என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுசீந்திரம்"
- தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா.
- 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வந்த குமாரகோவில் வேளிமலை முருகனுக்கு நாகர்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
- பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.
- பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர்.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில், பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது சுசீந்திரம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற தாணுமாலயசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் தொடர்பாக அத்திரி அனுசூயை கதை, இந்திரன் சாப விமோசனம் பெற்ற கதை, அறம் வளர்த்த அம்மன் கதை, கன்னியாகுமரி பகவதிஅம்மன்- தாணு (சிவன்) திருமணம் தடைப்பட்ட கதை என 4 கதைகள் உள்ளன. முதல் இரண்டு கதைகளும் புராணம் தொடர்புடையவை.
அறம் வளர்த்த அம்மன் கதை வட்டார சார்புடையது. திருமணம் தடைப்பட்ட கதை வாய்மொழியாக பேசப்படுகிறது. குழந்தைகளாக மாறினர்
பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர். வனவாசத்தின்போது ராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றார் என ராமாயணம் கூறுகிறது.
அத்திரியின் மனைவி அனுசூயை. இருவருக்கும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லை. இதனால் பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர். அப்போது இறைவன் அவர்களிடம் `யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். பொதிகை மலையின் அருகே ஞானகான வனம் உள்ளது. அங்கே நீங்கள் தவம் செய்து பலன் பெறுங்கள்' என்றார்.
அதன்படி இருவரும் ஞானகான வனம் சென்றனர். அந்த சமயத்தில் அத்திரி, இந்திரனின் வேண்டுகோளால் இந்திரலோகம் சென்றுவிட்டார். இதனால் அனுசூயை தனியே இருந்து தவம் செய்தாள். அவளைச் சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகள் (சிவன், விஷ்ணு, பிரம்மா) ஞானகான வனத்தில் மழையில்லாமல் ஆக்கினர். வனம் வறண்டது. தவம் செய்யக்கூட நீர் இல்லை. அனுசூயை கணவனின் கமண்டல நீரை ஞானகான வனத்தில் தெளித்தாள். மழை பெய்தது.
இப்படி இருக்கும்போது மும்மூர்த்திகள் அனுசூயையைச் சோதிக்க எண்ணி யாசகர்களாக அவரிடம் வந்தனர். அவள் வீட்டின் முன் நின்று யாசகம் கேட்டனர்.அவள் அவர்களை உபசரித்து வரவேற்றாள்.
அப்போது மும்மூர்த்திகள் அவளிடம், 'நீ ஆடையின்றி உணவு படைக்க வேண்டும்' என கட்டளை இட்டனர். இதை கேட்ட அனுசூயை தன் கற்பின் மகிமையால் அவர்களை குழந்தைகளாக்கி தொட்டிலில் கிடத்தினாள். இதையறிந்த மூன்று தேவிகளும் ஞானகான வனம் வந்து தவம் இருந்து அவர்களை மீட்டனர்.
அத்திரி-அனுசூயை வேண்டுகோள்படி மும்மூர்த்திகளும் சந்திரன், தாத்ரேய முனிவர், துர்வாசர் ஆகியோராகப் பிறந்தனர். இத்தகைய சிறப்புடைய தலம் சுசீந்திரம்.
சுசீந்திரம்
இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதையும் இந்த கோவில் தலபுராணத்துடன் தொடர்புடையது. அது கவுதமர், அகலிகை, இந்திரன் தொடர்பான கதை. ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. அகலிகைமேல் ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற ஞானகான வனத்திற்கு இந்திரன் வந்தான். அவனது தேர் ஞானகான வனத்தின் ஒருபுறம் நின்றது. அதுதான் இன்று தேரூர் என அழைக்கப்படுகிறது. ஐராவதம் யானை மருந்துவாழ்மலைக்கு வந்தது. அது தன் கொம்பால் தரையைக் கீறி ஆற்றை உண்டாக்கியது. அதுதான் கோட்டார் எனப்பட்டது.
இந்திரன் தவம் பலித்தது. தாணுமாலயன் அவன் முன் தோன்றினான். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற இடமே சுசீந்திரம் ஆயிற்று.
சுசீந்திரம் கோவில் இறைவியாக கருதப்படும் அறம்வளர்த்த அம்மனின் கதை ஒன்று உண்டு. சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணுமாலயன் கோவிலுக்கு வந்தாள். கோவிலை சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். இந்த நிகழ்ச்சி கி.பி. 1444-ம் ஆண்டு நடந்ததாக புராணக்கதை கூறுகிறது. இதன் நினைவாக இந்த கோவிலில் மாசிமாதம் திருக்கல்யாணம் நடக்கிறது.
கன்னியாகுமரி அம்மனை போலவே, மகிஷாசூரனை வதம் செய்து சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, 'முன்னுதித்த நங்கை அம்மன்' எனும் திருநாமத்தில் கோவில் கொண்டிருக்கிறாள். ரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவத்தை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான்.
ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்த பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையாகியிருந்தாள். ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்த பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான்.
அந்த உறவால் எருமை தலையுடன் மகிஷாசூரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக 'பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்' என வரம் பெற்றான்.
முன்னுதித்த நங்கை
அந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷாசூரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார். அதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிவப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.
பின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு மகிஷாசூரனை பராசக்தி வதம் செய்தாள். வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம்.
கவுதமரின் சாபம் நீங்க இந்திரன், 300 தேவகன்னியரை சாட்சியாக வைத்து வேள்வி செய்து பூஜித்தபோது அவர்கள் முன்பாக ஜோதி ரூபியாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் 'முன்னுதித்த நங்கை' என்று அழைக்கப்பட்டாள்.
முன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்திரி முனிவர், தனது மனைவி அனுசூயைதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயை தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயைதேவி.
மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர் முப்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும். ஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர்.
அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.
சுசி பீடம்
51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை `சுசி பீடம்' என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் அம்பிகையை `நாராயணி' என்றும், `அகோர தேவி' என்றும் போற்றுகிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்திரன் விரும்பிய இடமும், அம்பிகையின் பிருகுபீடம் என்று அழைக்கப்படும் சுசி பீடமும் தான் சுசீந்திரம் என்ற பெயர் உருவாக காரணமாக சொல்லப்படுகிறது.
- ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- ஆடி களப பூஜை நாளை தொடங்கி 30-ந்தேதி வரை என 13 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை 12 நாட்கள் களப பூஜையும், 30-ந்தேதி உதய அஸ்தமன பூஜை என 13 நாட்கள் நடைபெறுகிறது.
இதை யொட்டி தினமும் காலையில் கோவிலில் தாணுமாலய சுவாமிக்கும், திருவேங்கடவிண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு காலை 10 மணிக்கு மகாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கும், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கும் களப அபிஷேகம் நடைபெறுகிறது.
இதில் நறுமணத்துடன் கூடிய சந்தனத்துடன், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் ஆகியவை கலந்து தங்க குடத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து மாத்தூர் மடம் தந்திரி சஜித் களப பூஜை செய்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு களப பூஜை பிரசாதம், சிறப்பு தீபாராதனை காட்டப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஆடி கற்கடக ஸ்ரீ பலி விழா இன்று மாலை நடைபெறுகிறது.
- ஸ்ரீ பலி முடிந்த பிற்பாடு கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் நடைபெறும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் அன்று கற்கடக ஸ்ரீபலி விழா நடத்தப்படுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான ஆடி கற்கடக ஸ்ரீ பலி விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி மாலை 5.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவில் சுற்றுபிரகாரத்தில் மூன்று முறை ஸ்ரீபலி விழா நடக்கிறது.
ஸ்ரீ பலி முடிந்த பிற்பாடு கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயர் சாமியை காண தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிறப்பு பெற்ற ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்திற்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், மாதம் தோறும் ஆஞ்சநேயர் சாமிக்கு மூலம் நட்சத்திரத்தன்று வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதுபோல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது.
- பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில் அம்மன் தேர், சப்பரத்தேர், பிள்ளையார் தேர் என 3 தேர்தல் உலா வந்தன. 10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது.
அதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் சாமியும், அம்பாளும், பெருமாளும், இரு தட்டு வாகனத்தில் மேளதாளத்துடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர்.
முன்னதாக தெப்பக்குளத்தை சுற்றி உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலித்து கொண்டிருந்தது. ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை உலா வந்தது. தெப்பம் மூன்று முறை உலா வரும்போது மரபு படி வடம் பிடித்து இழுப்பது வழக்கம். அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேல தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். 3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்த போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விழாவையொட்டி பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தொப்பக்குளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வர் வீரநாதன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, தி.மு.க. வார்டு செயலாளர் அழகு தாமோதரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வள்ளியம்மாள், வீரபத்திரப்பிள்ளை, கதிரேசன், வசந்தி, நீலாவதி, சுரேஷ், தாணுமாலய பெருமாள், காசி, ஆனி எலிசபெத், கலைச்செல்வி, சுசீந்திரம் நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரர் மோகன்தாஸ், சுசீந்திரம் கோவில் குத்தகைதாரர்கள் மூர்த்தி, வடிவேல் முருகன், பக்த சங்கம் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர்.
தெப்ப திருவிழா முடிந்த பிற்பாடு சாமி, அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
- திருமால் மூம்மூர்த்திகளாய் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார்.
- இத்திருத்தலம் மும்மூர்த்தி தலம் எனும் சிறப்பை பெற்றது.
முத்திக்கொரு லோகம்பெரு மூவர்க்குயர் தேகம் சித்திக்கும் மெய்ஞ்ஞானம் அவர் சேமித்த நிதானம்பத்திக்குகெது மோகம்மது பாவித்திடு மேகம்சத்திக்கு அருள் அங்கு திகழ் தாணுச்சிவலிங்கம் தேவர்கள், முனிவர்கள், மூவேந்தர்கள் பணிந்து வணங்கி பெரும் பேறுபெற்ற தாணுமாலய பெருமானை கோவிலாக கொண்டது சுசீந்திரம் எனும் இத்திருத்தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றாலும் சிறப்பு பெற்று விளங்கும். சுசீந்திரத்தின் சிறப்பை ஸ்கந்த புராணம், பிரம்மாண்ட புராணம், கேரள சேத்திர மகாத்மியம், கன்னியாகுமரி ஸ்தலபுராணம், சுசீந்திரம் ஸ்தலபுராணம், சுசீந்தை பதிற்றுப் பத்தந்தாதி, சுசீந்தை மான்மியம் ஸ்தாணுஸ்தவம் போன்ற நூல்களால் அறிய முடிகிறது.
மும்மூர்த்தி தலம்
மகேந்திர கிரி மலையில் தவம் செய்து வந்த ஆக்கினேயன், பூர்ணானந்தகிரி, அமலானந்தன் போன்ற ரிஷிகள் தாணு நாத சாமியை வணங்கி, சாமியோடு இரண்டற கலந்தனர். தேரூரில் ஆலடி வீட்டில் பிறந்த அறம் வளர்த்தாள் எனும் நங்கை தாணுமாலய சாமி மீது கொண்ட அதீத பக்தியால் கி.பி.1444-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் நாளன்று தாணுலிங்கத்தில் ஐக்கியம் ஆனாள். அறம் வளர்த்தாள் சைவ சமயத்தில் ஓர் ஆண்டாளாக கொண்டாடப்படுகிறார்.
தத்த சம்ஹிதையில் தத்தாத்திரேயரின் அவதார தலங்களில் 16-வது அவதார தலமாக சுசீந்திரம் விளங்குகிறது. அத்ரி முனிவரும் அவருடைய மனைவி அனுசுயா தேவியும் குழந்தை வரம் வேண்டி திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டனர். திருமால் மூம்மூர்த்திகளாய் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார். திருமாலின் அருள் பாலிப்பால் அத்ரி முனிவரின் கைகளில் இருந்து துர்வாசரும், கண்களில் இருந்து சோமனும், நெற்றி கண்ணில் இருந்து மூம் மூர்த்தியான தத்தாத்திரேயரும் அவதரிக்கின்றனர். இதன் காரணமாகவே இத்திருத்தலம் மும்மூர்த்தி தலம் எனும் சிறப்பை பெற்றது.
தெப்பத்திருவிழா
சிவராத்திரி நன்னாளுக்கு பிறகு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த விழா காணும் தாணுநாத சாமிக்கு இந்த விழாவின் முடிவாக கொண்டு கொண்டாடப்படும் திருவிழாவே சித்திரை தெப்பத்திருவிழா ஆகும். இந்த திருவிழா பரணி நடசத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்தாம் நாளன்று தெப்பத்திருவிழாவில் நிறைவடைகிறது.
இத்திருக் கோவிலின் தெப்பக்குளம் 4 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமான உயரத்தை கொண்ட நீராழி மண்டபத்தை நடுவில் கொண்டு விளங்குகிறது. இத்திருக்குளம் தந்த நதி என புராணங்களால் அழைக்கப்படும் பழையாற்றின் சோழன்திட்டை அணையில் இருந்து வரும் நீரால் நிரப்பப்படுகிறது.
இத்திருக்குளம் கீழப்பேரூர், ஜெயசிம்ம நாட்டு இல்லத்து ஸ்ரீவீரராம வீரமார்த்தாண்ட குலசேகரப்பெருமாள் எனும் மன்னரால் ஆங்கில வருடம் 1471-ல் வைகாசி மாதம் 27-ம் நாள் வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, பூசம் நாளில் பணி முடித்து இந்த திருக்குளத்தை தாணுமாலய சாமிக்கு சமர்ப்பித்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
வீர மார்த்தாண்ட மன்னன் தன் மகனுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டி, தாணுநாதரிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியதற்கு காணிக்கையாக பிரக்ஞ தீர்த்தம் எனும் இத்திருக்குளத்தை தாணுநாதருக்கு அர்ப்பணிப்பு செய்ததாக செவி வழிச் செய்தி மூலம் அறிய முடிகிறது.
தெப்பத்திருவிழா அன்று தெப்பக்குளத்தின் கரைகள் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. மலர்களாலும், மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஊழி காலத்தில் உயிர்களை உய்விக்க வேண்டி தோணியில் வந்து உயிர்களை காத்தருளும் நம்பெருமான் தாணுநாதன், திருவேங்கடமுடையாரோடு எழுத்தருளி அருள் பாலிக்கிறார். கருணாமூர்த்தியான சிவனார், சீவன்களை பிறவி எனும் பெருங்கடலில் இருந்து உய்விக்க இத்திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி அருள் செய்கிறார்.
-மு.செல்லப்பன் எம்.ஏ., எம்.எட்.
ஆசிரியர் (ஓய்வு) சுசீந்திரம்.
- இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
- தெப்பத்திரு விழா நாளை நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வாகன வீதி உலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையடுத்து சாமியும், அம்பாளும் அம்மன் தேருக்கு எழுந்தருளினார்கள். அறம் வளர்த்த நாயகி அம்மன் இந்திரன் தேரிலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். இதை தொடர்ந்து அம்மன் தேரும் பின்னர் இந்திரன் தேரும் இழுத்துச் செல்லப்பட்டது.
தேரோட்டத்தை மேயர் மகேஷ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தில் பெண்கள், ஆண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டு தேர் மதியம் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி இன்று காலை முதலே சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருள செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு நடைபெற உள்ளது. தெப்ப திருவிழாவையொட்டி தெப்பகுளத்தின் நடுவில் உள்ள மண்டபம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
- நாளை நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறும்.
- 30-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை மாத தெப்ப திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
அதன்படி 7-ம் திருவிழா வான நேற்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திரு வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று 8-ம் திருவிழா ஆகும். அதன்படி இன்று காலை 5 மணிக்கு சிதம்ப ரேஷ்வரர் வீதியுலா வருதல் நடைபெற்றது. 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமாள், சிவாகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியூலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
9-ம் திருவிழாவான நாளை (29-ந்தேதி) காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகபடிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் திருவீதி யுலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா 30-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச்செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெற உள்ளது.
தெப்ப திருவிழாவையொட்டி தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின் விளக்குகளின் ஒளி பிம்பம் தெப்பக்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது.
- தாணுமாலயசாமி 4 ரத வீதிகளில் வீதி உலா வந்தார்.
- தாணுமாலயசாமி தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு வீதி உலா வந்தார்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. விழாவில் நேற்று அதிகாலையில் தாணுமாலயசாமி ரிஷப வாகனத்தில் தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு வீதி உலா வந்தார். இதற்காக சாமி கோவிலில் இருந்து வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தாணுமாலயசாமி 4 ரத வீதிகளில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவும் சாமிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அணிவிக்கப்பட்டு பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி சாமி கோவிலில் வெளியே இறங்கி மாடத்தெருவில் சுற்றி வரும்போது 10 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின்தடை ஏற்பட்டதும், போலீஸ் பாதுகாப்பு போடப்படாததும் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது
- 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 30-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. கோவிலில் உள்ள சித்திர சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 18 ஊர் பிடாகைகள், ஊர் தலைவர்கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண்மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணை தலைவர் சுப்பிரமணியபிள்ளை, கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், சுரேஷ், நடுத்தெரு ஊர்வகை அறக்கட்டளை ரவீந்திரன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு திருவிழாவுக்கான பத்திரிகைக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுபடி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்று விழாவையொட்டி காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு மேல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 6.15 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, இரவு வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர்வடம் தொட்டிலுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் என மூன்று தேர்கள் உலா வருகின்றன. தேரோட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தா வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் தெப்பம் 3 முறை வலம் வருகிறது. முதல் சுற்றினை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றினை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
- 21-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 30-ந் தேதி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அது போல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி காலை 9 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, போன்றவைகள் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான கால்நாட்டு விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. தாணுமாலய சாமி சன்னதியின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முகப்பில் பந்த கால் நடும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்