என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai"

    • நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான தடகளம், இறகு பந்து‌, டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது
    • தடகளத்தில் மாணவிகள் பிரிவில் அபிநயா 3 தங்கமும், 1 வெண்கலமும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    நெல்லை:

    நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான தடகளம், இறகு பந்து‌, டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றனர்.

    மாநில போட்டிக்கு தகுதி

    தடகளத்தில் மாணவிகள் பிரிவில் அபிநயா 3 தங்கமும், 1 வெண்கலமும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். ரெனிஷா சரின், ரம்யா செல்வி, ஷ்ரயா‌பாலா தலா 1 வெண்கலம் வென்றனர்.

    மாணவர் பிரிவில் ‌சுடலை 2 வெள்ளியும், 1 வெண்கலமும், ஸ்ரீ காந்த், சஞ்சய், தனுஷ் ஜெட்சன் தலா 1 வெண்கலமும் வென்றனர்.

    இறகு பந்து போட்டியில் சீனியர் ஒற்றையர் பிரிவில் மாணவர் அர்ஜுன் 2-ம் இடமும், இரட்டையர் பிரிவில் அர்ஜுன் மற்றும் ராமசுப்பிரமணியன் 2-ம் இடம் வென்றனர்.

    டென்னிஸ் சூப்பர் சீரியர் மாணவர் ஒற்றையர் பிரிவில் ஆதர்ஷ் முதல் இடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    நீச்சல் போட்டியில் ஜுனியர் பிரிவில் மாணவர் சந்தோஷ் 1 தங்கமும், 3 வெள்ளியும், நித்தீஸ் 3 தங்கமும், 2 வெள்ளியும் , ஜென்சன் 5 வெள்ளியும், செல்வ ராகுல் 2 வெள்ளியும் , சீனியர் பிரிவில் கவின் சாய் 1 தங்கமும், 4 வெள்ளியும், குருலால் 2 தங்கமும், 2 வெள்ளியும், 1 வெண்கலமும், கென்னத் லியோனள் 1 தங்கமும், 3 வெள்ளியும், 1 வெண்கலமும், ஆகாஷ் கிருஷ்ணன் 2 தங்கமும், 3 வெள்ளியும், சூப்பர் சீனியர் பிரிவில் எபி ரிச்சர்ட் 2 தங்கமும், 3 வெள்ளியும், பார்வதி கிருஷ்ணன் லோகேஷ் 1 தங்கமும், 4 வெள்ளியும், ராஜபாஸ்கரன் 2 தங்கமும், 3 வெள்ளியும் பெற்றனர்.நவீன் முத்துசாமி 2 வெள்ளியும் வென்றனர்.

    மாணவிகள் ஜுனியர் பிரிவில் கண்மணி 2 தங்கமும், 1 வெள்ளியும், சீனியர் பிரிவில் பிரியதர்ஷினி, ரெனிஷா சரின் தலா 5 தங்கமும், உஷா 5 வெள்ளியும், மிர்துலா ஸ்ரீ 3 தங்கமும், 2 வெள்ளியும் வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர்.

    நெல்லை:

    திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீ சார் மடக்கி பிடித்து வருகின்றனர்.

    இன்றும் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பேட்டை காட்சி மண்டபம், டவுன், ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, சமாதானபுரம், மார்க்கெட், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற வர்களை கண்காணி த்தனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசிக் கொண்டு சென்றவர்களை பிடித்து எச்சரிக்கை செய்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும், இனி இதுபோன்று வந்தால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர். ஒரு சில இடங்களில் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை சரிபார்த்தனர். மேலும் வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர். மது குடித்து சென்றவர்களுக்கு புதிய சட்டத்தின்படி 10 மடங்கு அபராதம் வசூலித்தனர்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    கோவை கார் வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஜவுளிக்கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய பஸ்நிலையத்தில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம், ஏட்டுகள் துரை, காளியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நீண்டநாட்களாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து அது குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் பாளை பஸ் நிலைய பகுதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடம், பயணிகள் இருக்கை, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர்.

    மேலும் டவுன், வண்ணார்பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளின் வாகன நிறுத்தங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ‘கலைக்களம்-2022’ என்ற தலைப்பில் கலைவிழா நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடந்தது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 'கலைக்களம்-2022' என்ற தலைப்பில் கலைவிழா நடந்தது.

    3-ம் நாள் விழாவை பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ராமநாதன் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பம், குழு நடனம், ஊமை நாடகம், பேச்சு போட்டி போன்ற கலை போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். சிவன் வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலாளர் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். கல்லூரி சங்க பொருளாளர் செல்வராஜ் நாடார், கல்லூரி குழு உறுப்பினர்கள் காமராஜ் நாடார், ஜோசப் பெல்சி, டாக்டர் ஆனந்த், பண்ணை கே.செல்வகுமார், ரகுநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்தரராஜ் நாடார், தொழில் அதிபர் கோபால், கண்ணநல்லூர் ெஜயகிருஷ்ணன் ஆகியோர் கலைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் புஷ்பராஜ், ஹரிபிரகாஷ் மற்றும் முருகவேல், அலுவலக கண்காணிப்பாளர் பாலசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரியசூசை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அறிவியல் மைய நிர்வாகி குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். இதனை சேவியர் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கல்லூரி விரிவுரையாளர்கள் மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்பு களை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மரியசூசை செய்திருந்தார்.

    • பூல் பாண்டி என்ற கண்ணன் சுத்தமல்லியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • ஹரிஹரனுக்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் பூல் பாண்டி என்ற கண்ணன் (வயது 30). இவர் சுத்தமல்லியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடைக்கு அரிசி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியரான டவுனை சேர்ந்த ஹரிஹரன் (20) என்பவருக்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் கண்ணன் ஆத்திரமடைந்து ஹரிகரனை தாக்கியுள்ளார். இது தொடர்பாக பேட்டை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • சாரதா கல்லூரியில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் சாரதா கல்லூரியில் செயலாளர் யதீஸ்வரி சரவணப்பிரியா அம்பா, இயக்குநர் சந்திரசேகரன் ஆகியோரின் அறிவுத்தலின்படி பொருளியல் துறையின் சார்பில் போட்டித்தேர்வுகளில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பொருளியல் படிப்பின் முக்கியத்துவத்தையும், இந்த துறையில் பட்டம் பெறுவதால் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கி பேசினார்.

    முன்னதாக 3-ம் ஆண்டு மாணவி இந்துமதி வரவேற்று பேசினார். பொருளியல் துறை தலைவரும், துணை முதல்வருமான கலாவதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 2-ம் ஆண்டு மாணவி சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.

    • பாளை சாந்திநகர் விளையாட்டு கிராமத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது
    • போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டி பாளை சாந்திநகர் விளையாட்டு கிராமத்தில் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் பிரிவில் நாகர்கோவில் எஸ்.டி.இந்து கல்லூரி முதல் இடத்தையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாங்குநேரி அருள்மிகு பன்னிருபிடிஅய்யன் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி அணிகள் 3-வது இடத்தையும் பிடித்தது.

    மாணவிகள் பிரிவில் நாங்குநேரி அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கல்லூரி அணி முதல் இடத்தையும், நாகர்கோவில் ஸ்ரீ அய்யப்பா பெண்கள் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாகர்கோவில் பெண்கள் கிறித்துவ கல்லூரி, கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அணிகள் 3-வது இடத்தையும் பிடித்தது.

    தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவரும், தமிழ்நாடு நீச்சல் கழக உதவி செயலாளருமான திருமாறன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை பரிசாக வழங்கினார். இதில் நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் லட்சுமணன், பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை உதவி பேராசிரியர் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • நெல்லையில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் சிவன் ஆலயங்களில் உள்ள சண்முகர் சன்னதிகளிலும் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது.
    • 6-ம் நாளான இன்று முருகன் கோவில்களில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், சுவாமி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகர் சன்னதி, பாளை மேலவாசல் முருகன் கோவில், பாளை திரிபுராந்திஸ்வரர் கோவில், நெல்லை சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோவில் உள்ளிட்ட மாநகரத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள் மற்றும் சிவன் ஆலயங்களில் உள்ள சண்முகர் சன்னதிகளிலும் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி கோவில்களில் தினமும் யாகசாலை பூஜைகள் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

    சூரசம்ஹாரம்

    திருவிழாவின் 6-ம் நாளான இன்று மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் காலை யாகசாலை பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா ராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கந்த சஷ்டியை யொட்டி விரதம் மேற்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்பட்டுள்ளது.

    • பாலா,பேச்சியம்மாள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் பாலா. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    மாரடைப்பால் இறப்பு

    பாலா லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்கள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.

    அதன்பின்னர் ஒரு வாரத்திலேயே மாரடைப்பு காரணமாக பாலா இறந்துவிட்டார். இதனால் பேச்சியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கணவரை நினைத்து கொண்டே அழுது கொண்டு இருந்த அவர், வீட்டில் இருந்த ஒரு பெரிய பொம்மைக்கு தனது கணவரின் ஆடை களை எடுத்து உடுத்தி வைத்துள்ளார்.

    தற்கொலை

    மேலும் அவரது ஆடைகளை தினமும் தூங்கும்போது அருகிலேயே வைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனாலும் கணவரின் பிரிவு அவரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    விசாரணை

    அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லை மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது.
    • பாபநாசம் அணையில் 85 அடி நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லையில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது. பாளையில் 5 மில்லிமீட்டரும், நெல்லையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தாமதம்

    மாவட்டத்தை பொறுத்த வரை ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

    வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிவிடும். விவசாயிகளும் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை தொடங்கிவிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

    பிசான சாகுபடி

    மேலும் தீபாவளி சமய ங்களில் பெரும்பாலான குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 85 அடி நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அணையில் வழக்கமாக 60 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் தற்போது நடவு பணிகளை மேற்கொ ள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட செயலாளர் மணி, துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×