என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahua Moitra"

    • மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
    • மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்யுமாறு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யாக இருந்த மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை 2023 நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

    இப்பரிந்துரையை ஏற்ற மக்களவை, மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு எஸ்டேட் இயக்குனரகம் கேட்டுக்கொண்டது.

    மஹூவா மொய்த்ரா, தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், இது குறித்து மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், "விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு 6 மாதங்களுக்கு பங்களாவில் உறுப்பினர்கள் தங்க, விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் மஹுவாவின் கோரிக்கை மீது எஸ்டேட் இயக்குனரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம். குடியிருப்பவர்களை காலி செய்ய கூறும் முன்பு, அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. இவ்விவகாரத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் தனது மனுவை திரும்பப் பெற மஹுவாவிற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

    • மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    இதுகுறித்து பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது.

    வீட்டை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மொய்த்ரா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார்.

    • வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக ஆஜராக மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது.
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

    இதற்கிடையே, வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் 19-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மஹுவா மொய்த்ராவுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா
    • கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார்.

    இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.

    ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார்.

    இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

    • நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?.
    • அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பொருளாதாரம், எமர்ஜென்சி உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

    இந்த நிலையில் மத்திய அரசு தயார் செய்த ஸ்கிரிப்ட், பொய்கள் நிறைந்தது என எதிர்க்கட்சிகள் பதில் அளித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

    நான் கூறுவது இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது குறித்தது. இது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?. அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    முதலீடு இருந்தால் நாம் அதிக வளர்ச்சியை பார்க்க முடியும். தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்க முடியாது. இது நமது எண்ணிக்கையை மேம்படுத்தலாம் ஆனால் விவசாயிகள், ஏழைகள் மற்றும் மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது. எமர்ஜென்சியின் போது ஜெயிலில் இருந்தவர்களுக்கு பாஜக என்ன செய்தது?. சமாஜ்வாடி அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, பென்சன் வழங்கியது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

    அரசால் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்-ஐ ஜனாதிபதி படித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை பாஜக இன்னும் உணரவில்லை. பாஜக 303-ல் இருந்து 240-க்கு வந்ததை உணராததுதான் அரசின் பிரச்சனை. 303 மெஜாரிட்டி அடிப்படையில் இந்த உரை தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அரசாங்கம் உண்மையில் மெஜாரிட்டி இல்லாமல் இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறினார் (இநதிய மக்கள் நிலையான அரசை தனி மெஜாரிட்டியுடன் 3-வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளதாக உலகம் பார்க்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்).

    காங்கிரஸ் தலைவர் தரிக் அன்வர்

    பழைய உரைகளில் கொஞ்சம் மாற்றம் செய்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதி உரையில் புதிதாக ஏதும் இல்லை. எமர்ஜென்சிக்குப் பிறகு ஏராளமான தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

    • ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன்.
    • மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல்.

    எம்.பி பதவி பறிக்கப்பட்ட பின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா மக்களவையில் இன்று பாஜகவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

    மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-

    கடந்த வருடத்தில் பலர் என்னை பார்த்து மொய்த்ரா நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்றனர். ஆம். நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன். வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.

    நான் எதை பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்.

    இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் | குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு?"

    மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, Musalman, Mulla, Madrasa, Mutton 2 M-ல் தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆனால், ஒரு வார்த்தையை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை. அது MANIPUR".

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹத்ராஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தேசிய மகளிர் ஆணையத் தளிர் ரேகா சர்மா சென்றார்
    • ரேகா சர்மாவுக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி சென்றது சர்ச்சையானது

    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை அவமத்து பேசியதாக புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் போலே பாபா சாமியாரின் இந்து மத ஆன்மீக சொற்பொழிவின்போது நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    இந்த விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அவர்களை சென்று சந்திக்கும்போது அவருக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி செல்லும் வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.

    அவருக்கு [ரேகா சர்மாவுக்கு] ஏன் மற்றொருவர் குடைபிடிக்கிறார் என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது எக்ஸ் தளத்தில் மஹுவா மொய்த்ரா, அவர் [ரேகா சர்மா] தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கிப் பிடிப்பதில் பிசியாக உள்ளார் என்று பதிலளித்திருந்தார். பின் அந்த பதிவை நீக்கினார்.  இந்த பதிவுக்கு ரேகா சர்மா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மஹுவா மீது மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது, எனவே தற்போது மஹுவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.  

    • நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்த இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு சுதந்திரம் உள்ளது- நீதிபதி குப்தா
    • உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக முடியும்- மொய்த்ரா

    விஷ்வ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குப்தாவும் இதில் கலந்து கொண்டார். இவர் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார்.

    நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சனம் செய்துள்ளார். இது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அரசியல் மற்றும் சித்தாந்த பார்வை தொடர்பான புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

    இந்த நிழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி "இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொள்வது தொடர்பாக கவலை தெரிவிக்கப்படுகிறது. மற்ற நீதிபதிகள் பற்றி என்றால் கருத்து கூற இயலாது. நாட்டின் மற்ற குடிமகன் போன்று நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்த இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு சுதந்திரம் உள்ளது" எனக் கூறியிருந்தார்.

    மஹுமா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் "உண்மையிலேயே மைலார்ட்ஸ், நீங்கள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள சுதந்திரம் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக முடியும். எதையும் செய்வதில் இருந்து கடவுளை யாரால் தடுத்து நிறுத்த முடியும். உங்களைக் கேள்வி கேட்க நாங்கள் யார் - வெறும் மனிதர்கள்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல தடைவிதித்த அம்மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை, ஹேமந்த் குப்தா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது உறுதி செய்தார். அதேவேளையில் மற்றொரு நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப் அணிய தடை இல்லை என மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

    • புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை.
    • ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி.

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு தலைவராக கவர்னர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

    இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது. அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் யுஜிசி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை விமர்சித்து பேசினார். இது தொடர்பாக மக்களவையில் மஹுவா மொய்த்ரா கூறியதாவது:-

    * புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை.

    * ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி.

    * புதிய வரைவு விதிகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர்.

    * துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்கு புதிய விதிகள் இடமளிக்கவில்லை.

    இவ்வாறு மஹுவா மொய்த்ரா மக்களவையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா.
    • அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா.

    தங்கள் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக முன்பு இருந்துள்ள மகுவா மொய்த்ரா, அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

    இந்த நிலையில் தனது தொகுதியில் நடந்த கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு மகுவா மொய்த்ரா சென்றார். அப்போது அவர் திடீரென சேலையுடன் களமிறங்கி கால்பந்து விளையாடி கலக்கினார். அவர் லாவகமாக பந்தை தட்டிச்சென்றது கால்பந்து ரசிகர்களை கவர்ந்தது. மகுவா மொய்த்ரா சிறிதுநேரம் 'கோல் கீப்பிங்'கும் செய்தார்.

    தான் கால்பந்து விளையாடும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள எம்.பி. மகுவா மொய்த்ரா, 'கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சுவாரசியமான தருணங்கள். ஆம், நான் சேலையில் கால்பந்து ஆடினேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    சிவப்பு-ஆரஞ்சு வண்ண சேலையுடன், கண்களில் 'கூலிங்கிளாஸ்', கால்களில் ஷூக்கள் அணிந்து எம்.பி. மகுவா மொய்த்ரா கால்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அவரை பாராட்டியும், ஆதரவாகவும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர் 'அச்சமற்ற இந்தியப் பெண்... இவரால் எதையும் செய்ய முடியும்' என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்காள தேர்தலின்போது பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது.
    • காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

    கொல்கத்தா:

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா காளி குறித்து கூறிய கருத்தும் புயலை கிளப்பியது.

    காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் என்று கூறிய மஹுவா மொய்த்ரா, ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு என்று தெரிவித்தார். மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரசும் கண்டனம் தெரிவித்தது.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாஜகவின் விமர்சனங்களுக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார். பாஜக இந்து தெய்வங்களின் பாதுகாவலர் அல்ல, வங்காளிகளுக்கு தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று கற்பிக்கக் கூடாது, என்றார்.

    "கடந்த 2,000 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்ட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் மீது, வட இந்தியாவில் தெய்வங்களை வழிபடும் முறைகளின் அடிப்படையில் பாஜக தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது. அந்த முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து பேசியதன் மூலம் நான் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டிருக்கிறேன்.

    ராமரோ, அனுமனோ பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த கட்சி இந்து தர்மத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? மேற்கு வங்காள தேர்தலின்போது பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது. ஆனால் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டது. காளியை எப்படி வழிபட வேண்டும் என்பதை பாஜக கற்றுக் கொடுக்கக் கூடாது. காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும். கடந்த 2,000 ஆண்டுகளாக இதே முறையில் அம்மனை வழிபட்டு வருகிறோம்" என்றும் மொய்த்ரா கூறினார்.

    • காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.
    • மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

    கொல்கத்தா:

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் இந்து கடவுளான காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது. இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

    கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பேசியதாவது:

    காளி தேவியை இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு. உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே கடவுளுக்கு மதுவைப் பிரசாதமாக படைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று, அங்கு மதுவை படைத்தீர்கள் என்றால், அவர்கள் அதை தெய்வநிந்தனை என்று கூறுவார்கள.

    என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் தாராபித் (மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சக்தி பீடம்) சென்றால், சாதுக்கள் புகைபிடிப்பதைக் காணலாம். அதுதான் அங்கு வழிபடும் முறை. நான் காளியை வழிபடும் இந்துவாக இருப்பதால், காளியை அப்படிக் கற்பனை செய்ய உரிமை உண்டு; அது என் சுதந்திரம்.

    உங்கள் கடவுளை சைவமாக வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு எனக்கும் சுதந்திரம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக் கடவுள்களை அவமதிப்பது மேற்கு வங்காள ஆளும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? என்றும் பாஜக கேள்வி எழுப்பியது.

    இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக விளக்கம் அளித்ததுடன், மஹுவா மொய்த்ராவுக்கு கண்டனமும் தெரிவித்தது. "மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டது.

    இதற்கிடையே தனது கருத்து குறித்து தெளிவுபடுத்திய மஹுவா மொய்த்ரா, தான் எந்தப் படத்திற்கோ அல்லது போஸ்டருக்கோ ஆதரவளிக்கவில்லை என்றும், புகைபிடிக்கும் வார்த்தையை குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபால் நகரில் உள்ள டீ விற்பனையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    ×