என் மலர்
நீங்கள் தேடியது "Kutralam Falls"
- அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது.
- சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.
தென்காசி:
தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
குறிப்பாக நேற்று நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி,பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.
இருப்பினும் தடை உத்தரவால் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் அருவிகளை தூரத்திலிருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.
மேலும் பள்ளிகளுக்கு தற்பொழுது தொடர் விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதாலும் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
- ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது.
- மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, தென்காசி நகரம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. சிறிது நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.
இன்று காலையில் மழை குறைந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்ததால் புலி அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஐந்தருவி, மெயின் அருவியிலும் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் இன்று காலை சுற்றுலா பயணிகள் அங்கும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருவதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காலை முதலே அதிகமாக காணப்பட்டது.
- அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
- ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.
தென்காசி:
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தில் முடிவுற்ற நிலையில் அவ்வப்போது கேரளா மற்றும் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக கடந்த வாரம் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போது மழைப் பொழிவு முழுவதுமாக குறைந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் பாறைகளை ஒட்டி மிதமாக விழும் குறைந்த அளவு தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குற்றால அருவிகளில் குளிக்க குவிந்திருந்தனர்.
கேரளாவிலும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை நோக்கி கேரளா சுற்றுலாப் பயணிகள் படை யெடுத்து வருகின்றனர்.
- பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது.
இந்த சேதங்களானது சீர் செய்யப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சீரமைப்பு பணி ஓரளவு நிறைவு பெற்றதால், நேற்று இரவு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சபரிமலை நோக்கி சென்று வருகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பெய்தது.
- அதிகபட்சமாக அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டரும், குண்டாறில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வர தொடங்கியது. பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் வழக்கம்போல் வெயில் அடித்தது. மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இதமான காற்று வீசியது.
மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டவுன் ஆர்ச் முதல் ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும், சந்திப்பு பஸ் நிலைய பகுதியிலும், பழைய பேட்டை முதல் தொண்டர் சன்னதி வரையிலும் சாலைகள் பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டரும், குண்டாறில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டையில் லேசான சாரல் மழை பெய்தது. சிவகிரியில் 9 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பின்னர் மழை குறைந்ததால் இன்று காலை அருவிகளில் தண்ணீர் குறையத் தொடங்கியது. இதனால் இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.