என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்னம்பிக்கை"

    • பெண்கள் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டு வருகின்றனர்.
    • தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும்.

    வளர்ந்து வரும் நாடுகளில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர்.

    தாங்கள் நினைத்ததை, பிறரை சார்ந்து இல்லாமல் சரியான தருணத்தில் தாமாகவே செய்து கொள்ளும் தன்னிச்சையே சுயசார்பு. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்குக் கூட பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு. இது நம் முன்னேற்றத்தை முடக்கும்.

    இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம். இது மனதுக்கு புத்துணர்வு அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும். இப்பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த தன்னம்பிக்கை அவர்களின் சிறுசிறு மகிழ்ச்சிக்கும் சிறகுகளை அளித்து உயர பறக்க வழி வகுக்கும்.

    • வாழ்க்கையில் ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பலன் தரும்.
    • நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.

    1. நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

    2. மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம் `இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக `ஆம்' என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும்.

    3. தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்' என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.

    4. கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.

    5. இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    6. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.

    7. எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.

    • காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம்.
    • தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

    பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை மதிப்பீடு செய்யாதீர்கள். ஏன் என்றால் நீங்கள் ஆசிரியர் அல்ல. நீங்கள் பெற்றோர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். குறை சொல்லுதல் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டாம். அவர்கள் தானாக வளருவார்கள்.

    கடிகாரம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் நாட்கள் நகர்ந்துகொண்டு தான் இருக்கும். அதனால் காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம். இவ்வாறாக ஒரு பழமொழி சொல்வார்கள். `கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே'

    மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும், ஆயுளையும் கண்ணியமாக செய்து முடித்து விட வேண்டும். அப்போது வெற்றி தேடி வரும். இவை அனைத்தும் வரும் போது மிகுந்த நன்றி உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

    இந்த பிரபஞ்சம் மாணவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து விடும். அகிலம் என்னும் இந்த அண்டத்தில் மாணவர்கள் திறன் நிறைந்த மாணவர்களாக வளர மிகுந்த ஆற்றலும், அறிவும், ஞானமும், தொடர்ச்சியான, செய்முறையும், படித்தலும், எழுதுதலும், பேசுதலும், கேட்டலும், அனைத்து மொழித்திறன் களையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உடல் நலமும், சத்தான உணவு முறையும், நேர்மறையான சிந்தனையும், சமுதாயத்தின் மிகச் சிறந்த பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இயற்கை சூழலோடு இணைந்த பள்ளிக்கூடம், அதனோடு இயற்கை அன்னையை போன்ற அன்பான பாகுபாடின்றி அனைத்து மாணவர்களையும் தங்கள் பிள்ளைகள் போன்று அரவணைக்கும் அறிவும் ஞானமும் நிறைந்த ஆசிரியர்கள் உள்ளனர்.

    உள்ளத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் அறிவு பூர்வமாக சிறப்பாக விடை கண்டு உங்களிடம் மறைந்து கிடக்கும் திறன்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து கண்டறிந்து தனித்திறமை கொண்ட ஆசிரியர்கள் உதவியோடு வளர்க்க வேண்டும்.

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

    உயிரினும் ஓம்பப் படும்

    என்று பொது மறை நூலில் ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால் உயிரை விட சிறந்ததாக போற்றப்படும் என வள்ளுவர் சொல்கிறார்.

    முதல் ஒழுக்கத்தை கற்றுத் தருவது பள்ளிக்கூடம். இங்கு சிறப்பான, மேன்மையான, பண்பான ஒழுக்கத்தை காத்து கொள்ளுங்கள். அதனால் தான் உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    • தன்னம்பிக்கை, விழிப்புணர்வு், நல்லொழுக்கம், கல்வியையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் அபிநயா பாபு கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவியரிடையே எடுத்துரைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் தன்னம்பிக்கை, விழிப்புணர்வு், நல்லொழுக்கம், கல்வியையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் வரவேற்றார். ரோட்டரி மண்டலம் 25-ன் உதவி ஆளுநர் சிவக்குமார் மற்றும் சங்கத்தின் மருத்துவ சேர்மேனும், திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவருமான பாபு தலைமை தாங்கினா.

    சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் அபிநயா பாபு கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவியரிடையே எடுத்துரைத்தார்.

    • மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.
    • இதை கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    பிரபலமான தொழில் அதிபர் டாட்டாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவர் தான் பயன்படுத்தும் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனாக்களை வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

    அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

    பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.பேனா மறதியை பற்றி விசாரித்தார்.

    அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்...

    1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

    2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

    3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

    4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

    5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

    6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

    மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. இதை கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    • தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது.
    • தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள்.

    உழைப்பு, கல்வி, விளையாட்டு, வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விட முடியாது. அதற்கு விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம்.

    துவண்டு விட கூடாது

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிக கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்டது, அதில் இருந்து விடுபட என்ன வழி? என்று தான் ஆராய வேண்டும். மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமைபடுவதை காட்டிலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.

    ஏமாற்றம்

    எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

    தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    வெற்றி தேவதை

    எதிர்கால வெற்றியை இலக்காக வைத்து உழைத்தால் தோல்விகள் தோற்றுப்போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலையிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கல்வி, அனுபவம், அணுகுமுறை போன்ற காரணத்தாலும் தோல்வி ஏற்படலாம். எனவே உங்களிடம் உள்ள குறைகளை போக்கி வெற்றி வரும் வகையில் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.

    எதிர்கால திட்டம்

    தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.

    தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்று கொள்ள தயங்க வேண்டாம். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது அவசியம். தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

    ராஜேஸ்வரி, அரசு கலைக்கல்லூரி, மதுரை.

    • தலைமையேற்கும் பண்பு தற்போதைய பெண்களிடம் குறைவாக உள்ளது.
    • சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும், நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.

    இன்றைய பெண்கள் பலர் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர். ஆனால் தலைமையேற்கும் பண்பு தற்போதைய பெண்களிடம் குறைவாக உள்ளது. ஏனெனில் ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரே பொழுதில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது என்கிறார்கள் தனியார் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்.

    பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்:

    * தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும். மொழி அறிவும் இருக்க வேண்டும்.

    * தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

    * மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.

    * தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

    * ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

    * நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

    * நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

    * வழக்கமான செயல்களில் நிலைத்தன்மை இருக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

    • எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள்.
    • செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும்.

    வெற்றியை விரும்பாத மனிதரில்லை. எந்த ஒரு மனிதனாலும் தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பான். ஆனால் பலரும் அதற்கான வழிகளை தேடுவதில்லை. குறிக்கோள் பற்றி சொல்லும் போது குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்பாதை எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    எந்தவொரு மனிதனாக இருந்தாலும் முதலில் எதை பற்றியாவது சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் போது தான் நாம் எதையாவது அடைய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்படும். படிப்பில் மந்தமாக இருந்து பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தனியாக இருந்த நேரத்தில் பலமணி நேரம் கற்பனையில் சூழ்ந்து இருந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

    வாழ்க்கைக்கு ஓர் இலக்கு வேண்டும் என்பதை தீர்மானித்து வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. இவர் கருப்பின மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற ஒரே இலக்கோடு பேராடி வெற்றி கண்டார். நாமும் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் வாழ்க்கையில் ஓர் லட்சியத்தோடு பயணித்தால் எந்த தடைகளையும் தாண்டி வெற்றியை தட்டி செல்ல முடியும். லட்சியம் இல்லா வாழ்வு-துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

    வாழ்வின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி எத்தனை இடர்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை. பணமோ, வயதோ, படிப்போ,ஊனமோ எதுவும் வெற்றிக்கு தடையில்லை என நம்ப வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தை கைவிட வேண்டும்.

    நல்ல மதிப்பீடுகளை வளர்த்து கொள்வதும் ஒருவகையில் நம் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைவதுண்டு. நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளியில் தெரியும் வகையில் நாம் நல்ல மதிப்பீடுகளை கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கற்றுத்தருவதைவிட தம் ஆன்மாவை தீமைகள் எதுவும் அணுகாமல் தூய்மையாக வைத்திருப்பதும் ஒரு வகையில் வெற்றியின் ரகசியம்தான்.

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நாம் எடுத்த காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நினைக்கும் செயலில் வெற்றி காணும் வரை விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். சிலந்தி வரை பின்னுவது போல் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் கூட தங்களுடைய விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் சாதனை படைத்து கொண்டிருப்பதை நாம் தினந்தோறும் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்.

    உழைப்புக்கும் உயர்வுக்கும் இலக்கணம் என்றால் அது தாமஸ் ஆல்வா எடிசன் தான். உழைப்பில் தன்னை கரைத்து சமூகத்திற்கு பலவற்றை கண்டுபிடித்து கொடுத்தவர். முப்பத்தி எழு வயதில் தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராகவும், 1929-ல் அமெரிக்காவின் உயர்ந்த பத்து மனிதர்களின் முதல் மனிதராகவும் திகழ்ந்தார். இத்தகைய உழைப்பு நம்மிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    கற்களில் உள்ளிருக்கும் தீப்பொறி பாறையை வேகத்தோடு தரையில் தேய்ப்பதால் உண்டாகிறது. அதுபோல் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் மனிதனுக்குள்ளே இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி அவனை அழகுப்படுத்துகிறது. ஆர்வத்தோடு செய்யும் செயலே நம் வாழ்க்கையை மிகுந்த தைரியத்துடனும் மனவலிமையுடனும் நாம் எதிர்கொள்ள உதவும். எந்த செயலை தொடங்கும் போதும் மிகுந்த ஆர்வத்தோடு தொடங்குங்கள்.

    செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும். கற்றுக்கொள்வதை சுலபமாக்கும். போட்டியில் கலந்து கொள்வது என்பது பாதி வெற்றிக்கு சமம். எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள். தோல்வி போன்ற வார்த்தைகளே நினைத்து கூடப்பார்க்காதீர்கள்.

    இந்த உலகமே இந்தியர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நாம் தாம் நம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கொடுமை. எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள், நம்பிக்கையுமன் முடியுங்கள், நம்பிக்கை குணமாக்கும், நம்பிக்கை நம்மை செம்மைப்படுத்தும், நம்பிக்கை இப்பொழுதே வெற்றி தரும்.

    நீங்கள் மிகவும் திருப்தியடைந்த ஒரு நாளை பாருங்கள். நீங்கள் செயல் எதுவும் செய்யாமல் சுற்றி திரிந்த நாளாக அது இருக்காது. மாறாக நீங்கள் பல செயல்கள் செய்ய வேண்டியிருந்து அந்த செயல்கள் அனைத்தையும் திருப்தியுடன் செய்து முடித்திருந்த நாளாகவே அது அமைந்திருக்கும். முன்பு வானமே எல்லை என்று கூறுவார்கள். உண்மையில் வானம்கூட எல்லையில்லை.

    தேடலே வாழ்க்கை அந்த தேடலை மாணவர்களாகிய நாம் தாம் அதை தேடிக் கண்டு கொள்ள வேண்டும். ஆன்மிக வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் உட்கார்ந்து கண்களை மூடி உள்ளே தேட வேண்டும். ஒவ்வொரு செயலின் உள்ளேயும் வெற்றியின் விதை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகுந்த முனைப்புடன் உழைத்தால் இப்போதே வெற்றி சாத்தியமான ஒன்றுதான். விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த மனிதனாக இருந்தாலும் சரி ஆணோ, பெண்ணோ, எந்த வயதிலும் சாதனை புரிந்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

    வெற்றி என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடித்தளமாகும்

    விடா முயற்சியே வெற்றியை தரும்.

    • சேரன் மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி பள்ளி அரங்கில் பள்ளியின் தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் பி.எம்.கே பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக முன்னணி பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் கேட்கும் பொருட்களை உடனடியாக பெற்றோர்கள் வாங்கித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காலதாமதம் ஆகும் பட்சத்தில் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கின்றன. சிறிய ஏமாற்றங்கள் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே இதில் குழந்தைகளை நாம் வளர்க்கும் முறையை மாற்றி வளர்க்க வேண்டும் என்றார். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி தேவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் ராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி, குன்னம் சத்திரம் சேரன் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும்.
    • சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம்.

    வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம். அதற்கான திட்டமிடுதலும், அக்கறையும், முன்னேற்பாடும் அப்பப்பா! சாதாரணமாக மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு இவ்வளவு திட்டமிடல் என்றால் வாழ்க்கை பயணத்திற்கு?!

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் நாம் செய்யும் செயல்களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்! நாம் பேசுவதையும் செய்வதையும் நாமே கண்காணிக்கின்றோமா? அதாவது, சுயமதிப்பீடு செய் கிறோமா? என்றால் கேள்விக்குறியே?

    நம்முடைய செயல்களை நாம் ஒரு போதும் சுயமதிப்பீடு செய்வதில்லை. 'இன்று நாம் என்னென்ன காரியங்கள் செய்தோம்? அவை நல்லவையா? கெட்டவையா? நம் செயல்களால் யாருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டனவா? யாருக்கேனும் நன்மைகள் செய்தோமா? இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன? யாருடைய மனதையாவது புண்படுத்தினோமா? யாருடைய உரிமைகளையாவது பறித்தோமா?' -இப்படி ஒவ்வொரு நாளும் சுய மதிப்பீடு செய்யும் வழக்கம் இருந்தால், நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும்.

    வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியம் நம் தனிப்பட்ட உடல் நலம் மற்றும் நம் வேலைக்கான இலக்கினை அடைவதற்கான வழி. நம்முடைய பிரார்த்தனைகள் கூட உண்மையான நம்மைக் காண்பிப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களே நாம் யார் என்பதைச் சொல்லி விடுகின்றன.

    நமது வாழ்க்கைப் பயணத்தில் புதிதாய் பிறப்பது என்பது மிக அவசியம். புதிதாய் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும். பிறப்பது என்பது வெறும் நிகழ்வு அல்ல. அது ஒரு புதிய பரிணாமம் ஆகும். இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.

    இன்று புதிதாகப் பிறப்போம் என்று சொன்னால், இதுவரை இருந்த பழையவற்றை எல்லாம் கழற்றி எறிந்து விட்டு புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது என்று அர்த்தம். புதிதாகப் பிறக்கின்ற போது "தான்" என்கின்ற தன்மை அழிந்து போகின்றது. புதிய உலகம் , புதிய வானம் , புதிய காற்று , புதிய செயல்கள், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப்படுத்திக் கொள்பவர்கள் முதுமை அடைவதே இல்லை .

    லட்சியம் மிகுந்த எல்லாமே இளமை ததும்பும் அழகோடு மிளிர்கின்றன. நாம் நம் வாழ்க்கையிலும் தனித்தன்மையிலும் முழுமையை என்றும் நாட வேண்டும், அது நெஞ்சை விட்டு நீங்காத கொள்கையாக இருக்க வேண்டும். தனக்கு எந்த வகையிலும் கடவுள் குறை வைக்கவில்லை என்பதை உணர வேண்டும், கடவுளோடு நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர் நமக்கு அளித்திராத பரிசுகளே இல்லை என்கின்ற எண்ணப் போக்கே நாளடைவில் நம்முடைய வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    வாழ்க்கையில் எல்லோருக்குமான தேவைகளும் ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் உறவுகளின் மேம்பாடு இவைகள்தான் எல்லோருக்குமான அடிப்படை தேவைகள்.

    தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும். 'நமக்கு நோய் வந்து விட்டதே, நம்மால் இனி எதுவும் செய்ய முடியாதே!' என மனந்தளரக் கூடாது. 'நமக்கு நோயே இல்லை. எந்த நோயாலும் நம்மை வெல்லமுடியாது!' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். மனதில் நம்பிக்கைகொள்ளும் இந்த எண்ணத்தில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம் கண்முன்னே மாற்றம் ஏற்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    நமது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நம்மை நாமே நோய்க்கு அடிமையாக்கிக்கொண்டு, அடிமை வாழ்க்கை வாழக்கூடாது. நோய் என்ற கூண்டிற்குள் நம்மைநாமே சிக்கவைக்கக்கூடாது. உடலை நன்றாக வைத்திருப்பது நமது அடிப்படை உரிமை. உடலை நன்றாக வைத்திருப்பது என்பது அழகாக தோன்றுவதிலோ, மற்றவர்கள் முன்னால் பகட்டாய் தோன்றுவதிலோ இல்லை. ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் உடல் ஒரு தடைக் கல்லாய் இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், வாழ்க்கை சுமையாகிவிடும்.

    சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம். இது இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பற்பல கவலைகளிலிருந்து நாம் எளிதாக விடுபட்டுவிடலாம். சுய நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைகளிலே உழல்கிறார்கள். சுய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவு துணை செய்யும். ஆற்றல் துணை நிற்கும். வாழ்க்கை இன்பமயமானது. அதை ரசிக்காமல், நேசித்து வாழாமல் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி? 'என்று நொந்து துன்பமயமாக்கிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் தோல்வியை வம்பாக விலைக்கு வாங்குகின்றோம்.

    நாம் சாதனைகள்புரிய சுதந்திரம் மிக அவசியம். பயம், பதற்றம், கவலை அல்லது நிச்சயமற்ற நிலை போன்றவை ஒருவரை இயல்பான திறனோடு பணியாற்றவிடாது. மூளையின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் மிகவும் அவசியம்.

    எப்போதுமே நம்மிடம் சுய மனத்தடைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . 'நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய இயலாது', 'நம் தலையெழுத்து இதுதான்', 'வேறு வழியில்லை, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்' என்பன போன்ற சுய மனத்தடைகள் நம்மை வாழ்க்கைப் பயணத்தில் தோற்கடித்துவிடும். அதனால் அந்த தடைகளை தகர்த்திடுவது மிக அவசியம்.

    முந்தைய தவறுகளின் தாக்கம் நமக்கு மட்டுமே சொந்தமானது. நடந்துமுடிந்துவிட்ட அந்த தவறை பெரிதாக்கி, 'தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை. தான் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது' என்று நினைத்துக்கொண்டு, அடுத்த அடி எடுத்துவைக்க தயங்கிவிடக்கூடாது.

    உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாகுவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

    நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடை- பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நாம் வருத்தப்பட வேண்டாம். அவர்களது மனதின் தரம் அவர்களைப் பொறுத்தது. நம் மனதின் தரத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருத்தப்பட்டால் நமது மனநலன் சீர்கெட்டுப்போகும். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நாம் நினைக்கும் பொழுது, அதனை செய்துவிட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. பெரும்பாலும் நமக்கான தொல்லைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நம் சொந்த வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் போதும் வாழ்க்கை இன்பமயம் தான்.

    நம் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப அமையவேண்டும், அது உறவாகட்டும், தொழிலாகட்டும்..! நம் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் நம் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பைத்தியம் போல் இருந்தாலும் அதையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு நம் புரிதலின் தன்மை உயர வேண்டும்.

    நம்மை சார்ந்த அனைவரையும் நாம் புரிந்துெகாள்ளவேண்டும். அந்த பக்குவத்தை மூலதனமாக்கிக்கொண்டு நமக்காக மகிழ்ச்சியாக வாழவேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.

    வாழ்க்கை ஒரு ஜாலியான பயணம். அதற்கு கவலை போன்ற வேலிகளை போடவேண்டாம்!

    கட்டுரை:

    ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    சமூக ஆர்வலர்,

    மதுரை.

    • குழந்தையுடன் உரையாடலில் ஈடுபடும் போது சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
    • குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும்.

    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

    * அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.

    * அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

    * அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    * குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

    * ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    * நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

    * இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

    • தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர்.
    • தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும்.

    'சிவப்பழகுதான் அனைவரையும் ஈர்க்கும். கருப்பாக இருப்பது அழகு அல்ல' என்று சருமத்தின் நிறத்தை தங்களின் அடையாளமாக எண்ணி, தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெண்கள் பலர் உள்ளனர். தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அங்கு இருப்பவர்களின் சரும நிறமும் வேறுபடுகிறது.

    நமது நாடு வெப்பம் நிறைந்தது என்பதால், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதாகவே நம்முடைய நிறம் அமைந்துள்ளது. தனது ஆளுமையை உயர்த்திக் காட்ட நினைக்கும் பெண்களில் பலர், தங்களின் திறமையை முழுமையாக வெளிக்கொணர முடியாமல் போவதற்கு நிறம் ஒரு தடையாக உள்ளது என்று நினைக்கின்றனர். அவ்வாறு கருதுவதால் அவர்களை அறியாமலே தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது. அதுவே அவர்கள் நினைத்த இலக்கை எட்ட முடியாதவாறு தடுத்துவிடுகிறது.

    அதிகமான நிறங்களை வகைப்படுத்துவதில் ஆண்களை விட, பெண்கள் சிறந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் பல வண்ணங்களில் ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கூட, 'தன் நிறம் கருப்பு, அதனால் இந்த நிறம் பொருந்தாது, அந்த நிறம் பொருந்தாது' என்று தானாகவே ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நிறங்களையே மீண்டும் தேர்ந்தெடுத்து அணிகிறோம். இது பல இடங்களில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

    தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும். நம் தோற்றம், நம்மை விட மற்றவருக்கு 20 சதவீதம் கூடுதல் அழகாகத் தெரியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

    அழகான தோற்றத்துக்கான ஆலோசனைகள்:

    1. நிறத்திற்கு தகுந்த ஆடை அணிவதைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த நாகரிகமான ஆடையை அணிய பழகுங்கள். அவ்வாறு அணியும்போது உங்களை அறியாமலே மகிழ்ச்சி கூடும். அது தானாகவே உங்கள் முகத்தில் புன்முறுவலையும், மனதில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்தும் பாராட்டு பெறுவீர்கள்.

    2. அதிகமான அலங்காரத்தை தவிர்த்து, எளிய முறையில், அணியும் ஆடைக்குப் பொருந்தும் வகையில் அணிகலன்களை தேர்வு செய்யுங்கள். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்காது, உங்களுக்கும் அசவுகரியம் ஏற்படாது.

    3. எப்பொழுதும் புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். புன்னகையே பல சமயம் சிறந்த அலங்காரமாகும்.

    4. நிறத்தை பற்றிய கவலையை விடுத்து, உங்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை முழுமையாக வளர்த்து, தன்னம்பிக்கையுடன் மற்றவர்களிடம் பழகத் தொடங்குங்கள்.

    5. தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. உங்கள் நிறத்தைப் பற்றிய விமர்சனத்தை யாராவது முன் வைக்க நேர்ந்தால், சற்றும் தளராமல் 'அது ஒரு குறை அல்ல' என்று ஆணித்தரமாக உணர்த்துங்கள். நாளடைவில் உங்களை விமர்சித்த கூட்டம் குறைந்து, உங்களை முன்மாதிரியாக பின்பற்றும் நண்பர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    ×