என் மலர்
நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"
- சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.
வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது.
- 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சிரீதியில் அமைந்துள்ள 117 மாவட்டங்களின் செயலாளர்களும் பங்கேற்றனர். கட்சியின் துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகள், கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.
குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டாக வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். கடந்த முறை தேர்தல்களின்போது செய்த தவறுகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் செய்யக்கூடாது' என்று கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.
இதுதவிர அந்தந்த மாவட்டங்களில் நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களையும் மாவட்ட ரீதியாக கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு வெளியே வந்த கமல்ஹாசனிடம், "பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசப்பட்டதா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினோம். விவாதித்தோம். ஆனால் அதை இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் விவாதித்தோம்'' என்று பதில் அளித்தார்.
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறாத நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் இப்போதே ஆயத்த பணிகளில் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கூட்டணி அரசியலை விரும்புவது தெரிய வந்துள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், மூகாம்பிகை, முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். 2 தேர்தல்களில் செய்த தவறை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நாம் செய்துவிடக் கூடாது என்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.
தனித்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியாததை சுட்டிக்காட்டியே நிர்வாகிகள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் 'கூட்டணி'யை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். மக்களின் மதிப்பை பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலுமே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இதற்காக உங்கள் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அவைகளை சரி செய்வதற்கான பணிகளில் எப்போதும் போல தீவிரமாக செயல்படுங்கள். கிராமப் புறங்கள் தொடங்கி நகர் புறங்கள் வரையில் கட்சியை வலுப்படுத்தினால் தான் நம்மால் வெற்றி பெற முடியும்.
பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது பற்றி நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி நாம் தீவிரமாக ஆலோசித்து முடிவு செய்வோம். நீங்கள் கட்சி பணிகளில் வேகம் காட்டுங்கள். கூட்டணி அமைப்பது போன்ற மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் சந்தித்தார். அந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் களம் இறங்கிய வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் வாக்குகளை பிரித்தனர்.
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கமல் கட்சி வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும்படியே வாக்குகளை பெற்றனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியை நழுவ விட்டார்.
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கூட்டணி அரசியலை விரும்புவது தெரிய வந்துள்ளது.
பாரதிய ஜனதாவின் கொள்கைகளுடன் உடன்படாத காரணத்தாலேயே சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் வானதி சீனிவாசனை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிட்டார்.
பாராளுமன்ற தேர்தலிலும் அது போன்ற ஒரு முடிவையே கமல்ஹாசன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தோல்வியை தவிர்க்க 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியில் இணைந்து போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே திரையுலகில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன், கமல்ஹாசன் இணைந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.-காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட கமல்ஹாசன் திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தன்னை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச்சென்ற கோவையிலேயே போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
- மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன்.
- தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம்.
சென்னை:
மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் கட்சிக்காக சென்னையில் திருமண மண்டபம் கட்டி தருவேன் என்று உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன். சென்னையிலேயே இந்த திருமண மண்டபத்தை கட்டி தர என்னால் முடியும். இதுபோன்ற கட்சி கூட்டங்களை நாம் அங்கேயே நடத்திக் கொள்ளலாம். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம். விரைவில் திருமண மண்டபம் தொடர்பான ஆயத்த பணிகளை தொடங்குவோம்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.
- கடந்த மாதங்களில் செய்யப்பட்ட களப்பணிகள் மற்றும் மாவட்ட கட்டமைப்பு நிலவரம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
- ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீரமைக்கும் மாபெரும் மக்களின் பணியே நம்முடைய பணியும் கூட. அதையே சமூக கடமையாகவும் கருதுகிறேன் என்று கூறினார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
16-11-2022 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அந்தவகையில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களையும் சந்தித்து விட்ட நம்மால், இந்தமுறை சிறந்த அரசியல் வியூகம் வகுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும், தேர்தல் வியூகம் குறித்து இன்னும் விரிவாக கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
கடந்த மாதங்களில் செய்யப்பட்ட களப்பணிகள் மற்றும் மாவட்ட கட்டமைப்பு நிலவரம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்த தலைவர், கட்சிக்கான பிரத்யேக பிரசார வாகனம் கூடிய விரைவில் ஒவ்வொரு தொகுதிக்கும் வந்து சேரும் என்றும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீரமைக்கும் மாபெரும் மக்களின் பணியே நம்முடைய பணியும் கூட. அதையே சமூக கடமையாகவும் கருதுகிறேன் என்று கூறினார்.
மேலும், மாவட்ட செயலாளர்களாகிய நீங்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு பணியினை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கலைத்துறையில் தடைகள், தோல்விகள் என அனைத்தையும் எதிர்கொண்டு வென்றது போல, அரசியல் தடைகளையும், தோல்விகளையும் தகர்த்தெறிந்து வெற்றி அடைவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், களப்பணிகளை அதிகப்படுத்தவும், தமிழக அரசியல் வரலாறு, களப்பணி வியூகங்கள், சட்ட அடிப்படை போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம்.
- இந்த முறை 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
சென்னை:
தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள 23 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் அண்ணா அறிவாலயத்தில் கூட்டி இருந்தார்.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினரை இப்போதே தயார் செய்வது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார்.
அவர் பேசும் போது மாவட்டச் செயலாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். மற்ற கட்சிகளை விட தி.மு.க.தான் மக்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நமது கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இதில் மாவட்டச் செயலாளர்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.
பொதுமக்கள் உங்களிடம் கோரிக்கைகளை சொல்லும் போதும் மனு கொடுக்கும் போதும் பொறுமையாக கேட்டு மனுவை வாங்குங்கள். எரிச்சல் படக்கூடாது.
நாம் நடந்து கொள்ளும் விதம்தான் நம்மை உயர்த்தும். மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த முறை 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
அதற்கான பணிகளில் நீங்கள் இப்போதே இறங்க வேண்டும். தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கட்சிக்கு உண்மையாக பணியாற்ற கூடிய பூத் ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.
கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்து கொள்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வலுவான கூட்டணியை அமைப்போம். அதை தேர்தல் சமயத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன்.
மக்கள் மத்தியில் நமக்கு செல்வாக்கு உள்ளது. எனவே அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் அவ்வப்போது எடுத்துச் சொல்லுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை பார்க்கும் போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் தே.மு.தி.க. கட்சியையும், கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தி.முக. கூட்டணியில் சேர்க்க தலைவர் வியூகம் வகுத்து வருவதாக கூறினர்.
விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாதான் தே.மு.தி.க. கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடன் இருப்பதாகவே கூறி வருகிறார்.
எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பிரேமலதா நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்து போட்டியிட்டால் தான் கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் ஒரு சவாலாக அமையும். அதற்கு அக்கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற தூது விடும் என்ற நம்பிக்கையில் தி.மு.க. மேலிடம் உள்ளது.
இதே போல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தி.மு.க. கூட்டணியில் சேரும் என கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தால்தான் அது சாத்தியப்படும் என்ற நிலையில் உள்ளனர்.
எனவே தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாக தி.மு.கவினர் இப்போதே பேச தொடங்கி விட்டனர்.
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
- துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் மதுரை மண்டல செயலாளர் அழகர் உடன் இருந்தனர்.
சென்னை:
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் (பொருளாதாரம்) மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
அப்போது துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் மதுரை மண்டல செயலாளர் அழகர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் அனைவரும் இப்போதில் இருந்தே தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
சென்னை:
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் உள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அப்படியே கூட்டணியில் நீடிக்குமா? இல்லை இடம் மாறி தேர்தலை சந்திக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
புதிய கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன், கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து விதமான தோல்விகளையும் சந்தித்து விட்டார். 2019-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல், 2021-ல் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது.
ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.
இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நெருக்கடி அந்த கட்சிக்கும், கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெற முடியும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியிருப்பதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் அனைவரும் இப்போதில் இருந்தே தீவிரமாக பணியாற்ற வேண்டும். கிராமப் புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும்.
அதில் நிர்வாகிகளை நியமித்து மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற நான் உள்பட அனைவருமே புயல் வேகத்தில் பணியாற்றிட வேண்டும்.
மக்கள் மத்தியில் எனக்குள்ள செல்வாக்கு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை கட்சியின் செல்வாக்காக உயர்த்தும் வகையில் உங்கள் பணிகள் அமைய வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அதனை தான் பார்த்துக் கொள்வேன். நமது கட்சியின் அடித்தளத்தை வலுவாக்கினால்தான் நம்மால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்.
கட்சி வலுவாக இருந்தால் தானே கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் நம்மால் கவனம் செலுத்த முடியும். இதனை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும். அடுத்த 1½ ஆண்டுகள் கடினமாக உழைத்தால் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை உணர வேண்டும்.
கட்சி வளர்ச்சியில் கூடுதல் வேகம் தேவை. தீவிர தொண்டர்களாக நீங்கள் பணியாற்ற வேண்டும். கட்சியை வளர்ப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு செயல்பட நானும் தயாராகவே உள்ளேன். நீங்கள் அழைக்கும் இடத்துக்கு எப்போதும் நான் வருவேன். சினிமா என்பது வருவாய்க்கானது. அரசியல் என்பது மக்களுக்கானது.
எனவே கட்சியை நீங்கள் தான் வளர்த்து கொடுக்க வேண்டும். இதன்மூலமே எதிர்காலத்தில் நாம் வெற்றியை ருசிக்க முடியும்.
இவ்வாறு கமல்ஹாசன் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு வசதியாக 39 பாராளுமன்ற தொகுதியிலும் பொறுப்பாளர்களை நியமிப்பது, தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்பது, கமல்ஹாசனின் சுற்றுப்பயணத்தை திட்டமிடுவது, பொதுக்கூட்டங்களை எங்கெங்கு நடத்துவது என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இப்படி கட்சியை வலுப்படுத்த கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
- மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சிவ இளங்கோ திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார்.
- மற்ற கொடிகள் பறக்கும் இடத்தில்கூட எங்கள் கொடியை ஏற்ற தடைசெய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சிவ இளங்கோ திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார்.
அந்தக்கொடி எற்கனவே அந்த இடத்தில் ஏற்றப்பட்டு, அங்கே கால்வாய் அமைக்கும் பணியால் பிடுங்கப்பட்டது. திரும்ப மற்ற கட்சிகளின் கொடி ஏற்றப்பட்டுவிட்டபின், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி மட்டும் ஏற்ற அனுமதியில்லை என்று தடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கொடிகள் இருக்கும்போது எங்கள் கொடியை மட்டும் தடுப்பதேன், நாங்கள் எங்கள் கொடியை ஏற்றியே தீருவோம் என்று கட்சியினர் போராடிய பின்பு அனுமதி அளிக்கப்பட்டு, பின் கொடி ஏற்றப்பட்டது. மற்ற கொடிகள் பறக்கும் இடத்தில்கூட எங்கள் கொடியை ஏற்ற தடைசெய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சிவ இளங்கோ திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார்.
- திரும்ப மற்ற கட்சிகளின் கொடி ஏற்றப்பட்டுவிட்டபின், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி மட்டும் ஏற்ற அனுமதியில்லை என்று தடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சிவ இளங்கோ திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார். அந்தக்கொடி ஏற்கனவே அந்த இடத்தில் ஏற்றப்பட்டு, அங்கே கால்வாய் அமைக்கும் பணியால் பிடுங்கப்பட்டது.
திரும்ப மற்ற கட்சிகளின் கொடி ஏற்றப்பட்டுவிட்டபின், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி மட்டும் ஏற்ற அனுமதியில்லை என்று தடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கொடிகள் இருக்கும்போது எங்கள் கொடியை மட்டும் தடுப்பதேன், நாங்கள் எங்கள் கொடியை ஏற்றியே தீருவோம் என்று கட்சியினர் போராடிய பின்பு அனுமதி அளிக்கப்பட்டு, பின் கொடி ஏற்றப்பட்டது. மற்ற கொடிகள் பறக்கும் இடத்தில்கூட எங்கள் கொடியை ஏற்ற தடை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் நெருங்கிய நட்புடன் உள்ளார்.
- டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கமல் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை:
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டெல்லியில் நடைபயணம் செல்கிறார்.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கமல்ஹாசன் நாளை இரவு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.
துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேல், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, முரளி அப்பாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ரெயில், விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றே புறப்பட்டு டெல்லி சென்று கொண்டிருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற கமல்ஹாசன் விரும்புகிறார். இதற்கான அடித்தளமாகவே அவரது டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது. டெல்லியில் ராகுலுடன் நடைபயணத்தில் ஒன்றாக செல்லும் அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் நெருங்கிய நட்புடன் உள்ளார். டெல்லியில் அவரையும் கமல் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
- நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
மதுரை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகம் அடைய செய்யவும் "பாரத் ஜோடா யாத்ரா" என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்து தற்போது டெல்லியை நோக்கி சென்று வருகிறது.
இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாளை (24-ந் தேதி) டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் இந்தியாவின் மாற்றம் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு தமிழகத்தின் மாற்றம் நம்மவர் அழைக்கிறார், கை கோர்ப்போம், வலு சேர்ப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட தலைவர் வியூகம் வகுத்து வருகிறார். இந்த நிலையில் தான் நாளை டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் எங்கள் தலைவரும் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேருமா? என்ற பரபரப்பு நிலவி வரும் நிலையில் மதுரை நிர்வாகிகளின் இந்த பரபரப்பு போஸ்டர்கள் கூட்டணி கனவுகளை மேலும் எகிற வைத்துள்ளது.