என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Raw materials"
- நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
- கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மே மாதத்திற்கான நூல் விலை மாற்றம் இல்லாமல் கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான (மே) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.
இதில் கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 30 எண்ணுக்கு அதிகமான நூல் வகைகள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத விலையில் குறைப்பு இல்லை என்றாலும் நடப்பு மாதத்தில் விலை ஏறாமல் இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.
இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
- தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
நம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.
ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள் ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
மினரல் வாட்டர்- 4 லிட்டர்
பேக்கிங் சோடா - 100 கிராம்
சிட்ரிக் அமிலம் - 50 கிராம்
வினிகர் - 250 மி.லி.
சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மிலி,
சோடியம் லாரில் ஈதர் சல்பேட்- 100 .46.
லெமன் கிராஸ் அரோமா எண்ணெய்- 25 மிலி
செய்முறை
பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்க வேண்டும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்த கரைசலில் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும்.
நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நன்றாக முடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம்.
தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது. தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்து கொள்ளலாம்.
- பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்போது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் 2 வகையானது .முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழிவகை. பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்தநிலையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் கறிக்கோழி நுகர்வு குறைந்து தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை125 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 96 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல், ரூ. 100 வரை செலவாகும் நிலையில் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து கறிக்கோழி பண்ணையாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மழை குறைவு, ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம் . இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை.nபண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலா ளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். கடந்த சில வாரங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மற்றும் தீவன தட்டுப்பாடு, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ.100 வரை செலவாகும் நிலையில் புரட்டாசி மாத நுகர்வு குறைவு, விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கறிக்கோழி உற்பத்தியை சுமார் 25 சதவீதம் வரை குறைத்துள்ளோம். நுகர்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவிற்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படும்.
கோழித் தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் கிலோ ரூ.17க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.24க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோள விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம்,போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. உதாரணமாக பீகாரில் இருந்து மக்காச்சோளம் கொண்டுவர ஒரு கிலோவிற்கு ரூ. 4 செலவாகிறது. பல்லடத்தில் ரெயில் நிலையம் இல்லாததால், திருப்பூர் ரெயில் நிலையத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை பல்லடம் கொண்டு வர டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதனைத் தவிர்க்க மத்திய அரசு பல்லடம் வழியாக ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் பல்லடத்திலிருந்து கறிக்கோழி, கறிக்கோழி தீவனங்கள், காடா ஜவுளிகள், பனியன்கள், விவசாய பொருட்கள் என ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் சாலை வழி போக்குவரத்தை நம்பியே உள்ளதால், கால நேரமும், போக்குவரத்து செலவும் அதிகமாகிறது. எனவே பல்லடத்தில் ரெயில் நிலையம் அமையுமானால், இன்னும் ஏற்றுமதியில் சாதிக்கலாம். இதற்கிடையே கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.50 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன்,லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கோழி மருந்துகள் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மின்கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் தென்னை, மற்றும் வெங்காயம்,தக்காளி போன்ற காய்கறிகள் ஆகியவற்றையே உற்பத்தி செய்கிறார்கள். இதனால் ஒரு சில நேரங்களில் லாபம் கிடைத்தாலும் பெரும்பாலும் விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இவர்கள் மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏனென்றால் மாதம் தோறும் கறிக்கோழி தொழிலுக்கு சுமார் 2 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் டன் மட்டுமே மக்காச்சோளம் கிடைக்கிறது. இதனால் கர்நாடகா, ஆந்திரா பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்கின்றோம். இதனால் எங்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் விலை அதிகரிக்கிறது. 1 ஏக்கர் நெல் பயிரிடும் தண்ணீரில் 10 ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடலாம். எனவே தமிழ்நாட்டில் மக்காச்சோள விவசாயத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளிடமிருந்து அவற்றை நேரடியாக பெற்று கொள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது.
- கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஜவுளித்தொழில் வளர்ச்சியில் ஜவுளி உற்பத்தி மட்டுமல்ல, அதனை சார்ந்த பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதன்படி, அட்டை பெட்டி தயாரிப்பும் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஜவுளி மட்டுமல்ல அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது. குறிப்பாக பனியன் ஆடைகள், பின்னலாடைகள் பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.கோவை மண்டல அளவில் 400க்கும் அதிகமான அட்டை பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.
முக்கிய மூலப்பொருளாக காகித ஆலைகளிடம் இருந்து கிராப்ட் காகிதம் கொள்முதல் செய்யப்படுகிறது. காகிதத்தை பக்குவப்படுத்தி, அட்டையாக மாற்றுவதற்கு, ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருளுக்கு அடுத்தபடியாக எந்திரங்களுக்கான மின்கட்டண செலவும் மிகவும் அதிகமாகியுள்ளது. தற்போதைய மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு யூனிட் மின்சார கட்டணம் 7.20 ரூபாயாக இருந்தது தற்போது 11 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் ஊதியம், போக்குவரத்து என பல்வேறு செலவுகள் உயர்ந்து உற்பத்தி செலவு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே ஆர்டர் இல்லாத நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நஷ்டத்தை சமாளிக்க வேண்டிய அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர்கள் தண்டபாணி, சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்து ள்ளோம்.
கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் அட்டைப்பெட்டி விலையை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
+2
- தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செம்மண் செங்கல்களுக்கு பதிலாக கிராமபுறங்களில் அதிகளவில் தற்போது பிளை ஆஷ் பிரிக்ஸ் எனும் நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாகி வரும் உலர் சாம்பல் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் செங்கல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
- 4 மாவட்டங்களில் மட்டும் 192 நிறுவனங்கள் இந்த வகை செங்கலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரண்டை:
தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செம்மண் செங்கல்களுக்கு பதிலாக கிராமபுறங்களில் அதிகளவில் தற்போது பிளை ஆஷ் பிரிக்ஸ் எனும் நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாகி வரும் உலர் சாம்பல் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் செங்கல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
2 லட்சம் தொழிலாளர்கள்
இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 192 நிறுவனங்கள் இந்த வகை செங்கலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த நிறுவனங்களை சார்ந்து தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிகளில் அதிகளவில் இயங்கி வரும் பிளை ஆஷ் பிரிக்ஸ் நிறுவனங்களுக்கு தொழில் நலிவடைவதில் இருந்து காக்க தமிழக அரசு முனைப்பு காட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். இது குறித்து சுரண்டையை சேர்ந்த சக்திவேல் பிரிகாஸ்ட் இன்டஸ்ட்ரீஸ் தயாரிப்பாளர் சக்தி வேல்ராஜ் கூறியதாவது:-
சரிவை நோக்கி
பிளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மற்றும் நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையங்களில் பயன்படுத்திய நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாக கிடைத்த உலர் சாம்பல் எனும் மூலப்பொருள் சிறிய நிறுவனங்களுக்கும் தாராளமாய் கிடக்கும் சூழ்நிலை இருந்து வந்தது.
அதன் பின்பு பல்வேறு காரணங்களால் அந்த நடைமுறை தற்போது தடைபட்டு உள்ளதால் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் மூலப்பொருட்கள் மொத்தமாக கிடைத்து விடுகிறது. அப்படி இல்லை என்றாலும் உலர் சாம்பல் மூலப் பொருட்கள் கடலில் கொட்டப்படுகிறது.
இந்த பிளை ஆஷ் பிரிக்ஸ் வகை செங்கல்கள் இயற்கைக்கு உகந்ததாகவும், தரமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியில் இருந்து கழிவு பொருளாய் கிடைக்கும் உலர் சாம்பல்களை ஈ- டெண்டர் மூலம் ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து மத்திய- மாநில அரசுகள் வழங்கி வருவதால் அதனை முறைப்படுத்திட தமிழக அரசும் மத்திய அரசும் முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.
- கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் மகாபலிபுரம், காஞ்சிபுரம், சேலம், திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசி, நாமக்கல், பழனி, ஓசூா், திருவண்ணாமலை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்புவரை 126 கலைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கலைக்கூடங்களில் 1,800க்கும் மேற்பட்ட சிற்பிகள் பணியாற்றி வந்தனா். இந்த கூடங்களில் இருந்து முருகன், விநாயகா், அம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் மட்டுமின்றி பெரிய உணவகங்களில் அழகுக்காக வைக்கப்படும் ஆண், பெண் சிலைகள், வீட்டு உபயோகத்துக்காக அம்மிக்கல், குளவிக்கல், ஆட்டாங்கல் போன்றவையும் செதுக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செதுக்கப்படும் சிலைகளை காட்டிலும் திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் செதுக்கப்படும் சுவாமி சிலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. இங்குள்ள கலைக்கூடங்களில் குறைந்தபட்சம் அரை அடியில் இருந்து அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.
மூலப்பொருட்களின் விலை 60 சதவீதம் உயா்வு:
திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு பிரச்சினைகளால் 30க்கும் மேற்பட்ட கலைக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் மூலப்பொருட்கள் விலை உயா்வாகும். இந்த கலைக்கூடங்களுக்கு முன்பு வரையில் ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து செலவும் அதிகரிப்பு :
நாமக்கல் மாவட்டம் கொண்டம்பட்டி, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டத்தில் மயிலாடி ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே சிலை வடிப்பதற்காக கற்கள் கொண்டுவரப்படுகின்றன. சிலை வடிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக விலையும் சுமாா் 60 சதவீதம் உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக போக்குவரத்துச் செலவும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து திருமுருகன்பூண்டி சிற்பக் கலைஞா்கள் சங்க (அவிநாசி) தலைவா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: - கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த தொழில் சற்று சரிவை சந்தித்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில் கல்குவாரிகள் மூடப்பட்டு வருவதால் மூலப்பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கற்களை அதிக விலை கொடுத்து வாங்கிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கன அடி கல்லை ரூ.300க்கு வாங்கினால்கூட பணிக்கூடத்துக்கு எடுத்துவருவதற்கு ரூ.600 வரையில் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தக் கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு ஆா்டா்களும் இல்லை:
கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னா் சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுவாமி சிலைகளுக்கு ஆா்டா்கள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்றுக்கு பின்னா் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் வெளிநாட்டு ஆா்டா்களும் வருவதில்லை. அதே வேளையில் சிற்பிகளுக்கான கூலியும் தற்போது உயா்ந்துள்ளது.
நன்றாக சிலை செதுக்க தெரிந்த 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 வரையும், 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், உதவியாளா்களுக்கு ரூ.1,100ம் கூலியாக வழங்க வேண்டியுள்ளது. இந்த தொழிலுக்கு கண்பாா்வையும், உடல் உழைப்பும் அதிகமாக தேவைப்படுவதால் இளைஞா்கள் இந்த தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனா். இதனால் தற்போது சிற்பிகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சிற்பிகளின் வாரிசுகள்கூட தற்போது பின்னலாடை உள்ளிட்ட வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்:
இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளது. சிற்பக்கலைக்கூடங்களுக்கான மின் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் உயா்ந்துள்ளதால் இந்த தொழிலை நடத்துவது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. ஆகவே உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், சிற்பக் கலைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு, மாதாந்திர ஊக்கத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.
- விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.
உடுமலை :
உடுமலை பகுதிகளில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் தென் மேற்கு பருவ மழையை தொடர்ந்து குறுவை, ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான விதை ரகங்கள் மற்றும் இடு பொருட்கள் வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவையான அளவு இருப்பு உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-
வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதை, 105 நாட்கள் வயதுடைய ரகம் (கோ51) , 110 நாட்கள் வயதுடைய ஏடிடி (ஆர்) 45 ரகங்களும், 130 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட விஜிடி (வைகை டேம்) மற்றும் பிரியாணி தயாரிப்பு ஏற்ற வாசனை நெல் விதைகளும் தேவையான அளவு இருப்பு உள்ளது.மானிய விலையில் வழங்கப்படும் இந்த நெல் ரகங்களை வாங்கி, விவசாயிகள் பயன் பெறலாம்.மேலும் 75 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட உளுந்து வம்பன், 110 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட நிலக்கடலை (வி.ஆர்.டி-8), மக்காச்சோளம் (சி.ஓ.எச்.,எம்-8), கொண்டைக்கடலை, (என்.பி.இ.,ஜி 49) போன்ற சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
அதோடு விதை நேர்த்தி செய்வதற்கு உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.மேலும் 25 சதவீதம் வரை உரச்செலவு குறையும். எவ்வளவுதான் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து பயிர்களுக்கு கொடுத்தாலும், நுண்Èட்டஉரமிடுதல் மிகவும் அவசிய தேவையாகும்.நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், தென்னைக்கு ஏற்ற நுண்Èட்ட உரங்கள், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பர், போரான் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட நுண்Èட்ட உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்