என் மலர்
நீங்கள் தேடியது "slug 117680"
ஆத்தூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் பட்டுவாடா செய்யாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்காக சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மற்றும் சந்தேக இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சேலத்தை நோக்கி வேன் ஒன்று வந்தது. இந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் வேனுக்குள் 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என அதிகாரிகள் விசாரித்தனர்.
அதற்கு அவர்கள், தாங்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலமாக வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துக் கொண்டு சேலத்தில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக வருகிறோம் என தெரிவித்தனர். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளிக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என கூறினர்.
இதனால் தேர்தல் பறக்கும் படை 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சத்து, 54 ஆயிரத்து 648 ஆகும்.
இது குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் உதவி அலுவலருமான அபுல்காசிமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரிடம் தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
பின்னர் கோட்டாட்சியர் அபுல் காசிம் , பார்வையிட்டு ஆய்வு செய்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருந்ததால் தங்கம்-வெள்ளி ஆகியவற்றை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வில்லை.
இது குறித்து கோட்டாட்சியர் அபுல்காசிம் சேலம் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தங்கம்- வெள்ளி ஆகியவற்றுக்கு உரிய வருமானவரி செலுத்தி இருக்கவில்லை என்றால் அதனை பறிமுதல் செய்து விடுவார்கள் என பறக்கும் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #LSPolls
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி, சீவல்சரகு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்கியது முதல் தண்ணீர் தேவை மேலும் அதிகரிப்பால் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களை வரிசையில் வைத்து தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடித்து அதனை குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினையால் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி சாலை மறியல் போராட்டங்களும் யூனியன் அலுவலக அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிடும் போராட்டமும் நடந்து வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தாலும் குறைந்த அளவு தண்ணீரே மேல்நிலை தொட்டியில் சேமிக்க முடிகிறது. அந்த தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் தண்ணீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதால் பல கிராமங்களை கண்டு கொள்ளாமல் அரசியல் கட்சியினர் வந்து விடுகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
நள்ளிரவு 12.10 மணியளவில் கும்பகோணத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல்லா (வயது 23) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.91 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி உதவி தேர்தல் அலுவலர் முருகையனிடம் ஒப்படைத்தனர். #ParliamentElection
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை கிரேன் பஜார் பகுதியில் பெருமாள் அன் கோ என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை பெருமாள் என்பவர் நிர்வாகித்து வருகிறார்.
இவர் இன்று காலை அலுவலக வேலை காரணமாக வெளியே சென்றார். அலுவலகத்தில் மேலாளர் சேக் தாவூத் என்பவர் இருந்தார்.
இன்று காலை சுமார் 11 மணியளவில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தை துனியால் மூடியிருந்தனர். அவர்கள் சேக் தாவூத்திடம் நாங்கள் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் இருந்து வருவதாகவும், கிழங்கு கொள்முதல் சம்பந்தமாக பேச வந்தோம் என்றும் கூறினார்கள்.
ஆனால் அவர்கள் மேல் சேக் தாவூத்துக்கு சந்தேகம் வந்தது. திடீரென அதில் ஒருவன் சேக் தாவூத்தை பிடித்து கயிற்றால் கட்டி மேஜையின் சாவியை கேட்டு மிரட்டினர். மேலும் சாவியை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று கூறி மிரட்டினார்கள். சேக் தாவூத் மேஜை சாவி தன்னிடம் இல்லை என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் மேஜையை உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அங்கிருந்த செல்போனையும் எடுத்து சென்றனர். இதையடுத்து சேக் தாவூத் மர்ம ஆசாமி கையில் கையில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததை பற்றி கூறினார்.
மேலும் உரிமையாளர் பெருமாளுக்கும் தகவல் கொடுத்தார். உடனே அங்க வந்த பெருமாள் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் போல் வந்து இந்த முகமூடி கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியில் வசித்து வந்தவர் உதயசூரியன் (வயது 52). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். இவர் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். உதயசூரியன் கீரிப் பட்டியில் தங்கி மொபட்டில் பணிக்கு சென்று வருவார்.
இந்த நிலையில் நேற்று அவர் பணி முடிந்து மொபட்டில் கீரிபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊத்துமேடு பகுதியில் வந்த போது வண்டியில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லியகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்து மல்லியக்கரை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பில் கலெக்டர் உதயசூரியனை யாராவது கொலை செய்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பில் கலெக்டர் மொபட்டில் தொங்கிய நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பானது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு பெரியசாமி (வயது 15), கருப்பசாமி (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கருப்பசாமி அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கருப்பசாமி புத்தகப் பைகளை வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கருப்பசாமி தனது தாயார் இந்திராவின் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இது தொடர்பாக ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து மாணவர் கருப்பசாமி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டை சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜசேகர் (வயது25). தச்சு தொழிலாளி. இவருக்கும் திருப்பூரை சேர்ந்த உமாமகேஸ்வரிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு மாத்திற்குள்ளேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களாக மனைவி உமாமகேஸ்வரி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக மனமுடைந்த புதுமாப்பிள்ளை ராஜசேகர் மிகுந்த வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜசேகர் மிகுந்த வேதனையுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆத்தூர்:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பாலம் வேலை செய்வதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியிலிருந்து ஞானசேகர், முனுசாமி, தினேஷ் குமார், தமிழ்செல்வன், மற்றொரு தமிழ்ச் செல்வன், விஜயகுமார், டேனியல், ஆசைத்தம்பி, பாரதி, பிரகாஷ், மணி, ராம்குமார், முத்துராஜ் ஆகிய 13 பேர் இன்று காலை ஒரு பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தனர்.
வேன் ஆத்தூர் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த வேனை டிரைவர் கண்மணி (வயது 25) என்பவர் ஓட்டினார். அப்போது ஆத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்த அத்தியப்பன் கவுண்டர் என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.
தென்னங்குடி பாளையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் கண்மணியால் வேனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேன் வேகமாக சென்று சாலை ஓரமாக உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் வந்த அத்தியப்பன் கவுண்டர் பலியானார். வேனில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர். இதில் முத்துராஜ் (வயது 30) என்பவருக்கு பலத்த அடிப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீதமுள்ள 12 பேரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலியான முத்துராஜ் பூலாம்பட்டி அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சோகத்துடன் திரண்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்குவருகிறது.
இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது.
தற்போது பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5½ அடியாக காணப்பட்டது. இதனால் அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன் (வயது 22). இவர் பேஸ்புக் மூலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஒரு பெண்ணிடம் பழகினார். பின்னர் பேஸ்புக் மேசஞ்சர் மூலம் அவரிடம் இருந்து நைசாக செல்போன் எண்ணை வாங்கினார்.
இதையடுத்து ராஜேஸ் கண்ணன் செல்போன் எண்ணை தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்- அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி நட்பை ஏற்படுத்தினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்தனர்.
அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை ராஜேஸ் கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ் கண்ணனிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர், திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து கதறினார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
தன்னை காதலித்து ஏமாற்றிய ராஜேஸ்கண்ணன் மீது அவர் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 45). இவருடைய மனைவி விஜயலட்சுமி(38). இவர்களது மகன் மணிகண்டன்(6)
இவர்களும், இவர்களது உறவினர்கள் சங்கவி(21), வினோதினி(29), ஸ்ரீராம்(8), குமாரி(55), பிரியதர்ஷினி (18) ஆகியோரும் ஒரு காரில் கல்லூரி அட்மிஷன் தொடர்பாக கோவைக்கு சென்று விட்டு நேற்று இரவு அவர்கள் அதே காரில் சேலம் வழியாக ஊருக்கு திரும்பினர். காரை பரணிதரன் ஓட்டினார்.
அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் கார் வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
காரில் இருந்த பரணிதரன், சங்கவி, வினோதினி, பிரியதர்ஷினி, ஸ்ரீராம், குமாரி ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்ட அவர்கள் வலியால் கதறி துடித்தனர். தங்களை காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு கதறி அழுதனர்.
விபத்தை பார்த்த பொதுமக்கள் காருக்குள் இருந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து பற்றி குறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார் விரைந்து வந்து பலியான விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், விபத்து நடந்த ஏரிக்கரை பகுதியில் மின் விளக்குகள் இல்லை. வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்ததால் லாரி சாலையில் நிறுத்தி இருந்தது தெரியாமல் கார் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் மோதியது தெரியவந்தது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரிக்கரை பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 6 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு அவர்களுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 48). லாரி டிரைவர். இவரும், இவரது உறவினர் பூமாலையும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு கல்பகனூரில் இருந்து பெத்தநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் செந்தமிழ் செல்வன், பூமாலை ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செந்தமிழ் செல்வன் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பூமாலை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews