என் மலர்
நீங்கள் தேடியது "Sea storm"
- ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின.
- வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
அந்த பகுதியில் உள்ள தெருக்களில் கடல் நீர் புகுந்ததுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தனர்.
மேலும் சிலர் கடல் நீர் வீட்டிற்குள் செல்லாமல் இருக்கும் வகையில் வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலையிலும் அழிக்கால் பிள்ளை தோப்பு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. லெமூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தற்காலிக கடைகள் வரை வந்து சென்றன. இதனால் அங்குள்ள கடைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள நுழைவாயில் மூடப்பட்டிருந்ததுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.
தேங்காய் பட்டினம், இரவிபுத்தன் துறை, வள்ளவிளை, பூத்துறை, தூத்தூர் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள வீடுகள் வரை வந்து சென்றன. அந்த பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீதும் வேகமாக மோதியது. இதனால் கடற்கரையில் உள்ள மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் சொத்தவிளை, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
- வழக்கம் போல பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. எனினும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கம் போல் ஏராளமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர்.
அப்போது அங்கு புனித நீராடிய காரைக்குடியை சேர்ந்த சிவகாமி (வயது50), சென்னையை சேர்ந்த கீர்த்தனா (40) என்ற 2 பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து 2 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக கடலுக்குள் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.