என் மலர்
நீங்கள் தேடியது "mechanic"
- கம்ப்யூட்டர் என்ஜினீயரின் காரை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
- திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது.
மதுரை
மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த லோகநாதன் (33) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. லோகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் கூறுகையில், நான் பெங்களூருவில் கம்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தேன். மதுபான கடைக்குச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினேன். அதன் பிறகு காரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு, அங்கு படுத்து தூங்கினேன். அங்கு வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு காரை கடத்திச் சென்று விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.
திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது. போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் தேடிப் பார்த்தனர். அந்த கார், ஒத்தக்கடை நோக்கி செல்வது தெரியவந்தது. போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று காரை மடக்கிப்பிடித்தனர்.
காரில் இருந்த வாலிபரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று விசாரித்தனர். அவர் ஒத்தக்கடையை சேர்ந்த ரமேஷ்(30), கார் மெக்கானிக் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
கரூர்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி பீனாமோள் (38).இவர்களுக்கு சகாய சப்னாமேரி (14), ஜெசிதா மேரி(9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மெக்கானிக்கான அந்தோணிராஜ் தற்போது கரூர் பெரிய வடுகப்பட்டியில் இரு சக்கரம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதற்காக அங்குள்ள வாடகை வீட்டில் மனைவி, மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அவர், அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.45ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி கட்டி வந்தார். இதனிடையே கடன் கொடுத்த நபர், தனக்கு கூடுதலாக வட்டி தர வேண்டும் என்று அந்தோணிராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தோணிராஜ் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை எடுத்து சென்றதோடு, அசலுடன் கூடுதல் வட்டி தர வேண்டும் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த அந்தோணிராஜ் இன்று காலை தனது மனைவி பீனாமோள், மகள்கள் சகாயசப்னா மேரி, ஜெசிதா மேரி ஆகியோருடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் மண்எண்ணை கேனை கொண்டு வந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடைபெறுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இருப்பினும் போலீஸ் கண்ணில் படாமல் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அங்கு சென்றதும் திடீரென அந்தோணிராஜ் , தனது மனைவி, மகள்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்களிடம் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தும் விவகாரத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு கலெக்டர் அலுவலகங்களில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சிலர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அருகே உள்ள டி.வீரப்பள்ளியை சேர்ந்தவர் சரவணன், ஆசிரியர். இவரது மகன் சத்தியமூர்த்தி, ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1.4.2016 அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு சத்தியமூர்த்தி மொபட்டில் புறப்பட்டார். அப்போது குடியானகுப்பத்தை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் முருகன் மற்றும் ஒரு சிறுவன், சத்தியமூர்த்தியின் மொபட்டை மறித்து நிறுத்தினர். பின்னர் சத்தியமூர்த்தியிடம் மொபட்டை பறிக்க முயன்றனர்.
ஆனால் சத்தியமூர்த்தி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் சத்தியமூர்த்தியை அடித்து உதைத்து, கொலை செய்து அருகில் உள்ள ஏரியில் பிணத்தை தூக்கி வீசினார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரா.ரமேஷ் ஆஜரானார். நேற்று நீதிபதி டி.இந்திராணி வழக்கை விசாரித்து, முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.