search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110370"

    எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. #NewBankNote #Rs20BankNote #RBIboard

    சென்னை:

    தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

    அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது.

    தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது.


    ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். #NewBankNote #Rs20BankNote #RBIboard

    வீட்டு கடன் தொகையை முன்னதாகவே செலுத்தி கடனை தீர்க்க நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கும் சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
    வீட்டுக்கடன் என்பது பலருக்கும் வாழ்நாள் திட்டமாக அமைகிறது. சொந்த வீட்டு கனவு நிறைவேறினாலும், வட்டி மற்றும் முதல் ஆகிய இரண்டும் இணைந்த மாதாந்திர தவணைகள் காலப்போகில் சுமையாக மாறுவதை பலரும் உணர்ந்துள்ளனர். வீட்டு கடன் தொகையை முன்னதாகவே செலுத்தி கடனை தீர்க்க நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கும் சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.

    வீட்டு கடன் பெறுவதற்கு முன்னர் வெவ்வேறு வங்கிகள் அளிக்கும் கடன் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும். முன்னதாகவே, கடன் பெற்றிருந்தாலும், மற்ற வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து அவசியம் என்றால் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ மூலம் மீதம் உள்ள கடன் தொகையை மாற்றிக்கொள்ளலாம்.

    வங்கிகள் 15 முதல் 20 சதவிகித தொகையை டவுன் பேமென்ட் என்ற நிலையில் செலுத்த வங்கிகள் வலியுறுத்துகின்றன. மீதமுள்ள தொகை வீட்டு கடனாக வழங்கப்படும். டவுன் பேமெண்டை முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதலாக தொகையை இவ்வாறு செலுத்தலாம். இதன் மூலம் நீண்ட கால நோக்கில் வட்டியின் சுமை குறைவதுடன், இன்னொரு கடன் பெறுவதற்கான தகுதி அதிகமாகும்.

    வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன், கடன் பெறுபவரது கிரெடிட் ஸ்கோரை கவனிக்கின்றன. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், கடனுக்கான வட்டி விகிதம் சாதகமாக அமையும். எனவே, கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது நல்லது. அதன் அடிப்படையில், வங்கிகள் தற்போது கணக்கிடும் வட்டி விகிதம் குறித்து, அதிகாரிகளிடம் பேசி வட்டி விகிதத்தில் அல்லது செயல்பாட்டு கட்டணத்தில் சலுகை கேட்கலாம்.

    கடன் பெற்று மாதாந்திர தவணையை செலுத்த துவங்கிய நிலையில், ஏதேனும் பண வரவுகள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்போது கூடுதலாக பணத்தை செலுத்தி தொகையை செலுத்தி அசல் தொகையை குறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம், அசல் தொகை குறைந்து கொண்டே வந்து, கடன் விரைவில் செலுத்தி முடிக்கப்படும்.
    முத்துப்பேட்டை அருகே வங்கி முன்பு நூதன முறையில் விவசாயிடம் ரூ.1¼ லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பெத்தவேலன் கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 48). விவசாயி.

    இவர் நேற்று மதியம் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு தனது 8 பவுன் தங்க நகையை அடமானமாக வைத்து ரூ.1லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் போட்டு வங்கி முன்பு நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் சந்திரமோகனிடம், கீழே கிடந்த 10, 20ரூபாய்களை காட்டி உங்களது பணமா? என்று பாருங்கள் என்றனர்.

    இதை நம்பிய சந்திரமோகன் தனது பணம் தான் என்று நினைத்து பணத்தை எடுத்து கொண்டார். அந்த சமயத்தை பயன்படுத்தி 2 வாலிபர்களும், ரூ.1¼ லட்சம் பணப்பையை நைசாக எடுத்து கொண்டனர். பிறகு அந்த வாலிபர்கள் அங்கிருந்து நழுவி சென்று விட்டனர்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட சந்திரமோகன், பணப்பையை காணாதது கண்டு திடுக்கிட்டார். 2 வாலிபர்களும், நூதன முறையில் தன்னை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்தது அவருக்கு தெரியவந்தது.

    இது குறித்து அவர் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை நகரில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படுவது இல்லை. இதை பயன்படுத்தி தான் தற்போது முத்துப்பேட்டை பகுதியில் தொடர் கொள்ளை நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகாமல் முடங்கியது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது. #BankStrike #Strike
    சென்னை:

    வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறைகளில் தனியார்மயத்தையும், அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.



    சென்னை அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பெரும்பாலான மக்களை சார்ந்து அரசு செயல்பட வேண்டும். ஆனால் முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே இந்திய வருமானத்தில் 73 சதவீதம் மூலதனம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 50 கோடி தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

    அனைவருக்கும் ஓய்வூதியம், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, பொதுத்துறையை வளர்ப்பது போன்ற செயல்களை விடுத்து, மத்திய அரசு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த கொள்கைகளை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    45 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பண பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், அரசு கருவூல கணக்குகள் செயல்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி கணக்குகள் போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் காசோலைகள் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுசெயலாளர் சி.பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் செயல்பட்டன.
    ரூ. 65 கோடி கடன் தொகை செலுத்தாததால் 25 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    பல்லடம்:

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, மதுரை, ராஜபாளையம், அருப்புக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5.75 லட்சம் விசைத்தறி உள்ளது.

    இதனால் 11 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய விசைத்தறிகளை விசைத்தறியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வங்கிகளில் கடன் பெற்று நடத்தி வருகிறார்கள்.

    விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வழங்கும் பாவு நூலை கொண்டு துணியாக உற்பத்தி செய்து கொடுத்து அதற்கு மீட்டர் கணக்கில் கூலி பெற்று வருகின்றனர்.

    வருவாய் இழப்பு, மின் கட்டண செலவு அதிகரிப்பு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட நிர்வாக செலவுகளால் விசைத்தறியாளர்கள் கடந்த 4 ஆண்டாக நஷ்டமடைந்து வந்தனர்.

    நூற்றுக்கணக்கானோர் கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை விற்பனை செய்து கடனை அடைத்து உள்ளனர்.

    கடன் தொகை செலுத்தாததால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு வங்கிகள் சீல் வைத்துள்ளது. இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கடன் தொகை ரூ. 65 கோடி வராக்கடனாக உள்ளது.

    இதனால் 25 ஆயிரம் விசைத்தறிகளை சீல் வைக்க போவதாக வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இது தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்பு குட்டி என்கிற பால சுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது-

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளது. பனியன் தொழிலுக்கு பின் விசைத்தறி தான் முக்கிய தொழிலாக உள்ளது. கோவை மாவட்டத்தில் சோமனூரிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்திலும் ஏராளமான விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

    இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது. நூல் விலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    3 வருடத்திற்கு ஒரு முறை கூலி உயர்வு காரணமாக உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தபடி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்கவில்லை.

    ஒரு சில உற்பத்தியாளர்கள் தான் கொஞ்சம், கொஞ்சமாக வழங்கி வருகிறார்கள். தற்போது விசைத்தறி தொழிலும் சரியில்லை. இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர்.

    இதற்காக வங்கிகள் ஜப்தி நோட்டீஸ் வழங்கி உள்ளது. விசைத்தறியை விற்று தான் கடனை செலுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது நவீன உற்பத்திக்கு மாறி விட்டதால் பழைய விசைத்தறிகளை அடிமாட்டு விலைக்கு தான் விற்க வேண்டிய நிலை உள்ளது.

    வங்கி கடன் தொடர்பாக ஒரு சில விசைத்தறியாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ. 65 கோடியை அரசே மானியமாக வழங்கி விசைத்தறியாளர்களையும், விசைத்தறி தொழிலையும் காப்பாற்ற வேண்டும்.

    இது தொடர்பாக சென்னையில் கைத்தறி துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக இன்று சென்னையில் முகாமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews
    ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #ATMCardChip
    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.

    ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல் உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை.

    குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

    எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ATMCardChip
    பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் வாராக்கடன் தேங்கி கிடக்கிறது. இந்த கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் நேற்று பதிலளித்தார். அந்த பதிலில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த தவறின் அடிப்படையில் மேற்படி அதிகாரிகளுக்கு குறைந்த அபராதம் முதல் பெரிய அளவிலான அபராதம் வரை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அருண் ஜெட்லி, வாராக்கடன் தொகை அடிப்படையில் அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை முதல் சி.பி.ஐ.யில் புகார் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பதவி இறக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CentralGovernment #AadharCard
    புதுடெல்லி:

    ஆதார் எண்கள் முக்கிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக ஆதார் அட்டையில் பதிவாகி உள்ள ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியில் கசிவதாக பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவித்தது.

    மேலும் ஆதார் அட்டைகளை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

    என்றாலும் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து செல்போன் சேவை, வங்கி கணக்குகள் தொடங்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்காக நேற்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



    மேலும் விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அனைத்தும் விரைவில் சட்டதிருத்தமாக கொண்டுவரப்பட உள்ளன.

    மேலும் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #CentralGovernment #AadharCard
    மிக அதிசயமாக 2 பேரின் பெயர், பெற்றோர்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியும் ஒன்றாக இருப்பதால், ஒரே எண்ணில் இருவருக்கும் பான்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கடன் வாங்க சென்ற போது தான் குளறுபடி வெளிவந்துள்ளது. #PANCard
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் சிவகங்கை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வருமான வரித்துறை மூலம் பான் கார்டு பெற்றுள்ளார். அதன் எண் CCOPS0932F. இந்த எண்ணையே தனது வங்கி கணக்குகளுடன் இணைத்து உள்ளார்.

    இந்த நிலையில் சேகர், வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு அங்குள்ள வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த வங்கி மேலாளர், “பல இடங்களில் நீங்கள் கடன் வாங்கி நிலுவை வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது” என மறுத்துவிட்டார். ஆனால் சேகர், “நான் எங்கும் இதுவரை கடன் வாங்க வில்லை” என்று மறுத்துள்ளார்.

    உடனே வங்கி மேலாளர், அதற்கு ஆதாரமாக சிபில் (ஒருவரின் கடன் பற்றிய தகவல்கள்) அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சேகர் காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பதாக தகவல் இருந்தது. உடனே சேகர், ஏனாத்தூரில் உள்ள வங்கிக்கு நேரிடையாக சென்று மேலாளரிடம், “நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் உங்களது வங்கியில் எப்படி கடன் நிலுவை உள்ளது” என்று கேட்டு உள்ளார்.

    அதன் அடிப்படையில் வங்கி மேலாளர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அப்போது அந்த வங்கியில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பது ஏனாத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சேகர் என்ற காண்டிராக்டர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வங்கிக்கு வழங்கிய பான்கார்டு எண்ணும், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் பான்கார்டு நம்பரும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் ஒரே எண்ணில் பான்கார்டு இருந்ததால் தான் காண்டிராக்டர் சேகர் வாங்கிய கடன், சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் எதிரொலித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஒரே எண்ணில் இருவருக்கும் எப்படி பான்கார்டு வழங்கப்பட்டது என்பது குறித்து நடந்த மேல் விசாரணையில் பல அதிசயங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது காண்டிராக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரின் பெயரும் சேகர் என்பது தான். அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்கள் பிறந்த தேதி 17-05-1966. அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர் பெயரும் ஒன்றே. இருவரின் தந்தை பெயரும் சுப்பிரமணியன். தாய் பெயர் சரோஜா.

    இந்த காரணங்களால் தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமான வரித்துறை பான்கார்டு வழங்கி உள்ளது. இந்த குளறுபடி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக அவர் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்த மனுவும் நிலுவையில் உள்ளது. #PANCard
    கோபி அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற முதியவரிடம் ரூ.2.90 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கட்டிக்கல் மேட்டை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 70).

    காளியண்ணன் நேற்று நம்பியூர் சென்றார். அங்கு பாங்கியில் ரூ.3 லட்சம் எடுத்தார். பிறகு தன் மருமகளுக்கு 10 ஆயிரம் கொடுத்தார். பிறகு ரூ.2.90 லட்சத்தை வைத்துக் கொண்டு தனது ஊருக்கு பஸ்சில் புறப்பட்டார்.

    பஸ்சை விட்டு இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். வண்டியை ஓட்டியவன் தலையில் ஹெல்மட் அணிந்திருந்தான்.

    காளியண்ணன் தனது வீட்டின் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவன் காளியண்ணன் கையில் இருந்த ரூ.2.90 லட்சத்தை பறித்தான். பிறகு இருவரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதை கண்ட அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தார்கள். எனினும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    இந்த துணிகர சம்பவம் தொடர்பாக காளியண்ணன் நேற்று இரவு 10:30 மணியளவில் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya

    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.

    கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது.

    விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பி‌ஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பி‌ஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.

     


    நஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.

    மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது.

    ஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.

    என்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை 100 சதவீதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.

    விஜய் மல்லையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.

    நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதேபோன்று மல்லையா, நிரவ்மோடி மற்றும் மெகுல் ஜோக்கி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya

    போளூரில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஸ் நிலையம் அருகே உள்ள பஜார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டிஎம். வழியாக தான் நகை கடை, ஜவுளி கடைகளுக்கு செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ஏ.டி.எம். எந்திரத்தினை உடைக்க முயன்றார். அதற்குள் ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ஏ.டி.எம். மையத்தில் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்ட பொதுமக்கள் போளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்து வாலிபர் யார்? எதற்காக ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்தார். திருடும் நோக்கில் வந்தாரா? அல்லது குடிபோதையில் உடைத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி கிடையாது.

    ×