என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Omni Bus"

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்த நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலையோரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 5,400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் 25 பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தரைதளத்தில் 9 கடைகள், ஆம்னி பேருந்துகளின் 18 அலுவலகங்கள், ஆண், பெண் கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையத்தைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 27 ஆம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னரும் பணிகள் நடைபெற்று வந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆம்னி பஸ் நிலையத்தை நேற்று மாலை பயன்பாட்டுக்கு மேயர் சண். ராமநாதன் கொண்டு வந்தார். இதையடுத்து அங்கிருந்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது மேயர் சண் ராமநாதன் கூறுகையில், இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும். இதை மீறினால் போக்குவரத்து துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சேகர் ,புண்ணியமூர்த்தி மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.
    • வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆயுதபூஜை தொடர் உட்பட விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு அதிககட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதை தொடர்ந்து 18ந்தேதி முதல் ஆம்னி பஸ் சிறப்பு தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடு சாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் தொடர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.

    இவ்வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500- (ரூபாய் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
    • விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வார்கள்.

    சொந்த ஊர்களுக்கு மக்கள் முண்டியடித்து செல்வதால் எவ்வளவு கட்டணத்தை நிர்ணயித்தாலும் அதனை செலுத்தி டிக்கெட் எடுத்து விடுவார்கள் என்று கணக்கு போடும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களை குறி வைத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

    இதன்படி போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல், அனுமதியின்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கடந்த 18-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 5 ஆயிரம் பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 70 பஸ்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யபட்டிருந்தன.

    இந்நிலையில் இன்று காலையிலும் கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த 18-ந் தேதியில் இருந்து இன்று வரை 4 நாட்களில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இது போன்ற அதிரடி நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக மேற்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தொடர்ச் சியாக மேற்கொண்டு பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அடுத்த 2 மாத காலத்திற்கு தமிழகத்தில் இயக்கிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • 2 மாத காலத்திற்குள் வெளி மாநில பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்றிட உத்தரவு.

    பர்மிட் பிரச்சினை, விதிமுறைகள் மீறல், கூடுதல் கடட்ண வசூல் உள்ளிட்ட புகாரில் 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.

    வரி கட்டிய பேருந்துகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும் என போக்குவரத்துத் தறை ஆணையர் நேற்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக போக்குவரத்து துறையால் சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அடுத்த 2 மாத காலத்திற்கு தமிழகத்தில் இயக்கிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் 28ம் தேதி வரை வெளி மாநில பேருந்துகள் தமிழகத்தில் இயங்கிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்குள் வெளி மாநில பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற போக்குவரத்துத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    50 பேருந்துகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பேருந்துகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இன்று மாலைக்குள் விடுவிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    • கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது.
    • கடந்த ஆண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வெளியூர்களுக்கு அதிகளவில் மக்கள் செல்லவார்கள் என்பதால், ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து கட்டணம் 5 சதவீதம் குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கள் அறிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கள் கூறியுள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை- கோவையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1725, அதிகபட்ச கட்டணம் ரூ.2,874 எனவும், சென்னை- நெல்லையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.3268 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை- சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1363ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,895ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, சென்னை- மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1688 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.2,554ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை- நாகர்கோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2211ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,765ஆகவும் நிர்ணயம்.

    சென்னை- திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1325ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,841 ஆகவும் நிர்ணயம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்படாது.
    • எக்காரணம் கொண்டும் டிசம்பர் 16க்கு பிறகு அனுமதி இல்லை.

    வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை டிசம்பர் 16க்கு பின் தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், விதிகளை மீறி இயக்கப்படும் 652 வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எக்காரணம் கொண்டும் டிசம்பர் 16க்கு பிறகு, வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்படாது என தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
    • ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று நகரத்தின் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.

    இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம்.

    கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

    பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டத்தை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக கனிவு காட்டினால் அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
    • ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பஸ்கள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தி உள்ளன.

    சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3400, கோவைக்கான கட்டணம் ரூ.3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    தீபஒளி திருநாள் நிறைவடைந்து வரும் 13-ஆம் நாள் மேற்கண்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான கட்டணம் இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4950 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.4120, கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4950 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பஸ் முன்பதிவுக்கான இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களை கசக்கிப் பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.

    கடந்த மாதத் தொடக்கத்தில் காந்தி பிறந்தநாள் உள்ளிட்ட தொடர் விடுமுறையின் போதும், ஆயுத பூஜை விடுமுறையின் போதும் ஆம்னி பஸ்கள் கட்டணம் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையும் அதிரடி சோதனைகளை நடத்தி, ரூ.37 லட்சம் தண்டம் விதித்ததாக செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2092 பஸ்களுக்கு மட்டுமே இந்த தண்டத்தை விதித்துள்ளனர். அதுவும் கூட ஒரு பஸ்ஸுக்கு சராசரியாக ரூ.1768 மட்டுமே தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இரு சக்கர ஊர்தியில், தலைக்கவசம் அணியாமல், 50 கி.மீக்குள் அதிக வேகத்தில் சென்றாலே ரூ.2,000 தண்டம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு அதை விட குறைவாக தண்டம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதற்காக பறிமுதல் செய்யப்பட்ட 119 ஆம்னி பஸ்களை அரசு உடனடியாக விடுவித்து விட்டது. சட்டத்தை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த அளவுக்கு கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?

    ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் கூட, அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய ஆம்னி பஸ் கட்டணம் வெளியிடப்பட்டது. அதன் படி தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை, கோவை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர், ஐதராபாத், விஜயவாடா, கேரளா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூ.1000 முதல் ரூ.1500 வரை கூடுதால் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

    மைசூர், எர்ணாகுளத்துக்கு ரூ.3500 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏ.சி. இருக்கை மற்றும் படுக்கை உள்ளிட்ட வசதியை பொறுத்து பயணிகளிடம் ரூ.1250 முதல் ரூ.2,500 வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறோம். விதி முறைகளை மீறி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தால் உடனடியாக இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அவர்கள் இந்த கட்டணத்தை கடைபிடிக்க மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
    • 223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்களில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையின் போது விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.

    கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் 6699 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது

    இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அபராதமாக ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதேபோல் ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வர தொடங்குவார்கள். அப்போதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • பத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    குன்னம்:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த லத்தீஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.

    பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி-பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் கொண்டகாரபள்ளம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரம் சிந்தாமணி குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன்(31) என்பவர் ஓட்டினார்.

    எதிர்பாராத விதமாக ஆம்னிபஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    பஸ்சில் வந்த மற்ற பயணிகள் விருதுநகர் மாவட்டம் சிவந்திப்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(52), நெல்லை மாவட்டம் மதுராநத்தம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த ஞானராஜ்(38), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த இசக்கியம்மாள்955), அவரது உறவினர்கள் லட்சுமி(45), ஜோதி(47), குமரன்(50), லாரி டிரைவர் சரவணன், ஆம்னி பஸ் டிரைவர் லத்தீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    பலியான பிரதீஷ், அந்தோணிராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    காயம் அடைந்த ஞானசேகர் வள்ளியூரில் வேளாண் அதிகாரியாக உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.
    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    சேலம்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி ரெயில்கள், பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி சேலம் சரகத்துக்குட்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தொப்பூர், ஓமலூர், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. மொத்தம் 715 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா?, அதிக பயணிகள் உள்ளார்களா?, சாலை வரி கட்டுப்பட்டுள்ளதா?, உரிமம் பெற்று இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 78 பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    ×