search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Priya"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
    • அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம்.

    * மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடைகள் அகற்றி, தடுப்புகள் அமைத்து அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியது.

    * அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    * வெயிலின் தாக்கத்தினால் தான் மயக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நானும் இருந்தேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர்.
    • முதலமைச்சர் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒருநாளும் இருந்ததில்லை.

    சென்னை:

    ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில்,

    * திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு மனமில்லை.

    * கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * திமுகவால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கிய திட்டத்தை மக்கள் அறிவர்.

    * பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பி தவிக்கிறார்.

    * மனிதநேயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒருநாளும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.

    • சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
    • புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை படித்தார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும்.

    வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 கவுன்சிலர்களுக்கும் டேப் வழங்கப்படும்.

    வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி, மதிப்பீடு சொத்துவரி பெயர் மாற்றும், திருத்தம், புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தில் வழங்கப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வர்கள் மூலம் நடப்பட்டு அவைகளை முறையாக பராமரித்து பேணி காக்கப்படும். இதன் மூலம் நகரின் மாசு கட்டுப்படுத்தப்படும்.

    பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் நாவலர் நகர்-லாக்நகர், வாலாஜா காலணியில் இருந்து பாரதி சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலத்தில் இருந்து-கைலாசபுரம் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக் கண்ணியம்மன் பாலம், பேங்க்ரோடு மயிலாப்பூர் பாலம், மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்), சாலையோர பூங்காக்களை அழகுப்படுத்தும் பணி ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னையில் ஆண்களுக்கு உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இருப்பது போல பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்ந்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க் வடிவமைக்கப்படும்.

    மேலும் மாநகராட்சி பூங்காக்களில் ஸ்பான்ச் பார்க் அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.

    255 சென்னை பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் ரூ.7.64 கோடி மதிப் பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படும்.

    சென்னை பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் 11-ம் வகுப்பில் சேரும் 50 மாணவர்களை இஸ்ரோ மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்.

    மழலையர் வகுப்புகளில் இரண்டாம் ஆண்டு (யு.கே.ஜி.) பயின்று வரும் 5,944 மாணவ-மாணவிகளுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்வதற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.


    புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 3 வட்டாரங்களில் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ரூ.60 லட்சத்தில் வாங்கப்படும்.

    மாடுகளை முறைப்படுத்த மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளில் ஓட்டுப்பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கி ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்படும். மேலும் 4750 சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    2024-2025-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.4464.60 கோடியாகவும் வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.252.52 கோடியாக உள்ளது.

    பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெறுகிறது.

    • 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
    • சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    * சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    * சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும்.

    * சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    • திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்.
    • வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    'மிச்சாங்' புயலால் மழை வெள்ளத்தில் சென்னையே நிலைகுலைந்தது. நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டன. இந்தநிலையில் நடிகர் விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

    அதில், 'அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள். 2015-ம் ஆண்டை விட இது மோசமாக இருக்கிறது. மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தயவு செய்து வெளியில் வந்து பிரச்சினைகளை சரி செய்து கொடுங்கள். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்துவிடாதீர்கள்', என்று விஷால் காட்டமாக பேசியிருந்தார். இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் டுவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயற்சிக்காமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.

    • அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
    • அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.

    சென்னை:

    யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    * 2,700 கி.மீ. அளவுக்கு புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

    * சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.

    * மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    * அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.

    * தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

    * அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

    * சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேயர் ஆர்.பிரியா சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    சென்னை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர், இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா பரிசுகளை வழங்கினார். இதில், ஆண்கள் பிரிவில் முதலிடம் சச்சின் பிரிய தர்ஷன், இடண்டாமிடம் தட்சிணாமூர்த்தி, மூன்றா மிடம் ஜோஷ்வா, பெண்கள் பிரிவில் முதலிடம் செல்வி லாவன்யா, இரண்டாமிடம் புனிதா, மூன்றா மிடம் செல்வி ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    மேலும், மாணவர்களில் கோபிநாத், கிஷோர் குமார், ஹரிஷ், ஹரிபாலன், மாணவிகளில் அபிநயா, பாபி ஹோலா, நிஷா ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த ரெட்ரன் மாரத்தானில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய அடிப்படை அறிவு அதிகப்படுத்துதல், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று தொடர்பான சேவைகளை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவையாகும். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

    அப்போது மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது தொடர்பாக நன்றி தெரிவிக்கக்கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்த் எழுந்து கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க. மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் எம்.எஸ். திரவியம், ராஜசேகரன் உள்ளிட்டோர் பலர் எழுந்து எதிர்த்து குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தார்.

    கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் (24-வது வார்டு) சேட்டு பேசும்போது, எனது வார்டில் தனியார் நிறுவனம் ஒன்று கியாஸ் பைப்லைன் ரோட்டில் பதித்து செல்கிறது. அது என்ன திட்டம், யார் போடுகிறார்கள் என்ற எந்த தகவலும் எனக்கு தெரியாது.

    ஆனால் கியாஸ் பைப் வெடித்து அசம்பாவித சம்பவம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது எங்களை வந்து கேட்பார்கள். வார்டுகளில் எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அவரது கருத்திற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து ஒருமித்த குரலாக எழுப்பினர். வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை என்றும் பிரச்சனை வந்தால் மட்டும் எங்களிடம் கூறுகிறார்கள் என்று தி.மு.க. கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல 5 நிமிடங்கள் ஆகும். எந்த பணி நடந்தாலும் தகவல் தெரிவியுங்கள் என்றார்.

    துணை மேயர் மகேஷ் குமார் பேசும்போது, சாலைப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சென்னை நகரம் 476 சதுர கி.மீ. தூரம் வளர்ந்துள்ளது. அதனால் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் அதிகாரிகளுக்கு என்ன கஷ்டம், ஆய்வு பணிகள், வளர்ச்சி பணிகள், எது நடந்தாலும் கட்டாயம் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு பிரபல கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம்.பால முரளி கிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம், 130-வது வார்டில் உள்ள குமரன் நகர் பிரதான சாலைக்கு "மாண்டோவின் ஸ்ரீநிவாஸ் பிரதான சாலை" என பெயர் மாற்றம், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை, கொடுங்கையூர், பெருங்குடியில் பொது, தனியார் கூட்டாண்மை முறையில் பயோ-சி.எஸ்.ஜி. ஆலை உரம் தயாரிக்கும் அழகு பொருள் மீட்பு வசதி மற்றும் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் வசதி ஆகியவற்றிற்கு திட்ட அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 4-வது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
    • நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் பிரியா வழங்கினார்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் மக்களைத்தேடி மேயர் என்ற திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.

    இதுவரை ராயபுரம், திரு.வி.க.நகர், அடையாறு மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 889 மனுக்கள் பெறப்பட்டு அதில் 720 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 4-வது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது மேயர் பிரியா மேடையை விட்டு கீழே இறங்கி வந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் பிரியா வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம் கே.பி.சங்கர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம்.
    • குப்பை தொட்டி இல்லாத நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம்.

    சென்னை:

    சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஒரு வார பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்.

    மேயர் பிரியா இன்று இரவு ஸ்பெயின் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து பிரான்சுக்கு சென்று பின்னர் இத்தாலிக்கு செல்கிறார். மேயருடன் துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள். ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 24-ந் தேதி அவர்கள் சென்னை திரும்புகிறார்கள்.

    ஸ்பெயின், பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளில் கடைபிடித்து வரும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக மேயர் பிரியா அங்கு செல்கிறார்.

    சுற்றுச்சூழல் தீர்வுக்கு உலகத்தின் முன்னணியில் உள்ள உலகளாவிய நிறுவனம் அர்பேசர் ஆகும். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்பெயினில் உள்ளது. நாங்கள் முதலில் அதை பார்வையிடுவோம்.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம். அதை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 2-வதாக குப்பை தொட்டி இல்லாத நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம். எனவே ஐரோப்பிய நாடுகள் அதை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

    சென்னை நகரில் கழிவு மேலாண்மை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. எனவே குப்பை சேகரிப்பு மற்றும் செயலாக்க சேவைகளை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.

    • எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும்.
    • தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

    அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை இணையதளம், இ-சேவை மையம், பாரத் பில் பேமன்ட் முறை, இணைய வங்கி, கியூ-ஆர் கோர்டு, காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை தானியங்கி எந்திரம் மூலம் செலுத்தும் நடைமுறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தானியங்கி எந்திரத்தின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.

    பெடரல் வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இதை நிறுவியுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும். இதற்கான ரசீதும் இந்த எந்திரத்தில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் விசு மகாஜன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை உயர் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மண்டலங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை மேயர் பிரியா கூறியதாவது:-

    கொரோனா தொற்று அதிகரிப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதன்படி சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.

    நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான கொரோனா நடைமுறைகளின் படி தொற்று பாதித்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை தொற்று பாதித்தவர்கள் யாரும் மோசமான நிலையை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் அளவுக்கு இல்லை. அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்தும் வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் ஒட்டப்படவில்லை. பொதுமக்களை விழிப்புடனும் தகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×