search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107371"

    நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு தி.நகரில் குடியிருந்த அரசு வீட்டை காலி செய்ய சொன்னதால் அவர் வேறு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நகர அபிவிருந்தி கழகம் மூலம் 1953-ல் வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சி.ஐ.டி. காலனியில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2004-05ல் இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், வீடுகளை இடித்து விட்டு ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்த வாரியம் முடிவு எடுத்தது.

    இந்நிலையில் நல்ல கண்ணுக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் தமது சொந்த செலவில் கான்கீரிட் பழுதுகளை சரி செய்தும், கதவு, ஜன்னல் மற்றும் தர ஓடுகள் ஆகியவற்றை மாற்றம் செய்து குடியிருந்து வந்தார்.


    வீடுகள் மிகவும் பழு தடைந்த நிலையில் இருப்பதால், 2011-ல் வீட்டு வசதி துறை அமைச்சரால் தமிழ் நாடு சட்டசபையில், 119 குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்புதாரர் அனைவருக்கும் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அரசிடமிருந்து திட்ட ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறும்வரை வீடுகளை காலி செய்யக் கூடாது என 2011-ல் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து 5-3-2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டு மீண்டும் குடியிருப்பதாரர்களுக்கு வீடுகளை காலி செய்ய 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை எதிர்த்து பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரணை செய்து 25.7.2014ல் ஐகோர்ட்டு 3 மாத காலக்கெடுவிற்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டு அதுவும் 2015-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து 27.4.2015ல் நிரந்தர உறுத்துகட்டளை ஆணை பெற்றனர்.

    மேற்கண்ட வழக்கு தொடர்ந்த நபர்கள் தவிர, மேலும் சிலர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 2016-ம் ஆண்டு வழக்குகள் தொடர்ந்தனர். அதனை 7.2.2017ல் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இதன் மீது தொடர்ந்த மேல் முறையீடு மனுவும் 5.2.2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கினையும்,நிலுவையில் இருந்த வழக்குகளையும் ஒருங்கிணைத்து 5.2.2019ல் சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்புதாரர்கள் வீடுகளை தாமாக முன்வந்து வாரியத்திடம் காலி செய்து ஒப்படைக்க தொடங்கினர். இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளனர்.

    நல்லகண்ணு 15.5.2019 அன்று வீட்டை ஒப்படைத்தார். கக்கன் குடும்பத்தினர் இதுவரை வீட்டினை ஒப்படைக்கவில்லை.

    சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு வாடகை அடிப்படையில் பொது ஒதுக்கீடு முறையில் வீடுகள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, புதிய கொள்கை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது.

    இக்கொள்கை இறுதி செய்யப்பட்ட உடன், நல்ல கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தார் உள்பட இது போன்ற பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படையில் வீடுகள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.

    நல்லகண்ணுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் கக்கன் குடும்பத்தினருக்கும் மாற்று வீடு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துணை முதல்-அமைச்சரும், நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து பொதுமக்களின் மனநிலை அவருக்கு புரிய வில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது என நல்லகண்ணு தெரிவித்தார். #nallakannu #edappadipalanisamy #election2018

    மதுரை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    5 மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். மக்கள் விரோத செயல்பாடுகளே பாரதீய ஜனதா தோல்விக்கு காரணம்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். பொதுமக்களின் மனநிலை அவருக்கு புரிய வில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து அங்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டினால் தமிழகம் பாலைவன மாகிவிடும். டெல்டா பகுதிகள் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #nallakannu #edappadipalanisamy #election2018

    ‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான நல்லகண்ணு கூறினார். #GajaCyclone #Nallakannu
    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘கஜா‘ புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள தென்னைமரம் உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. மக்கள் வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்துள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை 25 ஆண்டுகள் பின்னால் தள்ளிவிட்டது என்று தெரிவிக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு ஒரு சோதனையான காலம்.

    தமிழக முதல்-அமைச்சர் 5 நாட்களுக்கு பிறகு தான் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டுள்ளது. அது போதாது. மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதனால் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு குழு வந்துள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிடுகிறார்கள். இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். அந்த மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஆணவ கொலைகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், நிவாரண உதவியும் கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஆணவ கொலைகள் அதிகமாக இருக்கிறது என்று கூறினோம்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் அதெல்லாம் இல்லை என்று கூறினார். அவர்களுக்கு இப்போதாவது புரிய வேண்டும். எனவே தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு நல்லகண்ணு கூறினார். #GajaCyclone #Nallakannu
    விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கமல் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்கவில்லை என்று இந்திய கம்யூ. கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. #CauveryIssue #Nallakannu #kamalhaasan
    சென்னை:

    விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காவிரிக்காக தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கமல் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்க இருப்பதாக கமல் தெரிவித்தார்.

    இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19-ந்தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



    நேற்று முன்தினம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த நல்லகண்ணு தி.மு.க. தலைமையில் 9 அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பில் அவர் மாநாட்டில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #Nallakannu #kamalhaasan

    ×