search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivdas Meena"

    • சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம்
    • புதிய தலைமைச் செயலாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.
    • அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு சில நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களை அழைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் 4 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

    11-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    13-ந்தேதி கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜூன் 15-ந்தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்ட கலெக்டர்களும், 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.

    குடிநீர் பிரச்சனை, பட்டா மாறுதல், சாலை சீரமைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    • மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
    • மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் குறித்து தியாகராய நகரில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

    மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக உள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    • மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.
    • புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இப்போது மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் `கல்லூரி கனவு 2024' நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

    சென்னையில் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அப்போது முருகானந்தம் பேசியதாவது:-

    அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் காரணமாக மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்து உள்ளது. வறுமையின் காரணமாக பெண்கள் உயர் கல்வி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. பஞ்சாலைகளில் பெண்கள் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலை இருந்தது.

    ஆனால் இப்போது புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கபடுகிறது. அதன் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நாங்கள் படிக்கும்போது விழிப்புணர்வு தெரியாது. இப்போது அதிக விழிப்புணர்வு அரசால் ஏற்படுத்தபடுகிறது. உயர் கல்வியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது மாணவ-மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுமைப்பெண் திட்டம் போல, இந்த ஆண்டு முதல் உயர் கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ப்ளஸ் டூ முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது. இதே போல் ஜூலை மாதம் முதல், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நிகழ்ச்சி இன்று திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

    நாளை திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடு துறை, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 11-ந் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர் மாவட்டங்களில் 13-ந் தேதி ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

    • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
    • நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    சென்னை:

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர்.
    • சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம்:

    பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப் படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.

    • கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை
    • நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுகுறித்து கூறியதாவது:-

    கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    18ம் தேதி காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

    காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    திருச்செந்தூரில் 92 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கணிப்பை விட கூடுதல் மழை பெய்தததால் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

    மீட்பு பணிகளில் 1,350 பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    160 நிவாரண முகாம்கள் அமைப்பு, சுமார் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று மட்டும் முகாம்கள் தவிர 34 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    9 ஹெலிகாப்டர்கள் மூலம் கிராமங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 13,500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வடிந்த பகுதிகளில் இதர சேவைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும்.

    தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 18 சதவீத மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 60 சதவீத இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வடிய வடிய மின் விநியோகம் வழங்கப்படும்.

    திருச்செந்தூரில் இன்று காலை அதிகனமழை பதிவானது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது.

    18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

    சென்னையில் 77 இடங்களில் மின் தடை நீடிக்கிறது. மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.

    சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும்.

    நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஏரிகள் பாதிக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நெடுஞ்சாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் நீங்கிய பிறகு சேத மதிப்பு மறு ஆய்வு செய்யப்படும்.

    திருப்புகழ் கமிட்டி அடிப்படையில் குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    முன்பு தண்ணீர் தேங்கும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கும் நிலை இல்லை.

    மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். விரைவில் மத்திய குழு வரும் என தெிர்பார்க்கிறோம்.

    மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 1516.82 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில், அமைக்கப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகளை நேற்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொண்டு வரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குடிநீரை, விநியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது., இப்பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளுக்கு வழங்கப்படும்.

    இதனால் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் வைதேகி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
    • கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார்.

    நகராட்சி நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

    கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதே நாளில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஓய்வு பெறுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? புதிய டி.ஜி.பி. யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆனாலும் இந்த பட்டியலில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர்கள் உள்ளதால் அதில் ஒருவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அறிவிப்பார்.

    அதே போல் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    ×