என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sachin tendulkar"

    • நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
    • சச்சின் டெண்டுல்கரை சந்தித்து நடிகர் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    சூர்யா - சச்சின் டெண்டுல்கர்

    சூர்யா - சச்சின் டெண்டுல்கர்

    இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
    • ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும்.

    மும்பை:

    2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் தேதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார். இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர்.

    ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    • சச்சின் தெண்டுல்கர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை சந்தித்தார்.
    • மும்பை சென்ற பில்கேட்ஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசை சந்தித்தார்.

    மும்பை:

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பை சென்ற பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாசை சந்தித்தார்.

    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து சச்சின் டுவிட்டர் பதிவில், நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள். உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளைப் பகிர்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்கள் நுண்ணறிவுக்கு நன்றி பில்கேட்ஸ் என தெரிவித்துள்ளார்.

    • 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக சிலை இருக்கும்.
    • ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தெண்டுல்கரின் முழு உருவசிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை வருகிற ஏப்ரல் 24-ந்தேதி கொண்டாட உள்ளார். அவருக்கு நினைவு பரிசாக இருக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டியின்போது (மார்ச் 31-ந்தேதி முதல் மே 28-ந்தேதி வரை நடக்கிறது) சிலையை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

    ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறும் போது, 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக இந்த சிலை இருக்கும்.

    இதுகுறித்து அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம் என்றார்.

    இதுகுறித்து தெண்டுல்கர் கூறும்போது, இது எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்கேதான் தொடங்கியது. நம்ப முடியாத நினைவுகளுடன் கூடிய பயணங்களை நினைக்கும் இடம் இது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தருணம் என்பது 2011-ம் ஆண்டு இந்த மைதானத்தில் உலக கோப்பையை வென்றதுதான். நான் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியும் இந்த மைதானத்தில்தான். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

    ஏற்கனவே வான்கடே மைதானத்தில் தெண்டுல்கர் பெயரில் பெவிலியன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று ஷேன் வார்னேவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
    • ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன்.

    மும்பை:

    கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மற்றொரு ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அவர் குறித்த நினைவுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அதில், களத்தில் மறக்க முடியாத ஆட்டங்களை நாம் இருவரும் ஆடியிருக்கிறோம். அதே அளவிற்கு களத்திற்கு வெளியிலும் நமது நட்புறவு தொடர்ந்தது. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வின் ஊடாக சொர்க்கத்தை அழகான இடமாக நீங்கள் மாற்றி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

    என சச்சின் தெரிவித்துள்ளார்.


    வார்னே குறித்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1992 முதல் 2007 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் வார்னே விளையாடினார். 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தமாக 1001 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றினார்.

    • இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது.
    • அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

    வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது கிரிக்கெட் திறமையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்பவான் தற்போது சமூக வலைதளங்களிலும் பிசியாக இருக்கிறார்.

    வெவ்வேறு வண்ணங்களில் மூடப்பட்டிருக்கும் உணவு தட்டை வைத்திருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட சச்சின், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்!" "என் தட்டில் என்ன இருக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா?" என்று ரசிகர்களிடம் கேட்டார்.


    இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது. அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 8-ம் தேதியும், சோட்டி ஹோலி அல்லது ஹோலிகா தஹனம் மார்ச் 7-ம் தேதியும் கொண்டாடப்படும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013-ல் விளையாட்டில் இருந்து விடைபெற்றார். 

    • என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரே எனக்கு பிடித்தமான வீரர் என பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.
    • முதல் பந்திலேயே 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினேன்.

    லாகூர்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்டில் 1205 நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சதம் அடித்தார். இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்டில் அவர் 186 ரன்கள் குவித்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் செஞ்சூரி அடித்து இருந்தார்.

    34 வயதான விராட் கோலி டெஸ்டில் 28-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் 46 சதமும், 20 ஓவரில் ஒரு செஞ்சூரியும் அடித்து இருந்தார். சர்வதேச போட்டிகளில் அவர் மொத்தமாக 75 சதம் (28+46+1) அடித்து டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    டெண்டுல்கர் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்து முதல் இடத்தில் உள்ளார். 1989 முதல் 2013 வரை 23 ஆண்டு காலம் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விராட் கோலி 110 சதங்கள் வரை குவிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரான சோயிப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அவர் இது தொடர்பாக கூறியதாவது:- 

    விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது. தற்போது அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி 110 சதங்கள் அடித்து டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை முறியடிப்பார். அவர் ஆக்ரோஷமாக ரன்களை குவிப்பார்.

    என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரே எனக்கு பிடித்தமான வீரர் ஆவார்.

    சச்சின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று சக வீரரிடம் ஒருமுறை சொன்னது நினைவு இருக்கிறது. அப்போது நாங்கள் கொல்கத்தாவில் ஆடிக் கொண்டிருந்தோம். முதல் பந்திலேயே 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினேன். எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. டெண்டுல்கர் பெவிலியன் திரும்பிய பிறகு மைதானம் பாதி காலியாகி விட்டது.

    இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    • சச்சின் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்.
    • சகி... நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை என சச்சின் கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல் புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களுடன் விளையாடி உள்ளார். கிளென் மெக்ராத், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், ஆலன் டொனால்ட், முத்தையா முரளிதரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் அக்தர் போன்றோர் அடங்குவர்.

    1999 சென்னை டெஸ்டில் சச்சினுக்கும் இந்தியாவுக்கும் மனவேதனையை ஏற்படுத்திய சக்லைனின் தூஸ்ரா பற்றி உலகத்திற்கே தெரியும். கண்காட்சி போட்டியின் போது கூட, சக்லைன் டெண்டுல்கரை 'தூஸ்ரா' பந்து வீச்சு மூலம் அவுட்டாக்கி உள்ளார். சக்லைன் மற்றும் சச்சின் போட்டி பற்றிய கதைகள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இதுவரை கேள்விப்படாத ஒரு கதை உங்களுக்காக.

    சச்சினுக்கு எதிரான தனது திட்டம் எவ்வாறு தோல்வியடைந்தது என்பதை வெளிப்படுத்தி உள்ளார் சக்லைன்.

    இது குறித்து கூறியதாவது:-

    எனக்கு ஒருமுறை சச்சினுடன் ஒரு சம்பவம் நடந்தது. நாங்கள் கனடா சென்றிருந்தோம். நான் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடிவிட்டு அங்கு வந்திருந்தேன். நான் அப்போது சிறுவன்.

    சச்சின் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். நான் அவருக்கு முதல் ஓவரை மிகவும் இறுக்கமாக வீசினேன். அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். நான் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினேன். அவர் என்னிடம் வந்து மிக அழகாக கூறினார். சகி... நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. மேலும் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லும் நபராக நீங்கள் தோன்றவில்லை. நீங்கள் மிகவும் ஒழுக்கமான நபர் என்று நான் நினைத்தேன். அவர் அதை மிகவும் அழகாகச் சொன்னார். அடுத்த 4 ஓவர்களுக்கு அவர் என்னை நம்பினார். அவருடைய வார்த்தைகள் என்னைத் தாக்கியது.

    இவை உத்திகள். யாராவது உங்களிடம் நன்றாகப் பேசினால், நீங்கள் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவீர்கள். சச்சின் அடுத்த 4-5 ஓவர்களில் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது அடித்துக் கொண்டே இருந்தார். நான் அவரை மதிக்க ஆரம்பித்தேன். அதற்குள் அவர் நன்றாக செட் ஆகிவிட்டார். விஷயங்கள் என் கையை விட்டுப் போய்விட்டன.

    பின்னர் மாலையில், நாங்கள் சந்தித்தோம் அப்போது நான் அவரிடம் 'நீங்கள் ஒரு புத்திசாலி' என்று கூறினேன். அதை கேட்டு அவர் சிரிக்கத் தொடங்கினார். அவர் என்னை எவ்வளவு நன்றாக டிராப் செய்தார். பேட்டால் அல்ல. ஆனால் அவரது வார்த்தைகளைப் பயன்படுத்தி மட்டுமே.

    என்று சக்லைன் கூறியுள்ளார்.

    • இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது.
    • இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

    தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நவீன கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்களுக்கு எல்லாம் முடிந்து விடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சச்சின் அளித்த பதில்கள்:-

    டெஸ்ட் கிரிக்கெட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது. அது பவுன்சர் டிராக், வேகமான டிராக், மெதுவான டிராக், டர்னிங் டிராக் மற்றும் ஸ்விங் டிராக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் தங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும் என கருதுவதை விட, அனைத்து சூழலுக்கும் தயார் ஆவதே சிறந்த முடிவாக இருக்கும். என்னை பொருத்தவரை எந்த மாதிரியான மைதானங்களில் விளையாடுகிறோம் என்பதே முக்கியம். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நம்பர் ஒன் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கும்போது போட்டிகள் 3 நாட்களில் முடிவடைவதில் எந்த பாதிப்பும் இல்லை.

    ஐ.சி.சி., எம்.சி.சி. உள்ளிட்ட கிரிக்கெட் சம்மேளனங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி நம்பர்-1 வடிவமாக தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்கின்றன. அதற்கு முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏதாவது இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

    தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிற்கும் ஒரு புதிய பந்தை பயன்படுத்துவதால், போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதையே நீக்கிவிட்டோம். போட்டியில் 40-வது ஓவரை வீசினாலும் அந்த பந்திற்கு அது 20-வது ஓவர் தான். ஆனால், பந்து 30-வது ஓவரில் தான் ஸ்விங் ஆகவே தொடங்கும். ஆனால், இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15-வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.

    50 ஓவர் போட்டியை தக்கவைத்துக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். .

    அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது. ஏனெனில் இரண்டு இன்னிங்ஸ் இடைவெளிகளுக்கு பதிலாக மூன்று இன்னிங்ஸ் இடைவெளிகள் இருக்கும்.

    என சச்சின் கூறினார்.

    • தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.
    • சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார்.

    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர். முதல் 2 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார்.

    தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (1994 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அனில் கும்ப்ளே (1996 ஆம் ஆண்டு), ஜாகீர் கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017 - 2019) ஆகியோர் 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் 22-23 வயதில் இருக்கும்பொழுது டான் பிராட்மேன் என்னை அழைத்து அவரது பேட்டிங்கை போன்று இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார்.
    • 24 வருடங்கள் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது, டான் பிராட்மேன் கொடுத்த அறிவுரை எவ்வளவு முக்கியமானது என உணர வைக்கிறது.

    கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதன்மையானவராக உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நெருங்கிவரும் நிலையில், இன்றளவும் இவரது சாதனையை எவரும் நெருங்க முடியவில்லை.

    சச்சின் டெண்டுல்கரின் காலகட்டத்திற்கு முன்பு டான் பிராட்மேன் தலைசிறந்த வீரராக பார்க்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கரை பலமுறை அழைத்து டான் பிராட்மேன் பேசியுள்ளார். ஆனால் சச்சினின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையின்போது, தான் பிராட்மேன் அழைத்து கூறிய சில அறிவுரைகள், பல வருடங்கள் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியதாக சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

    டான் பிராட்மேன் குறித்த ஆவணப்படம் தயாராகி வருகிறது. அதற்காக டான் பிராட்மென் குறித்த நினைவுகளை சச்சின் பகிர்ந்து கொண்டார். 1990-களின் ஆரம்ப கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் குறித்து தான் பிராட்மேன் கூறியதாவது:

    "நான் ஓய்வுபெற்ற பிறகு, எனது ஆட்டத்தை மீண்டும் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் விளையாடியதை பலமுறை பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட எனது ஆட்டத்தை போன்று இருந்தது. அப்போது எனது மனைவியை அழைத்து பார்க்கச் சொன்னேன். அவரும் அப்படியே இருக்கிறது என்றார். சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கில் அவ்வளவு நேர்த்தி, ஆக்ரோஷம் மற்றும் சிறந்த அணுகுமுறை இருக்கிறது. வைத்த கண் எடுக்காமல் பார்க்க வைக்கிறார்." என்று கூறினார்.

    இதனை நினைவுபடுத்தி பேசிய சச்சின் டெண்டுல்கர், "நான் 22-23 வயதில் இருக்கும்பொழுது டான் பிராட்மேன் என்னை அழைத்து அவரது பேட்டிங்கை போன்று இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார். அதைப்பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அவர்களது குடும்பத்தினரிடம் விட்டுவிடுகிறேன்.

    என்னுடைய ஆரம்பகால கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஒருவர் இப்படி அழைத்துப் பேசி அறிவுரைகள் கூறியது அடுத்த பல வருடங்களுக்கு கடினமாக உழைக்க வேண்டும். இன்னும் நிறைய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று உணர வைத்தது. மேலும் என்னுடைய கிரிக்கெட்டை அவர்கள் பார்க்கிறார்கள் மற்றும் அதற்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கும் போது எனக்குள் ஒருவிதமான மகிழ்ச்சியும் இருந்தது.

    அனைவருக்கும் இதுபோன்று கிடைத்திடாது. 24 வருடங்கள் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது, டான் பிராட்மேன் கொடுத்த அறிவுரை எவ்வளவு முக்கியமானது என உணர வைக்கிறது. பலரும் எனது கிரிக்கெட்டுக்கு உதவினார்கள். அதில் பிராட்மேனுக்கு முக்கிய பங்குண்டு.

    என்று சச்சின் டெண்டுல்கர் பேசினார்.

    • நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள்.
    • ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர்.

    ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரைகளை வழங்கினார்.

    23 வயதான அர்ஜுன், ஒரு ஆல்-ரவுண்டர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய அவர், இரண்டு ஓவர்களை வீசினார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், இரண்டு ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

    இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    அர்ஜுன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கிரிக்கெட் வீரராக உங்களின் பயணத்தில் இன்னொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையாக, உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ஒருவராக, விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து அளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும்.

    நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!" என்று அந்த டுவிட்டில் சச்சின் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

    ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர். டெண்டுல்கர் 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு ஆண்டுகள் விளையாடினார்.

    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியில் அர்ஜுன் முதல் முறையாக 2021 ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×