என் மலர்
நீங்கள் தேடியது "single wild elephant"
- ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.
அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.
யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.
யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.
மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.
- யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், மான், காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை சிறுமுகை வனச்சரகத்துக்கு இடையே அமைந்து உள்ளதால், வனவிலங்குகள் இந்த ரோட்டை கடந்து வனத்தின் மறுபுறம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலைகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே, ஒற்றை காட்டு யானை சாலையோரம் உலா வந்தது.
இதனை கண்ட வாகனஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வனத்துறைக்கு தகவலளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.
இருப்பினும் அந்த யானை 2-வது வளைவு அருகே சென்று நீண்ட நேரம் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்து, தங்களின் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்.
சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. அதேபோல யானை அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.