search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Provide"

    • தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கூறியதாவது

    காமராஜர் காலனி பாதியில் செப்டிக் டேங்க் அருகே குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள 400 குடும்பத்தினர் மிகவும் மோசமான குடிநீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

    எனவே பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலச் சேவை அமைப்பினர் தலைவர் என்.ஈஸ்வரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினா்.

    இது குறித்து மக்கள் நல சேவை அமைப்பின் தலைவா் ஈஸ்வரி கூறுகையில் கடந்த 3 மாதங்களாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம். இனியும் தாம–தப்படுத் தும்பட்சத்தில் காலியாக உள்ள அரசுக்குச் சொந்த மான நிலங்களில் நாங்களாகவே குடியேறி விடு–வோம் என்றாா்.

    • தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.
    • இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.

    பகுதி 1-ன் கீழ் கொரோனா பரவலால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள், தனியுரிமை அல்லது பங்குதாரர் நிறுவனங்கள் தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் அல்லது ஒரு புதிய நிறுவனத்தினை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி வரை இருக்கலாம். இதில் நிறுவப்படும் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

    இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

    பகுதி 2-ன் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியிலும் இயங்கி வந்த கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை மேற்கொள்ள நிறுவப்படும் எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

    ஆர்வமும், தகுதியும் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மானிய உதவி பெறுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.

    இதற்கான விண்ணப்–பத்தினை இணையவழியாக msmeonline.tn.gov.in –ல் பதிவிடலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கோணங்கிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிகடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 217 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் எருமப்பட்டி அருகே உள்ள கோணங்கிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    கோணங்கிப்பட்டி ஆதி திராவிடர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது குடும்ப அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க எடுத்து வந்து உள்ளோம். இனியாவது எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். 
    ×