என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sankaraiah"
- சங்கரய்யாவின் மறைவையொட்டி அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
- ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா 102 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்த தகவலை கேள்விபட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு சங்கரய்யா உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக் கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சங்கரய்யாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று காலை 10.30 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வழிநெடுக பொதுமக்கள் ஏராளமானோர் அவரது உடலை பார்த்து வணங்கினார்கள்.
அடையாறு பணிமனை அருகே பேரணி வந்தபோது கம்யூனிஸ்டு இயக்க தோழர்கள் செஞ்சட்டை பேரணியாக செங்கொடி ஏந்தி நடந்து வந்தனர்.
இந்த பேரணியில் கம்யூனிஸ்டு இயக்க தலைவர்களுடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், இந்துராம், உள்ளிட்ட ஏராளமானோர் நடந்து சென்றனர்.
இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானம் சென்றடைந்ததும் சங்கரய்யா உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் அவரது குடும்பத்தினர் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், அசோக் தவாலே, கேரள மாநில செயலாளர் கோவிந்தன், மேற்கு வங்காள மாநில செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சங்கரய்யாவின் மறைவையொட்டி அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடியவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யா.
- இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது வரலாறு பின்வருமாறு:
சுதந்திரப் போராட்ட தியாகியும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று 3 தடவை தமிழக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ். என்று அன்போடு அழைக்கப்பட்ட கோவில்பட்டி நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1921-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி மகனாகப் பிறந்தவர் சங்கரய்யா.
மாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். போலீசாரின் தடியடிகளையும் எதிர்கொண்டார். தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திரப் போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்திய சிறப்பு அவருக்கு உண்டு. 1938-ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை தொடங்கினார்.
அதன்பின் 1939-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1941-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்துக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
கம்யூனிஸ்டு கட்சியில் 1943-ல் மதுரை மாவட்ட கம்யூனிஸ்டு செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1964-ல் உருவானபோது இருந்த 36 முக்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 1995- 2002-ம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார்.
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தார். தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.
கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் பற்றி மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயும் அதை நிறைவேற்றி காட்டினார்.
1997-ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, 1998-ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தினார்.
தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்கிறார். சிறை வாழ்க்கையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் நட்பு கொண்டார்.
அதேபோல சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி மற்றும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கம் கொண்டவர்.
இவருக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. இந்த விருதை தமிழக அரசு அறிமுகப்படுத்தியபோது முதன்முதலாக அந்த விருதை 2021-ல் சங்கரய்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தியாகி சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
- சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை:
மறைந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
தகைசால் தமிழர்- முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.
மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா. அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று முதல் 'தகைசால் தமிழர்' விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு! விருதோடு கிடைத்த பெருந்தொகையைக் கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யாவின் மாண்பால் நெகிழ்ந்து போனேன்.
தோழர் சங்கரய்யா ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து நினைவு கூரத்தக்க பல பணிகளை ஆற்றியவர். தலைவர் கலைஞரின் உற்ற நண்பராக விளங்கிய சங்கரய்யா, தலைவர் கலைஞர் நிறைவுற்றபோது, அவரது இறுதிப்பயணத்தைக் கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக்குமான நட்பைப் பறைசாற்றியது!
இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் அதன் பின்னர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிலுமாக இருந்து அவர் நடத்திய போராட்டங்களும், தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும்.
பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்.
தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதிவாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா. சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யாவின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.
சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- மூத்த தலைவரான சங்கரய்யா உடல்நல குறைவால் இன்று காலமானார்.
- தியாகி சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தியாகி சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் பற்றி மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயும் அதை நிறைவேற்றி காட்டியவர்.
- 1997-ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, 1998-ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தியவர்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது102). சுதந்திர போராட்ட தியாகியான இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த என்.சங்கரய்யா கடந்த சில நாட்களாக சளி-இருமலால் அவதிப்பட்டு வந்தார்.
உடனடியாக அவரை நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அவர் மூச்சு விட சிரமப்பட்டதால் செயற்கை சுவாச கருவி பொருத்தி அவருக்கு சிகிச்சை மேற்கொண்டனர். டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 102.
அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.
சங்கரய்யா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
- மூத்த தலைவரான சங்கரய்யா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (102). இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார்.
இதனால் அவரது குடும்பத்தினர் அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி அவருக்கு சீரிய முறையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
- ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி சங்கரய்யாவுக்கு சீரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- கட்சித்தொண்டர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது 102). இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டார்.
இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி அவருக்கு சீரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவருக்கு 102 வயது ஆவதால், டாக்டர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்த்து சங்கரய்யாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர் உடல்நலம் தேறி, நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கட்சித்தொண்டர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
- இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான்.
- தவறு செய்கிறபோது அந்தந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது.
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கையை உருவாக்கிய பெருமை தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் இங்கிருந்து சென்று 200 ஆண்டுகள் ஆகிறது. அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக இலங்கை அரசு மலையகத் தமிழர்களுக்காக ஒரு விழாவினை நடத்துகிறது. இந்த விழாவில் நானும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள இருக்கிறோம்.
சங்கரய்யா ஒரு மிகப்பெரிய தலைவர். அவருடைய சித்தாந்தத்தில் உறுதியானவர். தமிழக மக்களின் நலனுக்காக போராடியவர். சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நிலைப்பாடு. இது தொடர்பாக அனுப்பப்பட்டு இருக்கிற கோப்புகளை பற்றி எங்களுக்கு தெரியாது. எங்களுடைய நிலைப்பாடு சங்கரய்யாவுக்கு நிச்சயமாக கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.
சாதி என்ற நச்சு பரவுவதற்கு நாமே காரணமாக இருந்திருக்கிறோம். நெல்லையில் நடைபெற்ற அந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். மனிஷ் சிசோடியாவின் கைதைப் பொறுத்தவரை உரிய ஆவணங்களோடு தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு கைது செய்தது.
தவறு செய்கிறபோது அந்தந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் பா.ஜ.க. மட்டும் தான் அப்படி நடவடிக்கை எடுக்கிறது என்று சொல்வது தவறு.
இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான். நேற்று நடிகர் விஜய் பேசியதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பழையவர்களே 30,40 வருடம் இருந்திருக்கிறார்கள். புதியவர்கள் வரவேண்டும் அவர்களுடைய கருத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எல்லோரையும் மக்கள் பார்க்கட்டும். அதில் யார் சிறந்தவர் என்று முடிவு செய்து கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- கடந்த 2 ஆண்டுக்கு முன் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கவுரவித்தது.
சென்னை:
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுக்கு முன் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்