என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rameswaram"
- மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் அவதி.
ராமநாதபுரம்:
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று காலை வரை விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக் கூடிய தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தங்கப்பா நகர், இளங்கோவடிகள் தெரு, சூரங்கோட்டை, அரண்மனை, வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தங்கப்பா நகர் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்று மழை நீரால் முழுவதுமாக மூழ்கியது. அதேபோல் அய்யர் மடம் பகுதியில் உள்ள ஊரணியும், சாலையும் ஒன்றாக சேர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் வரலாறு காணாத மழையால் இந்த இரண்டு நாட்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அதிலும் கடந்த 69 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1955-ம் ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரம் மாவடட்த்தில் குறிப்பாக ராமேசுவரத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தி அம்பாள் கோவில், உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம், உத்தரகோச மங்கை மங்களநாதர் கோவில்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பணியாளர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தினர்.
அதேபோல் பாம்பன் ரோடு பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பாலத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்படி ஒரு மழையை நாங்கள் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மழையானது பெய்துள்ளதாகவும் முறையான வாறுகால்கள் இல்லாததாலேயே இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதாகவும் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக பல ஊரணிகள் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையில் ஒரு சில ஊரணிகள் மட்டும் நிரம்பி வழிகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாறுகால்களை தூர்வாரி அந்தந்த குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு செல்லக் கூடிய பகுதிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-125.60, மண்டபம்-271.20, ராமேசு வரம்-438, பாம்பன்-280, தங்கச்சிமடம்-338.40, பள்ளமோர்க்குளம்-50.70, திருவாடானை-12.80, தொண்டி-7.80, வட்டா ணம்-12.80, தீர்த்தண்ட தானம்-20.20, ஆர்.எஸ்.மங்கலம்-14.90, பரமக்குடி -25.60, முதுகுளத்தூர்-49, கமுதி-49, கடலாடி-73.20, வாலிநோக்கம்-65.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,834.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 114.68 மில்லி மீட்டர் ஆகும்.
மேக வெடிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒரு பெரிய அளவிலான மழைப் பொழிவை குறிக்கிறது. இந்த மேக வெடிப்புகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.
குறைந்த பரப்பளவில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் வரையிலான இடத்தில் ஒரு மணி நேரத் தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவானால் அதுவே மேக வெடிப்பு எனப்படுகிறது. சில சமயங்களில் அது ஆலங்கட்டி மழையாகவும், இடியுடன் சேர்ந்த மழையாகவும் கொட்டுகிறது.
நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நீரானது, மேல்நோக்கி செல்லும்போது வெப்பக் காற்றின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட அந்த பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
- கடல் அலைகள் கரையில் பயங்கரமாக மோதின.
ராமநாதபுரம்:
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலி யாக வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவில் கனமழையாக நீடித்தது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் 4 ரதவீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.
கடல் அலைகள் பல மீட்டர் தூரத்திற்கு எழுந்தது. ராட்சத அலைகள் கரையில் பயங்கரமாக மோதின.
தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இன்று பெரும்பாலான மீவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றன.
இதேபோல் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சத்திரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட் டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விபரம் (மி.மீட்டரில்) வருமாறு:-
ராமநாதபுரம்-96, மண்டபம்-40.20, ராமேசுவரம்-38, பாம்பன்-30.40, தங்கச்சி மடம்-41, பள்ளம்மோர் குளம்-26.80, திரு வாடனை-9.80, தொண்டி-31, வட்டாணம்-46.80, தீர்த்தாண்டதானம்-63.30, ஆர்.எஸ்.மங்கலம்-32.40, பரமக்குடி-77, முதுகுளத்தூர்-40, கமுதி-24.80, கடலாடி-55, வாலி நோக்கம்-73.20 என மாவட்டத்தில் மொத்தமாக 745.70 மில்லி மீட்டர் அளவிலும் சராசரியாக 46.61 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது.
இதற்கிடையே மண்டபம் வடக்கு துறைமுகம் பகுதியில் நேற்று இரவு வரலாறு காணாத அளவில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. அப்போது கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 15 விசைப்படகுகள் கரையில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் கிடந்தது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
- புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை 14 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய பாலத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Tamil Nadu: Southern Railway General Manager RN Singh inspected the new railway bridge constructed at Pampan, in Rameswaram. pic.twitter.com/Q7gUi49zQD
— ANI (@ANI) October 22, 2024
- காசி யாத்திரை என்பது மிகவும் பிரபலமான ஒன்று.
- ராமேஸ்வரத்தில் தொடங்கி பின் ராமேஸ்வரத்திலேயே காசி யாத்திரை முடியும்.
காசி யாத்திரை என்பது மிகவும் பிரபலமான ஒன்று. சந்திர வம்சத்தில் புண்ணிய நிதி என்ற அரசன் பிறந்து, மதுரையை ஆண்டு வந்தார். இந்த மன்னருக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீது அதீதமான பக்தி இருந்தது.
தன் முன்னோர்களுக்காவும், தனக்கு மகள் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், அவர் ராமேஸ்வர யாத்திரை செல்ல எண்ணினார். தன் மகனிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டு, தன் மனைவி மற்றும் படை பரிவாரங்களுடன் ராமேஸ்வரம் வந்தார்.
தனுஷ்கோடியில் தங்கி எல்லாவித புண்ணிய தீர்த்தங்களிலும் முறைப்படி குளித்து, ராமநாதரை வழிபட்டு அங்கேயே தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில் படித்த வேத விற்பனர்களைக் கொண்டு பகவான் விஷ்ணுவை வேண்டி ஒரு யாகமும் செய்தார். அந்த யாகம் முடிந்தபின் தன் மனைவியுடன் புனித நீராட தனுஷ்கோடி சென்றார்.
நீராடிய பின் தான - தர்மங்கள் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் அழகிய சிறுமியைக் கண்டார். ஐந்து வயதுடைய அந்த பெண் பிள்ளை, அரசனை நோக்கி "மன்னா.. நான் தாய் - தந்தை இல்லாதவள். என்னை உன் மகளாக ஏற்று வளர்த்து வருகிறாயா?" என கேட்டது.
அரசனும் "மகள் வேண்டிதான் இத்தனை தூரம் வந்தேன். நீ பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருக்கிறாய். நீ அவசியம் என்னுடன் வா" என அழைத்தார்.
அப்பொழுது அந்த பெண் குழந்தை "அரசே.. ஒரு நிபந்தனை உண்டு. என்னை யாரும் தீண்டக்கூடாது. என்னை யாராவது தீண்டினால், அவர்களுக்கு நீ தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியது.
அரசனும் ஒப்புக்கொண்டு, மகா ராணியுடன் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தார்.
ஒரு சமயம் அரசவை தோட்டத்தில், அந்தச் சிறுமி பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அப்போது மிகுந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்ட ஒரு அந்தணர் கங்கை நீர் நிரம்பிய குடத்தை தோளில் ஏந்தியபடி அங்கு வந்து, அந்தச் சிறுமியை நோக்கி "பெண்ணே.. நீ யார்?" என்று கேட்டு தொட்டார்.
உடனே அந்தச் சிறுமி அலறினாள். அவளது சத்தம் கேட்டு அங்கு வந்த அரசனிடம், "இந்த ஆள் என்னை தீண்டி விட்டார். இவருக்கு தண்டனை வழங்குங்கள்" என்றாள்.
அரசனும் அந்த அந்தணரை, ராமநாத சுவாமி கோவிலுக்கு இழுத்துச் சென்று, அங்குள்ள சங்கிலியால் பிணைத்து வைத்தார். பின்னர் தன் மகளிடம், "பெண்ணே.. கவலைப்படாதே.. நாளை விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்குகிறேன்" என்று கூறினார்.
அன்றைய தினம் மன்னனிடம் கனவில் சங்கு- சக்கரதாரியாக தோன்றிய மகாவிஷ்ணு, "மன்னா.. அந்தணராக வந்தது நான்தான். இப்பொழுது உன்னிடம் வளர்ந்து வரும் பெண், மகாலட்சுமியே ஆவாள்" என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு விழித்த மன்னன், சங்கிலியால் தான் பிணைத்த அந்தணரைக் காணாதது அறிந்து தவித்தார். 'இறைவனையே சங்கிலியால் பிணைத்து விட்டேனே' என்று வருந்தினார். தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.
அப்போது மகாவிஷ்ணு, "நீ என்னை சங்கிலியால் பிணைத்த கோலத்திலேயே, மகாலட்சுமியுடன் 'சேது மாதவன்' என்ற பெயரில் நான் இங்கேயே தங்கிவிடப் போகிறேன். உனக்கு வைகுண்ட பதவியும் அருள்வேன்" என்று கூறி மறைந்தார்.
ஸ்ரீ ராமநாத சுவாமி ஆலயத்தில் மேற்புறம் இரண்டாம் பிரகாரத்திற்கும் மூன்றாம் பிரகாரத்திற்கும் இடையே `சேது மாதவ தீர்த்தம்' என்ற குளம் இருக்கிறது. இதற்கு வடக்கு புறம் 'சேது மாதவன்' சன்னிதியும் இருக்கிறது.
இங்கு குளித்து சேது மாதவனை தரிசிப்பவர்களுக்கு சேதுஸ்னான பலன் கிடைக்கும் என்றும், தனுஷ்கோடியில் இருந்து கொண்டு வரும் மணலை இவருடைய சன்னிதியில் வைத்து பூஜை செய்தால் காசி யாத்திரை பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
ராமேஸ்வரம், பிரயாகை, காசி ஆகிய மூன்று இடங்களும் சிவபெருமானுக்கு உரிய இடங்களாக பொதுவாக அறியப்பட்டாலும், இந்த மூன்று இடங்களிலுமே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரத்தில் சேது மாதவன் இருப்பதைப் போல, பிரயாகையில் வேணி மாதவன், காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார்.
ராவண வதம் முடிந்து ராமேஸ்வரம் வந்த ராமபிரான், சீதாதேவியுடன் சேர்ந்து சிவபெருமானை பூஜிக்க எண்ணினார். அதற்காக ஆஞ்சநேயரை நோக்கி "நீ காசிக்குச் சென்று ஒரு சிறந்த லிங்கத்தை எடுத்து வா" என்று அனுப்பினார்.
காசிக்குச் சென்ற அனுமன், சிறந்த சிவலிங்கத்தைத் தேட, ஆகாயத்தில் பறந்த கருடன், அப்படியொரு சிவலிங்கத்தை அனுமனுக்கு காண்பித்து உதவியது. அந்த சிவலிங்கத்தை அனுமன் எடுக்க, அதை பைரவர் தடுத்தார்.
இருப்பினும் ராமனின் அருளால் சிவலிங்கத்தை அனுமன் எடுத்துச் சென்றுவிட்டார். அப்போது ஏற்பட்ட சாபம் காரணமாகத்தான், இன்றளவும் காசியின் மீது கருடன் பறப்பதில்லை என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் சிவலிங்கத்துடன் ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. எனவே சீதாப்பிராட்டி மணலில் சிவலிங்கம் ஒன்றை பிடித்துவைக்க, அதற்கு ராமபிரான் பூஜை செய்தார்.
அப்போது சிவலிங்கத்துடன் வந்த அனுமன், "பிரபு.. நான் எடுத்து வந்த சிவலிங்கத்தை தாங்கள் பூஜிக்க வேண்டும்" என்றார். அதற்கு ராமபிரான் "மணலில் செய்த இந்த சிவலிங்கத்தை அகற்றி விடு" என்று கூற, தன் வாலால் அனுமன் சிவலிங்கத்தை அகற்ற முயன்றார்.
ஆனால் அது முடியாமல் பல அடி தூரம் போய் விழுந்தார். ஆஞ்சநேயரின் வால் பட்ட அடையாளம், அந்த மணல் லிங்கத்தின் மீது இன்றளவும் காணப்படுவதாக சொல்கின்றனர்.
ஆஞ்சநேயர் கொண்டு வந்த சிவலிங்கமானது, ராமநாதர் சன்னிதிக்கு வடக்கு புறம் உள்ளது. இந்த சன்னிதியில் இருந்துதான் முதல் பூஜையை தொடங்குவார்கள்.
ராமேஸ்வர யாத்திரையில் மணலில் மூன்று சிவலிங்கம் பிடித்து, அதை வேணி மாதவர், பிந்து மாதவர், சேது மாதவர் என பூஜிப்பார்கள். சேது மாதவரை கடலில் கரைத்து விட்டு, பிந்து மாதவரை தானம் செய்துவிட்டு, வேணி மாதவரை எடுத்துச்சென்று பிரயாகையில் உள்ள திரிவேணியில் கரைப்பார்கள்.
சிலர் பிந்து மாதவரை காசியில் கங்கையில் கரைக்கலாம் என்பார்கள். அது அவரவர் விருப்பம். ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை காசியில் இருந்து எடுத்து வந்ததால், பிந்து மாதவரை காசியில் கரைக்கும் பழக்கமில்லை என்பது பெரியோர்கள் கருத்து.
காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டதும், மீண்டும் ராமேஸ்வரம் பிரயாகையில் எடுத்த புனித நீரைக் கொண்டு ராமநாதரை அபிஷேகம் செய்து யாத்திரையை பூர்த்தி செய்வார்கள்.
கூடுமானவரை பிரயாகையில் இருந்து எடுத்து வரும் நீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து வராமல், பித்தளை சொம்பில் எடுத்து வருவது உத்தமம். ராமேஸ்வரத்தில் தொடங்கி பின் ராமேஸ்வரத்தில் இந்த காசி யாத்திரை முடியும்.
- பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
- மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரூ.535 கோடி மதிப்பில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் பணிகள் முடிவடைந்து, பாலத்தின் நடுவே செங்குத்து தூக்கு பாலத்தை வெற்றிகரமாக தூக்கி, இறக்கி சோதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாம்பன் புதிய ரெயில் பாலம் வழி யாக மண்டபம்-ராமேசு வரம் இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மண்டபத்திலிருந்து ஒரு என்ஜினுடன், காலியான 17 சரக்கு பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ராமேசுவரத்திற்கு சென்றது. முதலில் 30 கி.மீ. வேகத்தில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ. வேகம், 60 கி.மீ. வேகம் அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம்-ராமேசுவரம் இடையே மின்சார ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார ரெயில் இயக்க அமைக்கப்பட்ட மின்கம்பங் களில் மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் தற்போது பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது புதிய பாலத்திலிருந்து பாம்பன் வரையிலுமான புதிய தண்ட வாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
விரைவில் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில் புதிய ரெயில் பாலம் ஆய்வு நிறைவு அடைந்ததும், புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவது குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சக்திக்கு மீறி செய்யும் தானம் விஷத்திற்கு சமம்.
- கடமைக்காக செய்யும் தீர்த்த யாத்திரையால் எந்த பலனும் கிடைக்காது.
காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை.
ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.
காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு.
ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.
மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும்.
அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.
கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும்.
சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.
ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:
ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும்.
இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது.
ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்).
மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது.
வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து.
ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்.
கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம்.
பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.
வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.
விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.
ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.
அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.
பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது.
தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம்.
ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும்.
தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.
- தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர்.
மண்டபம்:
அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திகோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆடி, தை மற்றும் புரட்டாசி அமா வாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை விட புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய பட்சம் அமாவாசையில் நம் முன்னோர்கள் மட்டுமல்லாது, மறைந்த நமது நண்பர்கள், குருமார்கள் மற்றும் வளர்ப்பு பிரா ணிகள் ஆகியோருக்கும் திதி கொடுத்து பிதுர் பூஜை செய்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது.
ஆவணி மாத பவுர்ண மிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசி களுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விக ளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம் பிக்கை.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன் னோர்களின் ஆத்ம சாந்திக் காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன் னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக் தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக் தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 733 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
- கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை.
- அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நாட்டுப்படகு ஒன்றில் மிதந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகு மற்றும் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரித்ததில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த பன்னீர்ச்செல்வம் என்பவரின் காணாமல்போன நாட்டுப்படகு என்பது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன நாட்டுப்படகில் ஆண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மண்டபம்-பாம்பனை இணைக்கும் புதிய ரெயில் பாலம்.
- பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்பாலம் அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன்படி ரூ.545 கோடி மதிப்பில் மண்டபம்-பாம்பனை இணைக்கும் வகையில் பிரமாண்டமாகன புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. அடுத்த மாதம் திறக்கப்படும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பாம்பன் ரெயில் பாலத்தில் இன்று என்ஜின் மற்றும் 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 20 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
அப்போது பாலத்தின் நடுவே உள்ள தூக்குபாலத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதிய பாலத்தில் ரெயில் இயக்கியது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர்.
- நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, நீச்சல் பயிற்சியளித்து வருகின்றனர்., இப்பயிற்சி பெற்றவர்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநில ஆறுகள், மற்றும் கோவாவில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 பேர், கின்னஸ் சாதனை பதிவிற்காக, தற்போது கடலில் சாகச பயணம் மேற் கொண்டு வருகின்றனர்., இவர்கள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடலில் இருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை 604கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை துவங்கினர்.
இவர்கள் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்., அவர்களை தமிழ்நாடு மீனவ பேரவை தலைவர் அன்பழகனார் மற்றும் மாமல்லபுரம் மீனவ சபையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று காலை மீண்டும் கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர். நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.
- 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.
- சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து எஸ்.டி.ஏ.டி. அமைப்பின் சார்பில் 15 சிறப்பு குழந்தைகள் கின்னஸ் உலக சாதனைக்காக சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ நீந்தி செல்கின்றனர்.
இன்று (5-ந்தேதி) தொடங்கி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் (காலை 6 மணி முதல் மாலை 6 வரை) நீந்தி ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.
இன்று காலை இதற்கான தொடக்க விழா மண்டபத்தில் நடந்தது. மண்டபம் பேரூராட்சி சேர்மன் ராஜா குடியரசைக்கு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 15 சிறப்பு குழந்தைகளும் கடலில் இறங்கி நீந்த தொடங்கினர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சிராஜுதீன், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் அன்பழகனார் கூறுகையில், கின்னஸ் சாதனைக்காக 15 சிறப்பு குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
கடலில் நீந்தும் குழந்தைகளுக்காக 5 படகுகள் பாதுகாப்பாக செல்லும். அவர்களுடன் 8 பயிற்சியாளர்கள் செல்வார்கள். 11 நாட்கள் கடலில் நீந்தும் குழந்தைகள் வருகிற 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்வார்கள் என்று கூறினார்.
- பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
- அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.
ராமேசுவரம்:
ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.
4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்