என் மலர்
நீங்கள் தேடியது "Rae Bareli"
- முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
- உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ரேபரேலியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், சோனியாகாந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கு அவர் போட்டியிடுகிறார். இதனால், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியானது.
இந்நிலையில், தனது ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி இந்தியில் எழுதப்பட்ட ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை கவுரவிக்க என்னால் இயன்ற அளவுக்கு செயல்பட்டுள்ளேன்.

தற்போது முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவால், உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.
கடந்த காலத்தை போலவே எதிர்காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
- அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.
காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்
ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
- ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
அமேதியில் இன்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வருகிற 3-ந்தேதிதான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வுக்குழு இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த குழு ஆலோசனை நடத்தியது. இருந்தபோதிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி.
- 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.
1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.
அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004-ல் முதன்முறையாக களம் இறங்கினார்.
அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பா.ஜ.க.வுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019-ல் ராகுலை தோற்கடித்தார்.
கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
ரேபரேலி தொகுதியில் 2004, 2006 இடைத்தேர்தல், 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 முறை சோனியாகாந்தி வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்து வந்தார். தற்போது அவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிவிட்டார். இம்முறை ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
அமேதியில் ராகுல்காந்தியும், ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கேஎல் சர்மா அமேதி தொகுதியிலும் வேட்பாளராக களமிறங்குகிறார்கள்.
- வயநாடு தொகுதி முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?
திருவனந்தபுரம்:
தேசிய அளவில் இந்தியா என்ற கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநில மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இரு கூட்டணிகளின் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் களம் கண்டனர்.
அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் இரு கூட்டணி கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்ட னர்.
அதிலும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகள் கட்சியினருக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது.
ஏனென்றால் அந்த தொகுதியில தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் கண்டனர். தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்து தேர்தலில் களம் கண்டது அந்த கட்சிக்காரர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பிற கட்சியினரின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி தவைர்கள், தங்களின் பிரசாரத்தில் அந்த பிரச்சினையை பற்றி பேசினார்கள். இது இந்தியா கூட்டணிகளுக்கிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தலும் கேரளாவில் நடந்து முடிந்துவிட்டது. தற்போது அனைவரும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அதிலும் வயநாடு தொகுதி முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் தான் ராகுல்காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என்றதும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இந்த தேர்தலிலும் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கருதியதே அதற்கு காரணமாகும்.
அந்த உற்சாகத்தில் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் மட்டுமுன்றி ஐக்கிய ஜன நாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் உற்சாகமாக தேர்தல் பணி யாற்றினார்கள்.
ஆனால் தற்போது ரேபரேலி தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றி ருக்கும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரேபரேலி காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியாகும்.
சோனியா காந்தி கடந்த 5 முறை நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி. அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதன் மூலம், அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றால் அவர் எந்த தொகுதியில் பணி யாற்றுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் இருந்து வெளியேறுவாரா? என்ற கேள்வி வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்காக ஓட்டு கேட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.
அப்படி அவர் வெளியேறி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் தங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா? என்ற அச்சமும் அவர்களுக்குள் உருவாகி உள்ளது.
- காந்தி’ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
- 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
அமேதி பாராளுமன்றத் தொகுதி 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் வரை காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவது வழக்கமாக இருந்தது.
அமேதியில் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி இரானி (மத்திய மந்திரி) 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.
இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதி பாராளுமன்றத் தொகுதியில் `காந்தி' குடும்பத்தை (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998-ம் ஆண்டு அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு மாற்றாக அவர்களின் சார்பில் சதீஷ் சர்மா நிறுத்தப்பட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் சிங்கிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் மீண்டும் 1999-ல் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் சிங்கை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றிபெற்றார்.
இந்த முறை காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முதல் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடத் தொடங்கினார். இந்நிலையில் 2004, 2009, 2014 என தொடர்ந்து மூன்றுமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி வாகை சூடி இறுதியாக 2019 தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் வீழ்ந்தார்.
காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் 1967-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வித்யா தர் பாஜ்பாய் வெற்றிபெற்று 1971 தேர்தலிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.
1977 தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை வீழ்த்தி ஜனதா கட்சியைச் சேர்ந்த ரவீந்திர பிரதாப் சிங் வெற்றிபெற்றார். மீண்டும் 1980-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரவீந்திர சிங்கை சஞ்சய் காந்தி தோற்கடித்தார்.
வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். இதனால் அமேதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி போட்டியிட்டு 84.18 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.
இதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை அமேதி தொகுதி எம்பியாக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அப்போது காங்கிரசுக்கு 31.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அமேதியில் அந்த கட்சி சந்தித்த மோசமான தோல்வி ஆகும்.
இதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு அமேதி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி 67.12 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு மாறினார்.
அந்த ஆண்டில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014-ம் ஆண்டு அதேதொகுதியில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
இதுவரை 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 1977, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் களமிறங்கி உள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் தேர்தல் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
- வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.
- எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.பி.க்கள் பலர் களம் இறங்கி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள், மேல்சபை எம்.பி.க்கள் உள்பட பலர் களம் இறங்கி உள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்கிறார்களோ அதற்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
கேரள மாநிலத்தில் கடந்த 26-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்கு 5 இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மட்டுமின்றி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
கடந்த முறை வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கு வெற்றியை பெறுவார் என தெரிகிறது. ஆனால் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் அவர் வெற்றி பெற்றால், வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.
இதேபோல், கேரள மாநிலத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் ராதாகிருஷ்ணன், முகேஷ், ஷபி பரம்பில், கே.கே.சைலஜா மற்றும் வி.ஜாய் ஆகியோரும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளனர். வடகரை தொகுதியில் பாலக்காடு எம்.எல்.ஏ. ஷபி, மட்டனூர் எம்.எல்.ஏ. சைலஜா போட்டியிடுகின்றனர்.
கொல்லம் தொகுதியில் கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ், அட்டிங்கல் தொகுதியில் வர்கலா எம்.எல்.ஏ. ஜாய், ஆலத்தூர் தொகுதியில் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
- பிரசாரம் செய்ய ராகுலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது.
- இன்று பிரதமர் மோடிக்கு நிகராக ராகுல் பார்க்கப்படுகிறார்.
உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளாக அமேதியும், ரேபரேலியும் உள்ளன. இவற்றில் அமேதி தொகுதி கடந்த தேர்தலில் பா.ஜனதா வசம் சென்றதால் அமேதி பற்றி ராகுல் கவலைப்படவில்லை. இதற்கு அங்கு பா.ஜனதா வலுவடைந்திருப்பதே காரணமாக கருதப்படுகிறது. இதனால், தனது தாயின் தொகுதியான ரேபரேலியை ராகுல் தேர்வு செய்துள்ளார்.
பா.ஜனதா சார்பில் ரேபரேலியில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் அமேதி பாணியில் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்கிறார்.
2014-ல் அமேதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வியுற்றார். என்றாலும் ஸ்மிருதி தொகுதியை காலி செய்து விடாமல் அங்கேயே தங்கிவிட்டார். தொடர்ந்து அவர் மக்களிடையே வாழ்ந்து கடினமாக உைழத்ததால் 2019-ல் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது.
இதேபோன்று தினேசும் 2019-ல் சோனியா காந்தியிடம் தோல்விஅடைந்தார். என்றாலும் சோனியாவின் வாக்குகளை குறைத்திருந்தார்.
இதற்காக பா.ஜனதா தினேசுக்கு உத்திரபிரதேச மாநில மேலவையில் எம்.எல்.சி. பதவி அளித்ததுடன் மாநில அமைச்சராகவும் நியமித்தது.
இந்த செல்வாக்கில் தினேஷ், தொடர்ந்து ஸ்மிருதியை போல் ரேபரேலி மக்களுடன் தங்கிப் பணி செய்துவந்தார். மேலும், 2018 வரை காங்கிரசில் சோனியாவுக்கு நெருக்கமானத் தலைவராக தினேஷ் இருந்ததன் பலனும் அவருக்கு தேர்தலில் கிடைக்கலாம்.
அதேநேரத்தில் ரேபரேலியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னாள் முதல்வர் மாயாவதி தனது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
ரேபரேலி வாக்காளர்களில் சுமார் 34 சதவீதம் பேர் தலித்துகள். தலித் ஆதரவு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, தாகூர் பிரசாத் யாதவ் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ராகுலிடம் இருந்து யாதவர் மற்றும் தலித் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கடந்த முறை இக்கூட்டணி ரேபரேலியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், தலித் வாக்காளர்களில் பெரும்பாலானோர் சோனியாவுக்கு வாக்களித்தனர். தற்போது ரேபரேலியில் உள்ள 6 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே காங்கிரசுக்கு வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது.
அதேவேளையில் 2022 சட்டப்பேரவை தேர்தலில் ரேபரேலியின் 5 தொகுதிகளில் 4-ல் சமாஜ்வாடி வெற்றி பெற்றது. ஒன்றை மட்டுமே பா.ஜனதா கைப்பற்றியது. இங்கு காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சமாஜ்வாடி எம்எல்ஏ மனோஜ் பாண்டேவும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார்.
காங்கிரசுக்கு ரேபரேலியில் கிடைத்த வாக்கு சதவீதங்களும் குறைந்து வருகின்றன. 2009-ல் 72.2 சதவீதம், 2014-ல் 63.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2019-ல் பா.ஜனதாவின் தினேஷ் சோனியாவுக்கு சவாலாக விளங்கினார்.
இவரால் காங்கிரசின் வாக்கு சதவீதம் 55.8 என்றானது. பா.ஜனதாவுக்கு 2014-ல் 21.1 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. இது 2019-ல் 38.7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
இத்தனை காரணிகளுக்குப் பிறகும் ராகுலை பா.ஜனதா வீழ்த்துவது கடினம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ரேபரேலியின் முதல் பாராளுமன்ற தேர்தலில் பெரோஸ் காந்தி போட்டியிட்டது முதல் நேரு காந்தி குடும்பத்துடன் அதன் வாக்காளர்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளனர். இன்று பிரதமர் மோடிக்கு நிகராக ராகுல் பார்க்கப்படுகிறார்.
இதற்கான பலனுடன் நேரு காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் ராகுலுக்கு கூடுதல் பலம் தரக் கூடியதாக உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் செய்ய ராகுலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது. இதுவும் அவருக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
- பா.ஜ.க, உடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
- எங்கள் கட்சியில் சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.
அமேதி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் எந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி, பிரியங்காவுக்கு மத்திய மந்திரியும், அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் அவர்களுக்கு (ராகுல்காந்தி, பிரியங்கா) சவால் விடுகிறேன். பா.ஜனதாவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
இதற்கான டி.வி. சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் அண்ணன்-தங்கை ஜோடியும், இன்னொரு பக்கம் பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகிவிடும். எங்கள் கட்சியில் இருந்து சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகல்காந்தி வெற்றி பெற்றார். ராகுல்காந்தி இந்த முறை வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
- ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
- 53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.
அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல.
- தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது.
ரேபரேலி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ராகுல்காந்தி பற்றி கூறுகையில், ஒரு சகோதரியாக, என் சகோதரர் மகிழ்ச்சியான மனிதராக இருக்க விரும்புகிறேன். அவர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கினால் மகிழ்ச்சி அடைவீர்களா என்ற கேள்விக்கு, அது ஆட்சிக்கு வந்தால் இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என்று அவர் பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், `நாங்கள் இருவரும் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறோம். நான் 15 நாட்களாக இங்கே இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல என்பதால் எங்களில் யாராவது ஒருவர் இங்கு இருக்க வேண்டும்.
நாங்கள் இங்கு கடுமையாக உழைத்துள்ளோம். இந்த தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது. நாங்கள் சுற்றி இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் பேசுவதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார்.
- ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் சோனியாவுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-
தேர்தல் பிரசாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை மோடியால் சொல்லாமல் இருக்க முடியாது என்று நான் சமீபத்தில் பேசினேன்.
2 நாட்கள் கழித்து அதானி, அம்பானி பற்றி மோடி பேசினார். நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி காப்பி அடித்து பேசுகிறார்.
இதில் என்ன தெரிகிறது? என்னால் அவரை எந்த விசயத்திலும், எப்படியும் பேச வைக்க முடியும்.
நீங்களும் பிரதமர் மோடி ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் பிரசார மேடைகளில் பேசுகிறேன். அதை அடுத்த நாளே பிரதமர் மோடி எடுத்து பேசுவார்.
மோடி பிரசாரங்களில் இப்போது இதுதான் நடக்கிறது. புதிதாக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை.
இன்று இங்கு பேசிய எனது தாயார் ரேபரேலி தொகுதியை என்வசம் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.
பாரம்பரியமிக்க ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெருமையுடன் நான் இதை சொல்கிறேன். எனது தாயின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்களுக்காக உழைக்க 20 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
இவ்வாறு ராகுல் பேசினார்.