search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103191"

    கோவை அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஊராட்சி செயலாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லித்துறை ஊராட்சியில் செயலாளராக மோகன் ராஜ் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜடையம் பாளையம் ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இந்த ஊராட்சியில் கலெக்டரின் உத்தரவின்றி தன்னிச்சையாக கணினி உதவியாளராக ஒரு பெண்ணை பணி நியமனம் செய்துள்ளார்.

    மேலும் பணி நேரத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு வந்தது. கலெக்டர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் மோகன்ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முறைகேடு சம்பந்தமாக காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் குறித்து அவர்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் பஞ்சாயத்து, சமயன்குடிக்காடு, ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 39). இவர் வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயமாலா (35). அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கிராம கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி வைத்து முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெற்றது என்றும், அதில் ஏதும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு பிரிவினர் ஒரு பிரிவினரிலிருந்து ஒரு சாராரை மட்டும் சேர்த்துக்கொண்டும் பலரை சேர்க்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ நாளன்று ஜெயமாலா தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த செல்லையன் மகன்கள் பழனிவேல், ஆறுமுகம், சுமுக்கன் மகன் சொட்டு என்கிற மதியழகன், சிங்காரம் மகன் காசி என்கிற காசிநாதன், வைத்திலிங்கம் மகன் அல்லிமுத்து, ராசு மகன் சேகர், சாமிக்கண்ணு மகன் குமார் மற்றும் மூவர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டின் உள்ளே நுழைந்து ஜெயமாலாவை தாக்கி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மற்றொரு பிரிவினர் தூண்டியதால்தான் தன்னை தாக்கியதாகவும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்துள்ளார்.

    இப்புகாரின் பேரில் ஒரத்தநாடு ஏட்டு ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜெயமாலா அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரத்தநாடு அருகே பெண்ணை 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்லம் அருகே வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்ணை போலீஸ் துணையுடன் பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகள் மீட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவரை அறையில் பூட்டி சிறை வைத்திருப்பதாக பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

    பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமல் இது பற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கவனத்திற்கு கொண்டுச் சென்றார். உடனே அவர் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்கும் படி அப்பகுதி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி கொல்லம் வழுதக்கால் பகுதி போலீசார் பெண் சிறை வைக்கப்பட்ட வீட்டை கண்டுபிடித்தனர்.

    அந்த வீட்டுக்கு பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமலுடன் போலீசார் சென்றனர். அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்றனர். அங்கு சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

    எலும்பும் தோலுமாக மெலிந்து காணப்பட்ட அந்த பெண்ணின் பெயர் லதா. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லதாவை தவிக்க விட்டு சென்று விட்டார்.

    இதனால் லதாவுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து லதாவின் சகோதரி அவரை வீட்டின் அருகே உள்ள அறையில் அடைத்து வைத்தார். கடந்த 20 ஆண்டுகளாக லதா அறையிலேயே தங்கி இருந்தார். தினமும் அவருக்கு ஒரு வேளை உணவு மட்டும் ஜன்னல் வழியாக கொடுக்கப்பட்டது.

    இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மீட்கப்பட்ட லதா பத்னாபுரத்தில் உள்ள காந்தி பவனில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட லதாவுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து தரப்படும் என்று மந்திரி ஷைலஜா கூறினார். இச்சம்பவம் குறித்து பெண்கள் கமி‌ஷன் அளித்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீட்கப்பட்ட லதாவின் மகன் தற்போது செருப்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    சேலத்தில் வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை ஒரு பெண் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்(வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நிவேதா(9), சரவணன்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் அந்த பகுதியில் 10 நாட்களாக ஒரு பெண் சுற்றி திரிந்தார். நேற்று அந்த பெண் ஜஸ்டின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிவேதாவை அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை மீட்டு அந்த பெண்ணை விரட்டி விட்டனர். இன்று காலை அதே பெண் ஜஸ்டின் வீட்டிற்கு சென்று நிவேதாவிடம் எனது குழந்தையை கொடு என்று கூறி அங்கு விளையாடிகொண்டிருந்த சரவணனை கடத்த முயன்றார்.

    இதனால் பயந்துபோன நிவேதா உறவினர்களிடம் தகவல் கூறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு குழந்தையை மீட்டு அந்த பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் யார் என்று தெரியவில்லை, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தனர்.

    தற்போது குழந்தை கடத்தல் சம்பவம் பல்வேறு பகுதிகளில் நடப்பதால், சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    சிங்காநல்லூர் அருகே கணவர் கண்டித்ததால் மனைவி மற்றும் 2 மகள்கள் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிங்காநல்லூர்:

    கோவை ஒண்டிப்புதூர் சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வீட்டோடு ஹார்டுவேர்ஸ் மற்றும் ஜவுளிகடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோதை ஹரிபிரியா (வயது 44). இவர்களுக்கு ஜனனி ஸ்ரீ (18), தர்ஷினி (15) என்கிற 2 மகள்கள் உள்ளனர். ஜனனிஸ்ரீ கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தர்ஷினி 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

    கோதை ஹரிபிரியா கடந்த சில நாட்களுக்கு தனது மூத்த மகளான ஜனனி ஸ்ரீக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இதனால் ஜனனி ஸ்ரீ அடிக்கடி தனது தோழிகளுடன் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மற்றும் மகளை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி கடைக்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த கோதை ஹரிபிரியா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து ஜனனிஸ்ரீ, தர்ஷினி ஆகியோருக்கு கொடுத்தார். பின்னர் தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கினர்.இரவு 10 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி மற்றும் மகள்கள் சாணிப்பவுடர் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    பரிசோதனை செய்த அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மீது பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ScottMorrison
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் வருகிற 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் பிரசாரம் செய்து வருகிறார்.

    பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் அல்பரி என்ற இடத்தில் கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரதமர் மாரிகன் தலை மீது முட்டையை வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை அவரது தலையில் உடையவில்லை. தரையில் விழுந்து நொறுங்கியது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அப்பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் அவர் எதற்காக அந்த காரியத்தில் ஈடுபட்டார் என்ற தகவலை வெளியிடவில்லை.



    அதே நேரத்தில் தனது அரசியல் எதிரிகள் இத்தகைய தாக்குதலில ஈடுபட்டதாக மாரிகன் தெரிவித்தார். #ScottMorrison
    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை முக்கிய பிரமுகர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டுவதாக வக்கீல் அருள் புகார் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வக்கீல் அருள் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், என்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் என்னிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார். மேலும் கட்சிக்கு அவப்பெயரையும், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்தியினை அவர் வெளியிட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, அந்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 4-ந்தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த உள்ளன. இதனால் பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூர் பாலியல் சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருபாலருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கிய 1952-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்களே அதிக அளவில் வாக்களித்து வந்தனர். எனினும் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நிலைமை மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் நடந்துள்ள தேர்தல்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான பிரன்னாய் ராய், தொரப் சொபரிவாலா ஆகியோர் ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இந்திய தேர்தலில் ஆண்-பெண் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1962 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான பாராளுமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், ஆண்களின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. தற்போது ஆண்களும், பெண்களும் சமமான பங்களிப்பை வழங்கி வருவதாக கூறியுள்ள ஆசிரியர்கள், எனினும் சில சட்டசபை தேர்தல்களில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.இது வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என அந்த புத்தகம் கூறுகிறது. அந்தவகையில் வருகிற தேர்தல் இந்திய பெண்களின் தேர்தலாக இருக்கும் எனவும் புத்தக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
    கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போரூர்:

    சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக்கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கோயம்பேடு 100 அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

    மற்றொரு சம்பவம்...

    பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.

    மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் பெண் ஒருவர், தனது முயற்சியில் ஒரு தொட்டியில் அதிக ரோஜாக்களை வளர்ப்பதில் லிம்கா சாதனை படைத்துள்ளார். #DelhiRosewoman #LimcaBookOfRecords
    புதுடெல்லி:

    மேற்கு டெல்லியில் வசந்த காலம் முன்னதாகவே துவங்கியுள்ளது. இதையடுத்து குதுப் விகார் பகுதியை சேர்ந்த மீனா உபத்யாய் என்ற பெண், ரோஜாப் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.    

    பொதுவாக ரோஜாக்களை வளர்க்க ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன், பரந்த நிலப்பரப்பும் தனிப்பட்ட பராமரிப்பும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ரோஜாவின் வளர்ச்சியும், அதனை பராமரிக்கும் விதம் கொண்டு வேறுபடும். எனவே இதனை பரவலாக அனைத்து இடங்களிளும் தொடர்ந்து வளர்ப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் ஒரே தொட்டியில் ஏராளமான ரோக்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார் மீனா.



    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 122 ரோஜாக்களை 14 இஞ்ச் மட்டுமே கொண்ட சிமெண்ட் தொட்டிக்குள் வளர்த்து, பராமரித்து வந்துள்ளார். அவரது இந்த சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இது குறித்து மீனா கூறுகையில், ‘சிறிய சிமெண்ட் தொட்டிக்குள் ரோஜாக்களை பராமரிப்பது எளிதான விஷயம் அல்ல. சில ரோஜா பராமரிப்பு அமைப்புகளை சந்தித்து ஆலோசனை கேட்டறிந்தேன். இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டேன். பொழுதுபோக்கிற்காக செய்ய ஆரம்பித்தது, நாளடைவில் அதுவே முக்கிய நோக்கமாக மாறியது. தினமும் 2 மணி நேரம் தொடர்ச்சியாக ஒதுக்க வேண்டும். தற்போது இந்த சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறியுள்ளார்.

    கோவை துடியலூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் திருடிய பெண்ணை சிசிடிவி காமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியில் மாநகராட்சி வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் செல்போன் கடைகள், துணி கடைகள், பிரவுசிங் ஷாப் உள்ளிட்ட பல கடைகள் உள்ளன. அங்குள்ள ஒரு துணிக்கடையில் நேற்று மதியம் துணி வாங்குவதுபோல் வந்த டிப் டாபான பெண் ஒருவர் அங்கு பணி புரியும் பெண் மற்றொரு வாடிக்கையாளரை கவனித்துக் கொண்டிருக்கும் வேலையில் அருகில் இருந்த துணிகளை எடுத்து பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

    பின்னர் அதிலிருந்து ஒரு துணியின் கவரை கழட்டி அதை கீழே வீசிவிட்டு துணியை மட்டும் எடுத்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டு அது தெரியாமல் இருக்க சேலை முந்தானையால் மூடும் காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி தெளிவாக பதிவாகி உள்ளது. அதன் பின் அந்த பெண் அங்கிருந்து சென்று விடுகிறார். இது குறித்து கடைக்காரரின் புகாரின் பேரில் துடியலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். #tamilnews
    புதுக்கோட்டை அருகே பெண்களை தாக்கிய திருமயம் ஒன்றிய செயலாளரை கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கி தி.மு.க. தலைமைக்கழகம் அறிக்கை விடுத்துள்ளது. #DMK
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரிலேயே அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவர் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன். இவரும் அதே பகுதியில் தேங்காய் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் கோவிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

    வாசுகி நடத்தி வரும் கடையால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக சிவராமன் கூறி வந்தார். எனவே அவரை கடையை காலி செய்யுமாறு அடிக்கடி கூறி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாசுகி மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன், சிவராமன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசுகியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை தடுத்த வாசுகிக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்கள் கவுரி உள்பட 3 பேரையும் தாக்கி விட்டு, வாசுகியின் கடையையும் சூறையாடினர். பட்டப்பகலில் பலரது முன்னிலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாசுகி, கவுரி உள்ளிட்ட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து திருமயம் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சரவணன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் ஒன்றிய கழக செயலாளர் பெ.சரவணன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK
    ×