search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pandalur"

    • சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
    • முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு டாக்டர் அகஸ்டின்(வயது60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.

    இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 பேர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.

    புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மன நல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது, இந்த மன நல காப்பகம் முறையான அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    தொடர்ந்து சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.

    இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் எப்படி இறந்தார்கள்? இறப்புக்கான காரணம் என்ன? அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.

    இந்த காப்பகத்தில் ஆரம்பத்தில் 60 பேர் இருந்து வந்ததாகவும், அதன் பின் 33 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்த போது 13 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாகவே உள்ளது.

    இதுவரை மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் பெயர், ஊர் விவரம், தற்போது இருப்பவர்கள் பெயர், ஊர் விவரம் உள்ளிட்ட எந்தவிதமான பதிவுகளும் காப்பகத்தில் இல்லை.

    மேலும் இறந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? இறந்தவர்கள் உடல் உடற்கூராய்வு செய்தது உள்ளிட்ட எந்த விவரங்களுமே இல்லை. இறந்தவர்களை தங்கள் காப்பகத்தின் அருகிலேயே புதைத்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் தான் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    இறந்தவர்கள் எந்த நிலையில் புதைக்கப்பட்டனர் என்பது தொடர்பான உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையடுத்து உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மன நல காப்பக உரிமையாளரான கேரளாவை சேர்ந்த அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, அதில் பணிபுரிந்த ஊழியர்கள் என 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் 10 பேரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் காப்பகத்தில் இருந்த மன நோயாளிகளுக்கு மாதம் ஒருமுறை சிகிச்சை அளிக்க சென்ற செவிலியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.

    யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.

    யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.

    மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    பந்தலூர் அருகே லாரியில் கடத்திய ரூ.37 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.

    பந்தலூர்:

    நீலகிரி எல்லை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் முத்தங்கா சோதனைச் சாவடி உள்ளது. இங்கு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்பாபு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, கோழிக்கோடு நோக்கி லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    லாரியில் டிரைவரின் இருக்கைக்கு மேல்பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ.37 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோட்டை சேர்ந்த முகமது நவாஷ் (வயது 29) மற்றும் முகமது சித்திக், (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×