search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pillow waterfall"

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    ×