search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "legal action"

    • ஓட்டல் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை.
    • ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிரிக்கெட் தவிர இவர் வேறு சில வியாபாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விராட் கோலி இணை உரிமையாளராக இருக்கும் ஒன்8 கம்யூன் என்ற ஓட்டல் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஓட்டல் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    எனினும், இந்த ஓட்டலின் பார் நள்ளிரவு 1 மணியை கடந்தும் இயங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்8 கம்யூன் மட்டுமின்றி பெங்களூரு முழுக்க நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வந்த பல்வேறு பார்கள் மீதும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட ஒன்8 கம்யூன் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பூனே மற்றும் கொல்கட்டா உள்ளிட்ட இடங்களிலும் கிளைகளை கொண்டுள்ளது.

    குற்ற வழக்குகளில் கைதானவர்கள் நன்னடத்தையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இப்ராகிம் நகரைச் சோ்ந்தவா் முகமது ஜிப்ரி (வயது30). இவா் ஏற்கனவே பல வழக்குகளில் சிறை சென்றுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்னடத்தை பிணைய  பத்திரம் அளித்திருந்தாா். 

    இந்த நிலையில் இவா் சித்தாா்கோட்டை சரவணகுமாா் (43) என்பவரை மிரட்டி கைப்பேசியைப் பறித்ததாக, சமீபத்தில் கைது செய்ய ப்பட்டாா். இவர் மீது ஏற்கனவே ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நிலையில், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதையடுத்து ஜிப்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.இனிவருங்காலங்களிலும் இது போன்ற நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நபர்கள், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • 38 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 410-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரனின் அறிவுறுத்தலின்படியும், கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி வழிகாட்டுதல்படியும், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.மலர்க்கொடி தலைமையில் திருப்பூர் நகர்புறம், தாராபுரம், உடுமலை மற்றும் காங்கயம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் தொழில் சம்பந்தமான நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என 19 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாதது கண்டறியப்பட்டு கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 38 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 410-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாதந்தோறும் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வின் போது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆர்.மலர்கொடி தெரிவித்தார். 

    பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார். #Sasikala #VIPtreatment
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, 2017-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறினார். மேலும் இதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு விசாரணை நடத்தி மாநில அரசிடம் அறிக்கை வழங்கியது. அதில், டி.ஐ.ஜி. ரூபா கூறிய அனைத்து புகார்களும் உண்மை என்றும், சசிகலாவுக்கு 5 அறைகளும், சமையல் கூடமும் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் சிறையை விட்டு சசிகலா வெளியில் சென்றது உண்மை தான் என்றும், இந்த விஷயத்தில் சிறை அதிகாரிகள் சட்டத்தை மீறி தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா, “தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.

    இது குறித்து கர்நாடக மாநில போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனித்தேன். ஊடகங்களிலும் இதுபற்றி வெளியானதை பார்த்தேன். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #Sasikala #VIPtreatment
    மேகதாது பிரச்சினை தமிழகத்தை பாதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். #Mekadatudam #Rajinikanth
    சென்னை:

    ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?



    பதில்:- மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது தான் இதற்கு ஒரே வழி.

    கேள்வி:- ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதே?

    பதில்:- ரிசர்வ் வங்கி கவர்னர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்ற உண்மையை தெரியாமல் என்னால் பேச முடியாது.

    கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகப் போகிறது. இப்போது அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- அதை நிறைய முறை சொல்லி விட்டேன்.

    கேள்வி:- உங்களின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வரும்?

    பதில்:- “பேட்ட” படம் வெளி வந்ததும் அடுத்த படம் பற்றி பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekadatudam #Rajinikanth

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக மறுத்துவிட்டார். புகார் கூறியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் அறிவித்து உள்ளார். #MeToo #MJAkbar
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வருபவர் எம்.ஜே.அக்பர். பா.ஜனதா சார்பில் மத்திய பிரதேசத்தில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், அரசியலுக்கு வருவதற்கு முன் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

    அப்படி பத்திரிகை ஆசிரியராக எம்.ஜே.அக்பர் பணியாற்றிய காலத்தில், சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்பட 11 பெண் பத்திரிகையாளர்கள் புகார் கூறி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நேற்று கேள்வி எழுப்பினார்.



    இதேபோல் பா.ஜனதா கட்சியினரிடையேயும் மந்திரிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனவும், இந்த புகார்கள் குறித்து எம்.ஜே.அக்பர் பதில் அளிக்க வேண்டும் எனவும் சக பெண் மந்திரிகளான மேனகாகாந்தி, ஸ்மிரிதி இரானி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையில் பாலியல் தொல்லை தடுப்புச்சட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த வலியுறுத்தினர்.

    இந்த புகார்கள் குறித்து பா.ஜனதா தலைமை தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தநிலையில், ‘இந்த பிரச்சினை குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’ என கட்சித்தலைவர் அமித்ஷா முதல் முறையாக நேற்றுமுன்தினம் அறிவித்தார். இந்த புகார் தொடர்பாக தனது கருத்தை எம்.ஜே.அக்பர் வெளியிட்ட பின் அவரிடம் கட்சித்தலைமை விசாரிக்கும் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறி உள்ளன.

    இதற்கிடையே மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலகியதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்ததாகவும் நேற்று தகவல் வெளியானது. மேலும் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்கு அவர் நேரம் கேட்டிருப்பதாகவும் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் அந்த செய்திகளை மத்திய அரசு வட்டாரங்கள் பின்னர் மறுத்து விட்டன.

    இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த மந்திரி எம்.ஜே.அக்பர் நேற்று காலையில் டெல்லி வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு எந்த பதிலும் அளிக்காத எம்.ஜே.அக்பர், இது தொடர்பாக பின்னர் அறிக்கை வெளியிடுவேன் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

    அதன்படி மாலையில் அறிக்கை வெளியிட்ட மந்திரி எம்.ஜே.அக்பர், தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அதில் கூறி உள்ளார். இதன் மூலம் ராஜினாமா கோரிக்கையை அவர் நிராகரித்து உள்ளார். அவர் அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-

    என் மீது கூறப்பட்டு உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை. என்னை அவமதிக்கும் நோக்கில் கூறப்பட்டவை. ஆதாரம் இல்லாமல் கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் சில துறைகளில் வேகமாக பரவி இருக்கின்றன.

    இந்த தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனது புகழ் மற்றும் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. அடிப்படை ஆதாரமற்ற இந்த கடுமையான குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, இந்த விவகாரத்தை எனது வக்கீல்கள் ஆய்வு செய்வார்கள்.

    இந்த பிரச்சினையை, ஓராண்டுக்கு முன் வெளியிட்ட ஒரு கட்டுரை மூலம் பிரியா ரமணி தொடங்கி வைத்தார். ஆனால் அதில் அவர் எனது பெயரை வெளியிடவில்லை. ஏனெனில் இதில் உண்மையில்லை என்பது அவருக்கே தெரியும்.

    அந்த கட்டுரையில் எனது பெயரை ஏன் குறிப்பிடவில்லை? என சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போதுகூட, ‘அவர் (எம்.ஜே.அக்பர்) எதுவும் செய்யவில்லை என்பதால், அவரது பெயரை வெளியிடவில்லை’ என தெரிவித்து இருந்தார். அப்படி தொடக்கத்திலேயே இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    மேலும் நான் நீச்சல் குளத்தில் வைத்து விருந்தளித்ததாக அஞ்சு பாரதி என்ற பெண் அபத்தமான குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். ஆனால் எனக்கு நீச்சலே தெரியாது.

    இதைப்போல 21 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகை அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கசாலா வகாப் என்ற பெண் கூறியிருக்கிறார். ஒரேயொரு பத்திரிகையில் மட்டும்தான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அங்கு சிறிய அறையில்தான் ஆசிரியர் குழு செயல்பட்டு வந்தது.

    அதில் எனக்கு பிளைவுட் மற்றும் கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு மிகச்சிறிய அறை தரப்பட்டு இருந்தது. அதற்குள் என்ன நடந்தாலும் வெளியில் தெரியும். ஏனெனில் அதில் இருந்து 2 அடி தூரத்தில் சக ஊழியர்கள் பணி செய்து கொண்டிருப்பர். அந்த அறைக்குள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது.

    நான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீணு சாண்டல் என்பவரிடம் புகார் தெரிவித்ததாக கசாலா கூறியுள்ளார். ஆனால் கசாலாவின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என வீணு சாண்டல், பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 ஆண்டுகளில் என் மீது பாலியல் தொடர்பாக எந்தவொரு புகாரும் எழவில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.

    பாலியல் தொல்லை சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்துக்கு பின்னரும் பிரியா ரமணி மற்றும் கசாலா ஆகியோர் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். அப்படியென்றால் என்னால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தானே அர்த்தம்?

    அப்படியென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இந்த புகார்கள் கிளம்பியிருப்பதன் நோக்கம் என்ன? இது தொடர்பாக ஏதாவது திட்டம் இருக்கிறதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வெறும் அரசியல் நோக்கத்துக்காகவே இந்த பிரச்சினை எழுப்பப்பட்டு இருக்கிறது.

    பொய்களுக்கு கால்கள் கிடையாது, ஆனால் நஞ்சை கொண்டிருக்கின்றன. இந்த புகார்கள் எனக்கு ஆழ்ந்த துயரை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே நான் ஏற்கனவே கூறியது போல இது தொடர்பாக சரியான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜே.அக்பர் கூறியிருந்தார். 
    வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

    இதுதொடர்பான வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். அப்போது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில், வேலை செய்ய பல போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஆர்டர்லியாக பணி செய்யும் போலீசார் எத்தனை பேர் உள்ளனர்? என்று அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த தமிழக டி.ஜி.பி., ஆர்டர்லி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது போலீசார் வீட்டில் ஆர்டர்லியே கிடையாது என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

    இதன்பின்னர் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கினால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வார விடுமுறை வழங்குவது குறித்து ஒரு குழுவை அமைத்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, போலீஸ் நிலை ஆணையின்படி, வாரம் ஒருநாள் போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. சிலர் அந்த விடுப்பு வேண்டாம் என்று கூறி பணிக்கு வந்து, அந்த கூடுதல் பணி நேரத்துக்கு ரூ.200 பெற்றுக்கொள்கின்றனர் என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘வாரம் ஒருநாள் விடுப்புக்கு இப்படி ரூ.200 கொடுத்தால், எந்த போலீஸ்காரரும் வாரவிடுப்பு எடுக்க மாட்டார்கள். அதனால், மாதம் ஒரு முறைதான் இவ்வாறு பணி செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை அரசு உருவாக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வக்கீல் சூரியப்பிரகாசம், “தமிழகத்தில் வழிப்பறி சம்பவம், குறிப்பாக செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. படிக்கும் இளைஞர்கள் பலர் இந்த வழிப்பறி செயலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பெண்களிடம் இருந்து அறுத்து செல்லும் தங்க செயினை வாங்கும் நபர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதுநாள் வரை ஆயிரக்கணக்கான வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் செயினை வாங்கும் நபர்கள் ஒருவரை கூட போலீசார் கைது செய்வது இல்லை. அதனால், வழிப்பறிச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது” என்று கூறினார்.

    இதற்கு நீதிபதி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும்தான் காரணம். போலீசார் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால், வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்த தங்க நகைகளை வாங்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நல ஆணையம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். 
    ×