சங்கல்யம், வாசுதேவ புன்யாஹவசனம், பஞ்ச கவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப பூஜைகளும், இரவு 9 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை 8.40 மணிக்கு நடந்தது. அப்போது கஸ்தூரி அரங்கநாதர், பரிவார மூர்த்திகள் மற்றும் அனைத்து விமான ராஜ கோபுரங்களும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. முன்னதாக காலை 6.15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, சேவாகாலம், கும்ப ஆராதனை, மூர்த்தி மந்தர தத்வ ஹோமம், காலை 7.45 மணிக்கு பூர்ணாஹுதி, யாத்ரா தரிசனம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. இதில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
- நாளை காலை 7 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
- நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.
பொறையாறில் பூரண புஷ்கலை சமேத திருமுடி அய்யனார் மகா சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு பாலாலையம் செய்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.
முன்னதாக கோவில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டப பூஜை நடந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன் நாடார், பரம்பரை அறங்காவலர் ரூபேஷ் நாடார் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி தாலுகா எருக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 8-ந் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது
கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பாலாஜி ஐயர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பாத்தம்பட் டியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெ்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேள தாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான கொட்டும் மழையென பார்க்காமல் திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள்பெற்று சென்றனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மகா தீபாராதனை காட்டப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொறையாறில் பூரண புஷ்கலை திருமுடி அய்யனார் மகாசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நேற்று காலை நடை பெற்றது.
முன்னதாக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது.
பின்னர் விநாயகர், பூரண புஷ்கலையம்மன் அய்யனார், பிடாரி அம்மன், ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குடமுழுக்கு விழாவில் பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.என்.ரூபேஷ்நாடார், டி.ஜி.ஆர். ஜெயக்குமார் நாடார், கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன், விஜயாலயன்ஜெயக்குமார் நாடார் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.
- முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
- இந்த கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்க தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் அவினாசியப்பருக்கு ஏழுநிலை ராஜகோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 14 ஆண்டுகளுக்கு மேலானதால் கோவில் கோபுரங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
எனவே கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறையினருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இதுபோல் அவினாசி-மங்கலம் ரோட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ராயம்பாளையம் மற்றும் கருணைபாளையம் கிராமங்களில் இருந்து தாரைதப்பட்டை முழங்க பக்தர்கள் அழகிய மண்குதிரைகளுடன்வந்து கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி கிடாய் வெட்டி விசேஷம் செய்வதும் ஆண்டாண்டாக நடந்துவருகிறது.
இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு, சாய்ந்த நிலையிலும் உள்ளது. இந்தகோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவினாசிலிங்கேசுவரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. விரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
- சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது.
- இந்த கோவிலில் 1577-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாக தெரிகிறது.
குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இறைவனை தரிசிப்பதற்காக அரண்மனையை சுற்றிலும் பல கோவில்களை கட்டியுள்ளனர். அதில் ஒன்று தான் நீலகண்டசாமி கோவில்.
வானுயர்ந்த ராஜகோபுரம், அழகான தெப்பக்குளம், சிற்பங்கள் நிறைந்த மகாமண்டபம் என கலை அம்சத்துடன் காணப்படும் இந்த கோவில் வேணாட்டு மன்னரான உதய மார்த்தாண்டன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.
கும்பாபிஷேகம் எப்போது?
இந்த கோவிலில் 1577-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் ஆனந்தவல்லி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலத்தில் இருந்து கணக்கிட்டால் சுமார் 281 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் இந்த கோவிலில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கவில்லை. எனவே இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் வேதனை
இதுகுறித்து பக்தர்கள் சேவா சங்க துணைத்தலைவர் ரவீந்திரன் நாயர் கூறியதாவது:-
நீலகண்டசாமி கோவிலில் எனக்கு தெரிந்தவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. 12 வருடத்திற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவில்லை என்றால் கோவில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் சங்கம் சார்பில் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் அறநிலையத்துறை மூலம் கடந்த 2008-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதுவும் பக்தர்கள் முயற்சியால் நன்கொடை திரட்டப்பட்டு பணிகள் நடந்தன.
ஆனால் கோவில் கொடிமரத்தை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை காலம் கடத்தி வந்ததால் அப்போதும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை.
இந்தநிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆய்வு செய்த பிறகு விரைவில் திருப்பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.
மேலும், கோவிலில் பல பகுதிகள் சேதமாகி காணப்படுகிறது. கொடிமரம் வடக்கு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க வேண்டும். தில்லை நடராஜர் சன்னதியில் சாமி சிலையை காணவில்லை. இதனால் கோவில் பூட்டியே காணப்படுகிறது. இப்படி ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எனவே இதனை நிவர்த்தி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் விருப்பமாக உள்ளது. இனியும் காலதாமதம் செய்தால் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்.
குளத்தை தூர்வார வேண்டும்
பக்தர்கள் சேவா சங்க செயலாளர் பி.கோபகுமார் கூறியதாவது:-
கோவிலில் தெப்பக்குளம் நீண்ட காலம் தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தின் கரைகள் உடைந்தும், கழிவுநீர் கலந்தும் மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதுபோல் குளத்தின் கரையில் கோவிலின் முன்புறமுள்ள நாகர் பீடம் சேதமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் பீடத்தை வலம் வர முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் திருவிழாவின் போது சாமி பவனியில் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் உடைந்து காணப்படுகிறது.
மன்னர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட கோவில்களில் உள்ள சுவாமி விக்கிரகங்களுக்கு திருவிழாவின் போது அணிவிக்கக்கூடிய தங்க ஆபரணங்களை பாதுகாக்கும் கருவூலம் இந்த கோவிலின் உள்ளே காணப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களோடு அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பிற்கு இங்கு பணியாளர்கள் இல்லை. மேலும் கோவிலில் உள்ள சாமிகளுக்கு அத்தாள பூஜைக்கு பிறகு நடத்தப்படும் பள்ளியறை பூஜை நடப்பதில்லை. இப்படி ஆகம சடங்குகள் இல்லாமலும், வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யாமலும் காணப்படும் இந்த கோவிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடுத்தமாதம் திருப்பணிகள் தொடங்கும்
குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் திருப்பணிகள் குறித்து கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் ஒன்றான பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோவிலில் ரூ.2.42 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெற்றதும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும். ரூ.2.42 கோடியில் நடைபெற உள்ள திருப்பணிகளில் நவீனடைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைத்தல், மண்டபம் தட்டோடு பதித்து ஒழுக்கு மாற்றும் வேலை செய்தல், கோவில் மண்டபம் புகைபோக்கி பழுது பார்த்தல், வடக்கு வாசல் மண்டபம் பழுதுபார்த்து பராமரிப்பு வேலை செய்தல், மடப்பள்ளி பழுதுபார்த்தல் மற்றும் கதவு ஜன்னல்கள் பழுதுபார்த்தல், கழிவுநீர் ஓடை சரி செய்தல், கோபுர திருப்பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநயத்துடன் சிற்பங்கள்
இந்த கோவிலின் கிழக்கு பிரகாரத்தை சித்திரசபை என கல்வெட்டு குறிப்பிடும். உண்மையில் இது சிற்பக்கூடமே. இங்கே கலைநுட்பமுடைய சிற்பங்கள் உள்ளன. இம் மண்டப வடக்குப்பகுதி தூண்களில் கர்ணன், கங்காளநாதர், வேணுகோபாலன், அர்ஜூனன் தபசு சிற்பங்களாக காட்சி அளிக்கிறது. ஆளுயர கருங்கல் சிற்பங்கள், கர்ணனின் 2 கைகளில் சர்பமும், வில்லும் உள்ளன. கங்காளநாதர் அருகே சட்டி ஏந்திய குள்ளப்பூதம் உள்ளது. கங்காளரின் வலது கை மானுக்கு புல்கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மான் துள்ளி நிற்கும் வகையில் உள்ளது.
வேணுகோபாலன் 4 கைகள் உடையவர். இரு முன் கைகள் புல்லாங்குழலை பிடித்துள்ளன. இந்த இசைக்கருவி வேணுகோபாலனின் உதட்டின் கீழ் உள்ளவாறு காட்சி அளிக்கிறது. திருமலை நாயக்கர் சிற்பத்தின் அருகே உள்ள விளக்கேந்திய பாவை பலவகை ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். இவள் தலைமுடியை பின்னிப் போட்டிருப்பது நுட்பமாக காட்டப்பட்டுள்ளது.
இந்த மண்டப கிழக்கு பக்கத் தூணில் தலையிலும், கையிலும் பலாப்பழத்தை சுமந்து கொண்டு பெண்ணொருத்தி நிற்கும் காட்சியும் வேறு சிற்பக் காட்சிகளும் உள்ளன. அம்மன் கோவிலின் முன்பகுதி மண்டபத்தில் ஒப்பனை பெண், வில்லுடன் ராமர், இளவரசியை கவர்ந்து செல்லும் குறவர் என பல சிற்பங்கள். இங்குள்ள முன் மண்டபத்தூணில் மானை சுமந்து செல்லும் வேடனின் சிற்பம், சிவன் என சில சிற்பங்கள் கலைநயத்துடன் கண்ணை கவரும் வகையில் உள்ளன.
பத்மநாபபுரம் கோவில் மற்றும் ஊரில் 15 கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழ் மற்றும் வட்டெழுத்து வடிவில் அமைந்தவை. இக்கோவிலில் 5 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் வழி கோவில் கட்டுமானத்தை ஓரளவு கணிக்க முடிகிறது.
வீர கேரள வர்மன் என்னும் வேணாட்டு மன்னனின் கி.பி.1237-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோவிலுக்கு இரணிய சிங்கநல்லூரில் நிலம் கொடுத்தது தெரிகிறது.