search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marudamalai"

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
    • யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவு தேடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கோவை மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் யானை ஒன்று தனது குட்டியுடன் புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த அலங்கார தாவரங்களை ருசித்து சாப்பிட்டது.

    பின்னர் வீட்டின் மெயின் கதவை உடைத்து உள்பக்கமாக தும்பிக்கையை விட்டு உணவு தேடியது.

    சத்தம் கேட்டு அந்த வீட்டில் வசித்தவர்கள் அலறி அடித்து மாடிக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். சிறிது நேரம் வாசலில் நின்ற யானைகள் உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறிச் சென்றன.

    யானைகள் வந்து சென்ற வீடியோக்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மருதமலை ஐ.ஓ.பி காலனி பகுதியில் அவ்வப்போது யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் வருவதை தடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • குட்டி யானை சென்றதால் தாய் யானை தவிப்புக்கு உள்ளாகி உள்ளது.
    • டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் காட்டு யானை ஒன்று கண்டறியப்பட்டது. அதனுடன் குட்டி யானையும் இருந்தது.

    உடல் நலம் பாதிக்க ப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவக் குழு வினர், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். நிற்க முடியாமல் அவதியடைந்த யானையை கிரேன் வாகனம் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

    தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் யானை சீராக உணவும் எடுத்து வருகிறது. யானையுடன் இருக்கும் குட்டி யானையையும் வனத்துறையினர் கண்காணித்து உணவளித்து வருகின்றனர்.

    பெண் யானையின் உடல் நிலையில் முன்னே ற்றம் ஏற்பட்டுள்ளதால் அதனை வனத்திற்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக தாய் யானையை சுற்றி, சுற்றி வந்த குட்டி யானை நேற்று திடீரென மாயமாகி விட்டது. குட்டி யானை சென்றதால் தாய் யானை தவிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    தாய் யானை அருகே குட்டி யானை இல்லாததால் அதிர்ச்சியான வனத்துறையினர் வனப்பகுதியில் டிரோன் காமிரா மூலம் கண்காணித்தனர். அப்போது வனப்பகுதிக்குள் மற்றொரு ஆண் யானையுடன் நின்றிருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து குட்டி யானையை வனத்துறையினர் டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பெண் யானைக்கு மசாலா புல், ஆலை இலை, அரச இலை, பழங்கள் கொடுத்தோம். 150 முதல் 200 கிலோ வரை உணவு எடுத்துள்ளது. குட்டி யானையை 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை அழைத்து சென்றுள்ளது.

    அந்த யானையின் நடமாட்டத்தை டிரோன் காமிரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பெண் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை வனத்திற்குள் விட திட்டமிட்டுள்ளோம்.

    யானையின் உடல்நிலையை கண்காணிக்கவும், மற்ற யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ட்ரேப் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது
    • நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது

    1996-ம் ஆண்டில் சுந்தர் சி-யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகியவற்றில்உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுராஜ். 1997-ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி-க்கு தொடர்ந்து உதவியதோடு ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார்.

    பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை வைத்து 2006-ல் தலைநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுராஜ். 'அதன் பின் 'மருதமலை' படத்தை 2007-ல் சுராஜ் இயக்கினார். இப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். 2009-ல், தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :-



     

    மருதமலை படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் ஸ்கிரிப்டை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கினார். இதில் நடித்திருந்தால் மருதமலையே அவரது முதல் போலீஸ் வேடமாக இருந்திருக்கும். ஆனால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் "சச்சின்" படம் காரணமாக விஜய் இதிலிருந்து விலகினார்.

    இதற்கிடையில் நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது. அவர் அதே நேரத்தில் "கிரீடம்"படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததாலும், வடிவேலுக்கு அப்போது அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததாலும் எங்களால் இந்த படத்தை தொடர முடியவில்லை.

    பிறகு நான், சுந்தர்.சி பணியாற்றிய "கிரி"படம் மூலம் அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது. உருவானது.அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர்  கூறினார்.

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    ×