search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus two student suicide"

    குன்னம் அருகே சரியாக தேர்வு எழுதாததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி, விவசாயி. இவரது மகள் சினேகா (வயது 17). இவர் குன்னத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் பிளஸ்-2 தேர்வினை சரியாக எழுத வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோழிகள், வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் அடுத்த காங்கையார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உத்தண்டம். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் உதயநிதி (வயது 17).

    இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் அவர், மற்ற நாட்களில் செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசுவார். அது போல் நேற்றிரவு செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசினார்.

    பின்னர் விடுதிக்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்கள் உதயநிதி அறைக்கு சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி உதயநிதியை அழைத்த போது, உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

    இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்த போது, உதயநிதி மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிதியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே உதயநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் உதயநிதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி, டேபிள், ஷேர் மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். உதயநிதி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் மாணவன் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உதயநிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உதயநிதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. விடுதியில் தங்கியிருந்து படிக்க விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் மகள் தற்கொலை செய்து கொண்டதால் தாயும் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை கே.புதூர் லூர்து நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தங்கம் (வயது 36). இவர்களது மகள் ரோகிணி (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ரோகிணி காலையில் அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் தங்கம் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த தங்கம் அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற எண்ணத்தில் அவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் இருந்த ஆசிட்டில் கண்ணாடி துகள்களை போட்டு குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் தற்கொலை செய்து கொண்டதால் தாயும் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    சிப்காட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் காமராஜர் நகரை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் கிஷோர்குமார் (வயது 17). பெல் ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கிஷோர்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

    விடுமுறை நாளான நேற்று வீட்டில் இருந்த கிஷோர் குமாருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமாகி துடித்துள்ளார். பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

    குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து, சிப்காட் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளையில் மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    திசையன்விளை:

    நெல்லை டவுனை சேர்ந்த கச்சேரி பாடகர் பாலன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கிருஷ்ணவேணி, மகன் லட்சுமிகாந்த் (வயது 18). லட்சுமிகாந்த் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந்தார். 

    இந்நிலையில் பாலன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தனது குடும்பத்துடன் திசையன்விளை மணலிவிளையில் வாடகை வீட்டில் குடியேறினார். மகள் கிருஷ்ணவேணி பணிபுரிந்த அதே பள்ளியில் மகன் லட்சுமிகாந்தை பிளஸ்-1 சேர்த்தார். 

    பாலன் கச்சேரி பாடகர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அதேபோல் நேற்றும் வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகிய 3 பேரும் இருந்தனர். அப்போது மாணவன் லட்சுமிகாந்த், தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்க நெல்லையில் உள்ள ஒர்க்ஷாப்பில் கொடுத்திருப்பதாகவும், அதனை வாங்கி வர ரூ.20ஆயிரம் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.  ஆனால் தன்னிடம் பணம் இல்லை என தாய் சுப்புலட்சுமி கூறிவிட்டார். இதையடுத்து தாய் மற்றும் அக்காளிடம் லட்சுமிகாந்த் சண்டையிட்டுள்ளார். பின்பு அவர்கள் இருவரும் வீட்டின்வெளியே வந்து அமர்ந்து விட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் தாயும், மகளும் வீட்டினுள் சென்றனர். 

    அப்போது அங்குள்ள அறையில் மாணவன் லட்சுமிகாந்த் தூக்கில் பிணமாக தொங்கினான். தனது பெல்ட்டிலேயே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். இதை பார்த்த தாய் சுப்புலட்சுமி, அக்காள் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

    மாணவன் உடலை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
    மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் லட்சுமிகாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடையநல்லூரில் பள்ளிக்கு சரிவர செல்லாத பிளஸ்-2 மாணவியை தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் நாட்டாண்மை தெருவை சேர்ந்தவர் மயிலேறும் பெருமாள். இவரது மகள் கார்த்திகா (வயது17). இவர் தென்காசியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கார்த்திகாவின் தந்தை மயிலேறும் பெருமாள் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் கார்த்திகா சோகத்தில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவர் சரிவர பள்ளிக்கு செல்லவில்லையாம். இதையடுத்து கார்த்திகாவின் தாய் அவரை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகா இன்று காலை வீட்டில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி கடையநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×