என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekar babu"

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் தேங்கிய மழைநீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
    • திரு.வி.க.நகர் மண்டலத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றி ‘பிளீச்சிங்’ பவுடர் தெளிக்கவும் உத்தரவிட்டு உள்ளோம்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ந்தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன்காரணமாக, கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

    வட சென்னையில் திருவொற்றியூர், திரு.வி.க. நகர் மண்டலம் பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தேங்கிய மழைநீரும் இப்போது வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகளுடன் மழை நீர் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் தேங்கிய மழைநீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.

    திரு.வி.க.நகர் மண்டலத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றி 'பிளீச்சிங்' பவுடர் தெளிக்கவும் உத்தரவிட்டு உள்ளோம். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும்.

    கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய பகுதிகளில் அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார்.

    அவர் திட்டமிட்டு மேற்கொண்ட பணிகள் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்காமல் வடிந்துள்ளது.

    மேற்கு மாம்பலம், ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனி, ஜி.என்.செட்டி ரோடு, புரசைவாக்கம் டானா தெரு, 70 அடி ரோடு பகுதிகளில் கடந்த ஆண்டு மழையின் போது 10 நாட்களாக தண்ணீர் தேங்கியது.

    ஆனால் இப்போது இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. முழுவதும் வடிந்துவிட்டது. பெரியமேடு மசூதி பகுதி, பிரகாசம் சாலை பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்கவில்லை. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் தண்ணீர் தேங்காத அளவுக்கு நிரந்தர திட்டம் தீட்டி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை தான் இதற்கு காரணம்.

    தற்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூட அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காமல் இருக்க திட்டம் தீட்டி இந்த அரசு செயல்படுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் கூட இந்த ஆண்டு ஒருசொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை.

    ஆனால் மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல் அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த 4 நாட்களில் எங்காவது வந்து சுற்றிப் பார்த்தாரா? நிவாரண பணிகளில் ஈடுபட்டாரா? எதுவும் கிடையாது.

    மத்திய அரசுக்கு பயந்து பயந்துதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினாரே தவிர மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை.

    எனவே அவர் குறை கூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள பணிகள் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை தண்ணீர் 95 சதவீதம் வடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கடந்த நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுகின்ற பள்ளிகள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திட சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளையின் பள்ளிக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி மாணவ, மாணவியருக்கான புதிதாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டதோடு, தற்போதைய பள்ளி கட்டிடங்களில் செய்யப்பட வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுகின்ற பள்ளிகள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திட சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளையின் பள்ளிக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 1998-ம் ஆண்டு அந்த குத்தகை காலம் முடிந்த பிறகும் வாடகைத் தொகை நிலுவையில் இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி 2021- ம் ஆண்டு இங்கு நடைபெற்று வந்த பள்ளியை அதன் அறக்கட்டளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தது.

    தற்போது 1180 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த ஆண்டில் கூடுதலாக 300 மாணவர்கள் புதிதாக சேர்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்பள்ளியின் மாணவர்களுக்காக ரூபாய் 13 கோடி செலவில் 42 அறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    அதில் 32 வகுப்பறை கட்டிடங்கள், 4 ஆய்வுக்கூடங்கள், ஒரு நூலகம், 4 ஆசிரியர்கள் அறைகள், ஒரு கணினி அறை அமைக்கப்படுகிறது.

    தற்போது இந்த பள்ளியில் 40 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் கூடுதலாக பகுதி நேர ஆசிரியர்களாக 7 ஆசிரியர்களையும், 17 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் நியமித்திருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 64 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

    இந்து சமய அறநிலையத்துறை இந்த பள்ளியை ஏற்றுக்கொண்ட பிறகு ரூ.1.47 கோடி செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதியானது வறுமைக் கோட்டிற்கு கீழும், நடுத்தர மக்களும் அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் கல்விக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளதோடு, இரண்டு செட்டு சீருடைகள், புத்தகப்பை வழங்கி இருக்கின்றோம்.

    தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற 27 பள்ளிகளில் பயின்று வரும் 13 ஆயிரத்து 863 மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த 100 சிறிய கோவில்கள் சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலைய துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

    இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் புனரமைக்கப்பட இருக்கும் கரு உருமாரி தெப்பத்தையும் ஆய்வு செய்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மலர் தூவி வழிபாடு நடத்தினர்

    நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருபரன் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆட்சியில் திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட தமிழகத்தில் உள்ள 11 திருமேனி பாதுகாப்பு மையங்களிலும் காவலர்கள் நியமிப்பதில் இருந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் திருமேனி பாதுகாப்பு மையங்கள் செயல்படும்.

    தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி அளவிலான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது.

    நெல்லையப்பர் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்த அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு டி.வி.எஸ். நிறுவனத்தின் உபயத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும்.

    வரும் ஆண்டில் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்களில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுக்கு மேலான கோவில்கள் திருப்பணிக்கு ரூ.100 கோடி தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்து ரூ.60 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.40 கோடிக்கான அரசாணை வெளியிடப்பட்டு மானிய கோரிக்கைக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த 100 சிறிய கோவில்கள் சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உள்ள 200 கோவிலில் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவில் கோவில்கள் குடமுழுக்கு, திருப்பணிகள் மற்றும் ஓடாத தேர்களை ஓட வைப்பதற்கான தேர் திருப்பணிகள் ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    முழு சுதந்திரத்துடன் அறநிலையத்துறை செயல்படுவதற்கான சான்றாக இந்த பணிகள் அமைந்துள்ளது.

    அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள வாகனங்கள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறநிலை துறைக்கு சொந்தமான கல்லூரிகள் தற்காலிகமாக 4 இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கல்லூரிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவு பெற்றபின் செயல்பாட்டுக்கு வரும்.

    நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த மானிய கோரிக்கையில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள் என்றாலும் மக்களாட்சி வந்த பிறகு மக்களாட்சி செய்கின்ற அரசுக்குதான் கோயிலை பராமரிக்கும் உரிமைகள்.
    • சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசும், சென்னை மாநகராட்சியும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டல அலுவலத்தில் இன்று சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, திரு.வி.க. மண்டலத்தில் நீர்நிலைகளின் அருகிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கின்ற மக்களுக்கு விலையில்லா கொசுவலைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதலில் வடபழனி பரத்வாஜ் சுவாமி கோயிலில் மாதிரி பாதுகாப்பறை ஒன்றை ஏற்படுத்தினோம். அந்த மாதிரி பாதுகாப்பறையானது மிகவும் பயனுள்ளதாகவும், உறுதித்தன்மை உள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 1200 பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது.

    இந்து அமைப்புகளிடம் இருக்கின்ற பொழுது கோயில்கள் எவ்வளவு பராமரிக்கப்படுமோ அதைவிட கூடுதலாக அக்கறை கொண்டு இந்த அரசு கோவில்கள் பராமரிப்பதில், பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் இந்திய துணைக் கண்டத்திலேயே தமிழகத்தில்தான் முதல்-அமைச்சர் தலைமையிலே செயல்படுகின்ற இந்த அரசின் சிறப்பான செயல்பாட்டினால் இருந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் கூறியது போல் இந்து அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் எந்த இந்து அமைப்புடன் எந்த திருக்கோயிலை டெண்டர் கோரியா ஒப்படைக்க முடியும்.

    ஆகவே அது சாத்தியமில்லாதது. மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள் என்றாலும் மக்களாட்சி வந்த பிறகு மக்களாட்சி செய்கின்ற அரசுக்குதான் கோயிலை பராமரிக்கும் உரிமைகள். அதில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். குறைகள் எது இருந்தாலும் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். அதனை நிறைவு செய்கின்ற பணிகளை மேற்கொள்ளச் சொல்லி முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.

    முதல்-அமைச்சர் தாழ்வான பகுதிகளில் தற்போது எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அவற்றை எல்லாம் கணக்கெடுத்து, அடுத்த பருவமழைக்குள் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத சூழலை உருவாக்குவதற்கு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

    போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றுகின்ற பணியாகட்டும், சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசும், சென்னை மாநகராட்சியும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது.

    எந்த பாதிப்பு வந்தாலும் சமாளிப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் இந்த அரசு தயாராக செய்து கொண்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 48 கோவில்களில் முழு அளவில் அன்னைத்தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷன், கரப்சன், கலெக்‌ஷன் என்ற முறையில் செயல்பட்டதால் தான் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில் கால்வாய் ஓரம் சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் வரவேற்று பேசினார். மேயர் பிரியா முன்னிலை வைத்தார். கொசுவலைகளை வழங்கிய பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா காலத்திற்கு பின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் திருமணம் நடத்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஏதாவது கோவில்களில் அனுமதி வழங்கவில்லை என்றாலும் குறைந்த அளவாவது திருமணங்கள் நடத்த இணை ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பணிகள் கும்பாபிஷேகம் போன்ற பணிகளால் ஒரு சில கோவில்களில் திருமணம் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிறிய அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த கோவிலை எடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல இன்னார் இனியவர் என பார்ப்பது இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்று தான் பார்க்கிறோம்.

    யாரும் சட்டத்தை மீறி செயல்பட முடியாது. அந்த கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கைகள் முறையாக கணக்கு வைக்கப்படுகிறதா மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நகைகள் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என பார்க்கப்படும். சட்டவிதிகளை மீறி செயல்பட்டால் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயங்காது.

    தமிழகத்தில் 48 கோவில்களில் முழு அளவில் அன்னைத்தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள கோவில்களிலும் தமிழில் அர்ச்சனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மழையின்போது என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷன், கரப்சன், கலெக்‌ஷன் என்ற முறையில் செயல்பட்டதால் தான் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் அடுத்த பருவமழைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம்.ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், மாவட்ட செயலாளர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு, கணேசன், மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு, பகுதி செயலாளர் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.விற்கு என்று ஒரு பெருமை உண்டு.
    • பாராளுமன்றத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றியைப் பார்த்து, அடுத்து சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கே யாரும் தயாரில்லை என்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசியதாவது:-

    திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான், ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்டு, ஜனநாயக ரீதியாக உட்கட்சித் தேர்தல் ஒன்று நடைபெறுகிறது என்றால், அது தி.மு.க.வில் மட்டும் நடந்தேறுகிறது.

    ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுகின்ற பழக்கத்தோடு நின்று விடாமல், இன்று புதிதாகப் பதவிக்கு வந்தவர்களை, ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்றார்.

    கழகத் தொண்டனுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், கழக உறுப்பினர் யாராவது தேவை என்று வந்தாலும், அதை நிறைவு செய்ய வேண்டும்.

    தி.மு.க.வில் மட்டும் தான், அறிக்கை விடுவதும், ஆணைகள் பிறப்பிப்பதும், அதோடு நின்றுவிடாமல், களத்திற்கு வந்து நம்மோடு நின்று போராடக்கூடிய ஒரு தலைவர்தான் தி.மு.க. தலைவர் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

    தி.மு.க.விற்கு என்று ஒரு பெருமை உண்டு. பல இயக்கங்களில் போனவுடன், ஒரு மாதம், இரண்டு மாதக் காலங்களில் பொறுப்புகளை வழங்கி விடுவார்கள். ஆனால், தி.மு.க.வில் மட்டும் தான், உறுப்பினராக இருப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால், இந்த இயக்கம் என்பது ஓர் ஆலமரத்தின் வேரைப் போன்றவர்கள்; இந்த இயக்கத்தில் இருக்கின்ற நிர்வாகிகளான நாமெல்லாம் அதனுடைய விழுதுகள் போன்றவர்கள். இந்த இயக்கத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. இந்த இயக்கத்திற்கு என்று ஒரு தனி சரித்திரம் உண்டு. இந்த இயக்கத்திற்கென்று இருக்கின்ற சரித்திரங்களையும், பெருமைகளையும் தூக்கி நிறுத்துகின்ற தலைவராக, இந்த இயக்கத்தினுடைய இரு வண்ணக்கொடியை, இந்த இயக்கத்தினுடைய சின்னமான உதயசூரியனை தகத்தகாயமாக ஒளிர வைக்கின்ற தலைவராக, நம்முடைய தலைவர் இருக்கின்ற வரையில், தமிழகத்தில் எத்தனை சங்கிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும், எத்தனைக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும், இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ முடியாது.

    திராவிட மண்ணிலே திராவிடம்தான் ஆள வேண்டும் என்றால், இயக்கத்தினுடைய இரு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும் என்றால், அதிலும் துடிப்புமிக்க இளைஞர்கள் இயக்கத்திற்குத் தேவை. அந்த இளைஞர்களை வரவேற்கின்ற ஒரு கூட்டமாக இந்தக் கூட்டத்தை நான் முன்னிலைப்படுத்தி, இந்தக் கூட்டத்திலே வருங்காலத்தில் இளைஞர்களை அதிகமாகக் கொண்டு வந்து சேர்ப்போம் என்ற உறுதியேற்கின்ற கூட்டமாக இந்தக் கூட்டத்தை எடுத்துக் கொண்டு, தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற 15-வது உட்கட்சித் தேர்தல் நிர்வாகிகளுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களுடைய பணி தான், உங்களுடைய அயராத பணிதான், மத்திய சென்னையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர், அவ்வப்பொழுது டெல்லிக்குச் செல்லுகின்ற நிலையை உருவாக்குகின்ற வல்லமைப் பெற்ற நிர்வாகிகள்தான் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டி. எந்த சக்தியாலும், தமிழகத்தில் தி.மு.க. இருக்கின்ற வரையில், வேறு யாருக்கும் இங்கே இடமில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்றால், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றியைப் பார்த்து, அடுத்து சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கே யாரும் தயாரில்லை என்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.

    • மீட்கப்பட்ட நிலங்களுடைய புகைப்படங்கள் மீட்கப்பட்ட நிலங்களின் அளவு அதனுடைய மதிப்பு அனைத்தையும் புள்ளி விவரமாக வெளியிட்டு இருக்கின்றோம்.
    • திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவின்போதும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போதும், வி.ஐ.பி. தரிசனத்தை நிறுத்தி விட்டோம்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் மண்டல வாரியாக இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்

    கூட்டத்தின் முடிவில் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    பா.ஜ.க.வை சேர்ந்த வி.பி.துரைசாமி நிலங்கள் மீட்பு விஷயத்தில் உரிய ஆதாரங்களை காட்டுங்கள் என தெரிவித்துள்ளாரே?

    ப: தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கூறி எங்களுடைய காலத்தை நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    இருந்தாலும் அவர் சொல்லிய குற்றச்சாட்டுக்காக ஒரே ஒரு விளக்கம் 06.04.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் மீட்கப்பட்ட நிலங்கள் குறித்து முதல் புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றோம். அதில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு நிலங்கள் மீட்கப்பட்டன, மீட்கப்பட்ட நிலங்களுடைய புகைப்படங்கள் மீட்கப்பட்ட நிலங்களின் அளவு அதனுடைய மதிப்பு அனைத்தையும் புள்ளி விவரமாக வெளியிட்டு இருக்கின்றோம்.

    அடுத்த புத்தகத்தையும் விரைந்து முடித்து வெளியிட உள்ளோம். தற்போது வரையில் 3,739 கோடியே 42 லட்சம் சொத்து மதிப்புடைய நிலங்களை மீட்டு இருக்கின்றோம். அவருக்கு இந்த புத்தகத்தை இன்றைக்கு தபாலிலோ அல்லது எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாகவோ அவருடைய வீட்டுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

    இந்து முன்னணியின் மாநில தலைவர் ஆதீன சொத்துக்கள் அறிவாலய சொத்துக்கள் அல்ல என்று கூறியுள்ளது குறித்து?

    ப: நாங்கள் எங்காவது சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளோமா? எங்கெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல முடியுமோ அங்குதான் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க செல்கிறோமே தவிர, எங்களுக்கு சட்ட உரிமை இல்லாத இடத்திற்கு நாங்கள் எங்குமே செல்வதில்லை. அவர் அப்படி சட்டத்தை மீறி நாங்கள் எங்காவது செல்வதாக குறிப்பிட்டால் அதற்கு உகந்த பதிலை அளிக்கின்றோம்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது?

    ப: இதுவரையில் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் கோபுரம் உட்பட நான்கு கோபுரங்களிலும் கோபுரத்தை சுத்தம் செய்திருக்கின்றோம். 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

    சில கோயில்களில் முக்கிய பிரமுகர்கள் கருவறை அருகில் சென்று தரிசனம் செய்கின்ற முறை எப்போது கட்டுப்படுத்தப்படும்.

    ப: வி.ஐ.பி. தரிசனம் என்பது ஏதோ இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆரம்பித்தவை அல்ல. அதை படிப்படியாக குறைக்கின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

    நாளடைவில் படிப்படியாக எங்கெல்லாம் சாத்திய கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் வி.ஐ.பி. தரிசனத்தை நிறுத்திட இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொள்ளும்.

    திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவின்போதும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போதும், வி.ஐ.பி. தரிசனத்தை நிறுத்தி விட்டோம். மேலும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின்போது 600 நபர்கள் பாந்து என்ற முறையில் 10 நாட்கள் திருக்கோயில் உள்ளே தங்கும் முறையை முழுமையாக ஒழித்து உத்தரவிட்ட அரசு இந்த அரசு. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையிலும், நீதிமன்றமும் இந்த ஆட்சி எடுத்த நடவடிக்கை சரியான நடவடிக்கை, திருப்பதி கோயிலில் இப்படி போய் இரவு யாராவது தங்க முடியுமா என்று ஒரு கேள்வியை கேட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்கள். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது என தமிழகம் மாத்திரமல்ல மற்ற அண்டை மாநிலங்களும் பாராட்டினர். இந்த சிறப்பு கட்டண தரிசனத்தை, வி.ஐ.பி. தரிசனத்தை படிப்படியாக குறைப்பதற்கு முழுமையாக ஒழிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

    பா.ஜ.க. பிசாசு வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று?

    ப: பா.ஜ.க. ஒரு சைத்தான். இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கெல்லாம் வேலையில்லை. முதல்-அமைச்சர் எப்படிப்பட்ட பேய்களையும், விரட்டக்கூடிய சக்தி படைத்தவர். ஆதலால் பா.ஜ.க. எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக காலூன்ற முடியாது. முதல்-அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "விழித்துக்கொண்ட தமிழகத்தை இனி எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது" என்று சொல்லி இருக்கின்றார். ஆகவே, தமிழக மக்கள் விழிப்போடு இருக்கின்றார்கள், பா.ஜ.க. போன்ற கட்சிகள் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு இடமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சரின் தலைமையிலான அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்.
    • அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பணியாளர்களைக்கூட நிறுத்தவில்லை.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 57-க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13,293 சதுர அடி பரப்பளவு கொண்ட நாடக கொட்டாய் இடத்தினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பிறகு அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தச் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் தெரிவித்து, அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சட்டப்படி இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.

    இங்கு அமைந்துள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் 487 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு 90 சதவீதம் அதிகமாக சிறுபான்மையின மாணவர்களே பயில்கின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருகிறது. தற்சமயம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் தலைமையிலான அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்.

    மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.

    அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பணியாளர்களைக்கூட நிறுத்தவில்லை.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் நமது மாநிலத்தில் உள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • முதலமைச்சர் இந்த ஆண்டு 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டத்தையும், 10 கோவில்களில் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.
    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நாட்களில் அதிக பக்தர்கள் வருகின்றார்கள் என்பதால் தினந்தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெரம்பூர் செம்பியம் லட்சுமி அம்மன் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான ராஜகோபுரம் மண்டப சிற்பங்களை சீரமைத்து வண்ணப்பூச்சு பூசுதல், கருங்கல் தளம் அமைத்தல், அம்மன் சன்னதி மகா மண்டபம், உப சன்னதிகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளையும்,

    வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில் ரூ.88 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் புனரமைப்பு பணிகளையும், கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் மகா மண்டபம், உற்சவர் மற்றும் நவக்கிரக மண்டபங்கள் கட்டுதல் போன்ற பணிகளையும், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் ரூ.10 லட்சத்தில் தேர் நிறுத்தும் மண்டப கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசியதாவது:-

    இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1,500 கோவில்களை புனரமைக்கின்ற பணியினை மேற்கொண்டு வருகின்றோம். அன்னதான திட்டத்தை பொறுத்தவரை அந்தந்த கோவிலின் நிதி ஆதாரத்தை பொறுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் இந்த ஆண்டு 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டத்தையும், 10 கோவில்களில் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நபர்கள் வீதம் 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நாட்களில் அதிக பக்தர்கள் வருகின்றார்கள் என்பதால் தினந்தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    பெரியபாளையம் பவானியம்மன் கோவிலின் நகைகள் சுத்த தங்கமாக மாற்றி 98 கிலோ தங்க முதலீட்டு பத்திரத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வட்டி தொகையாகவும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் 28 கிலோ தங்க நகைகள் முதலீடு செய்யப்பட்டு ஆண்டொன்றுக்கு 38 லட்சம் வட்டித் தொகையாகவும் வருகின்றன. அந்தத் தொகை அந்தந்த கோவிலின் மேம்பாட்டிற்கு செலவிடப்படும்.

    அதேபோல திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களிலும் பயன்படுத்த இயலாத தங்க நகைகள் நீதிபதி முன்னிலையில் முழுமையாக அளவிடப்பட்டு, சுத்தத் தங்கமாக மாற்றிட தற்போது மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் கிலோ தங்கமாவது கோவில்கள் பெயரிலே வைப்பு நிதியாக வைக்கப்படும் சூழல் ஏற்படும்.

    அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோவில்களை மேம்படுத்த செலவிடப்படும். எத்தனை இடையூறுகள், தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிகின்ற ஆற்றலும் திறமையும் இந்த ஆட்சிக்கு உண்டு என்பதற்கு இந்த பணிகளே எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீண்டாக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோவில் வசம் மீட்கப்பட்டுள்ளது
    • கோவில் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோவில் வசம் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 180.98 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வருவாய் மற்றும் போலீசாரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் வி.சுரேஷ் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்.

    இந்த நிகழ்ச்சியின்போது குஜிலியம்பாறை வட்டாட்சியர் கே.ரமேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முன்னணி கால்பந்து குழுக்களும், சென்னையை சேர்ந்த 6 கால்பந்து குழுக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் உட்பட 18 கால்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கின்றன.
    • போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரு உள்விளையாட்டு அரங்கில் மகளிர் கால்பந்தாட்ட போட்டி முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணியின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 15 வகையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

    அதில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம், குருதிக்கொடை வழங்குதல், கருணை இல்லங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஒரு மாத காலத்திற்கான உணவுப் பொருட்கள் வழங்குதல், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இருக்கைகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற 14 வகையான நிகழ்ச்சிகள் இன்று வரை நடத்தப்பட்டன.

    15-வது நிகழ்ச்சியாக மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவின் நினைவாக, நாளை மற்றும் 4-ந்தேதிகளில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியினை நாளை (சனிக்கிழமை) காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். 4-ந்தேதி மாலை நிறைவு விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெற்றிப் பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் ரொக்கம், இரண்டாம் பரிசாக ரூ. ஒரு லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரத்துடன் பரிசுக் கோப்பைகளை வழங்க உள்ளார்.

    இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முன்னணி கால்பந்து குழுக்களும், சென்னையை சேர்ந்த 6 கால்பந்து குழுக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் உட்பட 18 கால்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கின்றன. போட்டிகளில் கலந்து கொள்ளும் 300 வீராங்கனைகளுக்கும் போட்டிகளில் பயன்படுத்தும் வகையிலான இளைஞர் அணி லோகோ மற்றும் நினைவில் வாழும் விளையாட்டு வீராங்கனை பிரியாவின் உருவம் பதித்த ஜெர்ஸி ஆடைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.மகேஷ்குமார் முன்னிலையில் பகுதி கழகச் செயலாளர்கள் வி.சுதாகர், சொ.வேலு, வட்டக் கழக செயலாளர் ஆர்.பாபு, பகுதிக் கழக துணைச் செயலாளரும் மாநில கால்பந்தாட்ட வீரருமான டி.வி.வேலு மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இறுதிப்போட்டியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபாடு மற்றும் உற்சாகம் அடைகின்ற வகையில் நடத்தினோம். அதேபோல இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மறைந்து மறையாமல் இருக்கின்ற கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவின் நினைவாக, அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வகையில் ஒரு உந்து சக்தியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் அமையும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்ம நாபபுரம் பகுதியில் அமைந்திருந்த மைலர் ரப்பர் தொழிற்கூடமும் கடந்த ஓராண்டிற்கு முன்பு மூடப்பட்டது.
    • தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு அளித்து ரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருவட்டாறு பகுதியில் இயங்கிய மணலோடை ரப்பர் தொழிற்கூடம் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நிர்வாகச் சிக்கலாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. பத்மநாபபுரம் பகுதியில் அமைந்திருந்த மைலர் ரப்பர் தொழிற்கூடமும் கடந்த ஓராண்டிற்கு முன்பு மூடப்பட்டது. தற்போது கீரிப்பாறை ரப்பர் தொழிற்கூடமும் மூடப்படலாமென்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

    ரப்பர் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதன்படி இதுவரையிலும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது கீரிப்பாறை ரப்பர் தொழிற்கூடம் முன்பு அரசு ரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் ரூ.40 ஊதிய உயர்வு கோரி கடந்த 07-11-2022 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு அளித்து ரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×