என் மலர்
நீங்கள் தேடியது "pournami"
- வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
- பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இருக்கும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை (13-ந்தேதி) 350 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ந் தேதிகளில் 545 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் என 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது. நாளை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பவுர்ணமி நாளை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைகிறது.
- சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கடந்த மாதம் பவுர்ணமியின் போது கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.
மேலும் இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத் திருவிழாவின் போது எவ்வாறு பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் வழி குறித்து வருகிற பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வைத்து ஒத்திகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
- கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.
தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
- உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை :
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது.
அதன்படி சென்னையில் உள்ள சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில், எழும்பூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அர்த்தநாரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று மாலை வரை பவுர்ணமி உள்ளது.
- மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிறுவர் முதல் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதவித்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.
மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- நெல்லி மரத்தின் அடியில் பெண்கள் சிறப்புப்பூஜைகள் செய்து வழிபட்டனர்.
- காணிப்பாக்கத்தில் உள்ள வரதராஜசாமி கோவிலில் சத்யநாராயண பூஜை நடந்தபோது எடுத்தபடம்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் திங்கட்கிழமையான நேற்று சோமவாரத்தையொட்டி கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை நடந்தது. கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர தொடங்கினர். கோவிலின் நடை திறந்ததும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கார்த்திகை தீபங்களை ஏற்ற ஒதுக்கப்பட்ட 4 பகுதிகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவில் சார்பில் ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை ஏற்றி அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வழிபட்டனர். தீப ஒளியில் கோவில் வளாகம் ஜொலித்தது.
அதேபோல் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மாலை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதன் பிறகு உற்சவர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலின் துணைக் கோவிலான மணிகண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடந்தது. அதையொட்டி நெல்லி மரத்தின் அடியில் பெண்கள் சிறப்புப்பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அங்குள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜசாமி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி நேற்று சத்யநாராயண பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
- 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.
பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேக விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
துாத்துக்குடியில் பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேஸ்வர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா விமரிசையாக நடக்கும்.
அதுபோல் இந்த ஆண்டும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், 11மணிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்திலலும், அம்பாள் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இரவு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பவுர்ணமி பூஜை கமிட்டி நெல்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டது.
- 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் இந்த கோவில் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால்விடும் வகையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலைய துறையினர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகின்றனர். உலக புராதான சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனெஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதான சின்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைபடுத்தியுள்ளனர்.
மேலும் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டு பிரமாண்டமாக காணப்படுகிறது. ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 37 ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அன்னக்காப்பு அலங்காரம் அபிஷேகம் மட்டுமே செய்யப்பட்டது.
இந்நிலையில் 38-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன. இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் ஐந்து முக மகாதீபாராதனை நடந்தது. லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை, உதவி ஆணையர் நாகராஜ், செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் இரவு 8 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சாதம் போக மீதமுள்ள சாதம் அருகில் உள்ள ஜீவராசிகளுக்கும் மற்றும் குளங்களில் உள்ள மீன்களுக்கும் உணவாக அளிக்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
- பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம்.
- இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நிகழ்வதால் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.
எனவே இன்று இரவு 7 மணியளவில் நடக்கயிருந்த பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.