என் மலர்
நீங்கள் தேடியது "Maternity"
- மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
- நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
மகப்பேறு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களைந்து 2 லட்சம் தாய்மார்களுக்கும் நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
மருத்துவர் தின நிகழ்ச்சி
தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நேற்று [ஜூன் 1] தமிழக மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நடந்த மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 2020 முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவில் இருந்த இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்களில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. பிறந்ததில் இருந்து 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த IMR இறப்பு விகிதத்தில் கணக்கிடப்படுவர்.
தரவுகள்
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வரும் தமிழக மருத்துவ மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி குழந்தை எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது குறைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின்படி 1000 குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.

மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை
மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 52 என்று இருந்த மகப்பேறு மரணங்கள் தற்போது 1 லட்சத்துக்கு 48 ஆக குறைத்துள்ளது. இதுவே இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97 மகப்பேறு மரணங்கள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை உள்ளது.

அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள்
ஆனால் சமீப காலங்களில் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 70 சதவீதம் அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது.
- உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்முறை.
பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு 'மசாஜ்' செய்து கொல்வது நல்லது. இது உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது.
மசாஜ் என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்த உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு செயல்முறையாகும். தினசரி வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் ஓய்வெடுக்க மசாஜ் சென்டர்களை நாடுகின்றனர். உடலின் தசைகளைத் தூண்டும் மசாஜ் எல்லா வயதினருக்கும் நல்லது.

பல வகையான மசாஜ்கள், உடலில் உள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு தமது உடல்நிலையை கவனித்துக்கொள்ள நேரம் இருப்பதில்லை. இரவும் பகலும் குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதேசமயம் தமக்கு உடல் வலி இருப்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். மேலும் பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் எடையும் கொஞ்சம் கூடுகிறது. மகப்பேறுக்கு முந்தைய உடல் வடிவத்தை மீண்டும் பெறுவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். இதற்கெல்லாம் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிரசவத்துக்குப் பின், முறைப்படி பயிற்சி பெற்ற பெண்களிடம் இளந்தாய்மார்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். இது பிரசவத்துக்குப் பிந்தைய மசாஜ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மசாஜ், அழகை மேம்படுத்துவது, உடல்வலியை போக்குவதுடன் மேலும் பல நன்மைகளை அளிக்கிறது.
அவை பற்றி பார்க்கலாம்...

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். குழந்தைக்காக அதிக நேரம் ஒதுக்குவது ஒரு புதிய தாயை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச் செய்கிறது. எனவே, சோர்வுற்ற உடலுக்கு மசாஜ் தேவை.
பிரசவத்துக்குப் பின் கால்கள், தொடைகள், கைகள், கழுத்து, முதுகு வலிகள் இருக்கும். மசாஜ் செய்வதால் இவற்றில் இருந்து விடுபடலாம். இரவில் மசாஜ் செய்வது நல்லது. தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யத் தெரிந்த பெண் அல்லது கணவரின் உதவியைப் பெற்று மசாஜ் செய்துகொள்ளுங்கள்.
மகப்பேறுக்குப் பின் அடிவயிற்றில் ஏற்படும் 'ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை' மசாஜ் செய்வதன் மூலம் குறைக்கலாம். நல்ல எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். தோல் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும்.

பிரசவத்துக்கு முந்தைய உடல் வடிவம் பெற தொப்பையைக் குறைக்க. உடல் கொழுப்பை குறைக்க மசாஜை தவிர வேறு வழியில்லை. மசாஜ் செய்வது, பால் சுரப்பிகள் நன்கு செயல்பட உதவுகிறது. மார்பகங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்கும்.
பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் தளர்ந்து விடும். பிரசவத்துக்குப் பிந்தைய மசாஜ், தசைகள் மீண்டும் தங்கள் திறனைப் பெற உதவுகிறது.
மசாஜ் செய்வது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வலியை நீக்குவது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து, இளந்தாயின் ஒட்டுமொத்த பொலிவையும் கூட்டும். எனவே, மென்மையான, முறையான மசாஜ், மிகவும் நல்லது.
- கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
- ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' வளருவது கண்டறியப்பட்டது.
- இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது.
மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண்ணின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 35 வார [9 மாத] கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவருக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' [Foetus inside foetus] வளருவது கண்டறியப்பட்டது.
அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத கரு உருவாகி உள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறுகையில், ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் கவனமாக ஸ்கேனை மறுபரிசீலனை செய்தேன்.
இது முந்தைய சோனோகிராஃபியில் தவறவிடப்பட்டது. ஏனெனில் இது மிகவும் அரிதான நிலை, இதுபோன்ற ஒரு நிலை இருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, நான் இரண்டு மருத்துவர்களிடம் விரிவான ஆலோசனைக்கு பின் அதை உறுதி செய்தேன் என்று தெரிவித்தார்.

மேலும், குழந்தை பிறந்த பின்னரே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படும். ஆனால் இப்பெண்ணுக்கு பிரசவத்துக்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.
இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் நிகழக்கூடிய அரிய வகையான மருத்துவ நிலை. இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது. அதில் இந்தியாவில் 15-20 பேரில் மட்டுமே இந்த நிலை பதிவாகியது என்று தெரிவித்தார்.
இந்த நிலைக்கான சரியான காரணம் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் இது ஒரே மாதிரியான இரட்டையர்களின் வளர்ச்சியின் போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.

இதற்கிடையே அந்த பெண் பாதுகாப்பான பிரசவத்திற்காக சத்திரப்பதி சம்பாஜி நகர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அந்தப் பெண் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
- அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி மூலம் கண்டறியப்பட்டது.
சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு 'கருவில் கரு' இருப்பது கண்டறியப்பட்டது.
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கடந்த மாதம் வழக்கமான பரிசோதனையின் ஒரு பகுதியாக சோனோகிராபிக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்குள் மற்றொரு குறைபட்ட கரு வளரும் அரிய பிறவி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி புல்தானா மகளிர் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து, அவரும் குழந்தையும் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது அமராவதி பிரதேச மருத்துவமனையில் டாக்டர் உஷா கஜ்பியேவின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கஜ்பியே, மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு [இரட்டைக்] குழந்தைகள்[கரு] இருந்ததாக கூறினார். அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன, மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசாத் அகர்வால் பேசுகையில், 'கருவில் கரு' என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்றாகும்.
இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் இதுபோன்று 200 பேருக்கு மட்டுமே இருந்துள்ளது. இந்தியாவில் 10-15 பேருக்கு மட்டுமே இந்நிலை உருவானது என்று தெரிவித்தார்.

- வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
- பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.
பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.