என் மலர்
நீங்கள் தேடியது "public road blockage"
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதுக்கேணி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது அன்றாட தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதி அடைந்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த புதுக்கேணி பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள திருச்சி-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்கள் பிரச்சினையை விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் கூறி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தையொட்டி உள்ள செய்யாற்றில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டுகளில் மணல் கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தச்சூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21). இவர் இன்று காலை தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தச்சூர் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளை சம்பவம் அதிகம் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுத்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை, விளார் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த சிரதத்திற்கு உள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இன்று காலை விளார் கண்டிதம்பட்டு பிரிவு சாலையில் ஒன்று திரண்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாயை சரி செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். இதனால் உடனடியாக தொழிலார்களை வரவழைத்து குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.